Wednesday, 20 September 2017

ஜமுனா:18

ஜமுனா:18
டப்பென்று கர்ண கடூரமாகப் பெட்டி மூடிய மாதிரி ஓர் ஓசை. உடனே ணிங்ங்ங் கென்று ஒரு ஸ்பிரிங் விரிந்து அதிர்ந்த ஒலி. அதைத் தொடர்ந்து பரபரவென்று பிறாண்டியவாறு ஒரு ஜந்துவின் பதைப்பு.
மோனிகா மில்லர் கொடுத்த கடிதத்தை வாசித்துக் கொண்டிருந்த ரங்கையர் நிறுத்தி விட்டுச் சுற்றுமுற்றும் பார்த்தார்.
டப்பென்ற ஓசையைக் கேட்டதும் திடுக்கிட்டுத் துள்ளி விழுந்த குழந்தை யோகி, அந்த அசாதாரண ஓசையால் பயந்து போய் வீறிட்டு அழத் தொடங்கி விட்டான். நின்று கொண்டிருந்த மோனிகா மில்லர் குனிந்து குழந்தையைத் தூக்கினாள். அதிர்ச்சியில் ஓரிரு நொடிக்குள் அவன் கீழே போட்டிருந்த சுத்தமான வெள்ளைத் துணியை நனைத்து விட்டிருப்பது தெரிந்தது. குழந்தைக்குப் போட்டிருந்த ஜட்டியும் நனைந்து விட்டது.
“கீலே போய் துணி மாத்தி கொண்டு வர்றேன்” என்று சொன்னான் மோனிகா.
ராகவன் அவளைத் தமிழில் பேச வைக்கிற முயற்சியில் சுமாராக வெற்றி பெற்றிருந்தான். அமெரிக்க உச்சரிப்பின் விரைவைத் தவிர்த்து அவள் பேசும் போது யோசித்து, பேச வேண்டியதை மனசிற்குள் ஒருமுறை சொல்லிக் கொள்வது போல் தென்பட்டது.
யோகியைத் துணியோடு தூக்கிக் கொண்டு மோனிகா வெளியேறினாள்.
அவள் வெளியேறியதும் பிறாண்டும் ஓசை பலத்தது. பதைப்புடன் கூரிய நகங்கள் இரும்புத் தகடுகளைக் கீறுவது போல் ணிணிங் ணிங்கென்று ஓசை சுத்தமாகக் கேட்டது.
ரங்கையர் கடிதத்தோடு எழுந்து சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு கட்டிலுக்குக் கீழே குனிந்து பார்த்தார். கட்டிலின் கீழே எலிப்பொறி.
பின் பக்கம் திரும்பியிருந்த எலிப் பொறி ஒன்றின் மேலே அடித்திருந்த தகரச் சட்டங்களில் மூக்கை நுழைத்துக் கொண்டு மூக்கின் சதை விரியத் துடிக்கும் எலியின் முகம் தெரிந்தது. ரங்கையர் குனிந்து உட்கார்ந்து முழந்தாளிட்டவாறே தோள் வரை கையை உள்ளே நீட்டி அந்த எலிப்பொறியை இழுத்தார். எலி பெட்டிக்குள் இருந்தாலும் அது கையைப் பிறாண்டி விடுமோ என்ற அச்ச உணர்வு குறுகுறுத்தது.
விளக்கு வெளிச்சத்தில் எலியின் கண்கள் மின்னின. பெரிய எலி.. தனது அஜாக்கிரதையை நொந்து கொள்வது போல பீதியோடு கூரிய நகங்களால் தகரச் சட்டத்தைப் பற்றிக் கொண்டு அது தவித்தது. சட்டத்தின் இடைவெளி வழியே அவரையே இமை கொட்டாமல் வெறித்துப் பார்த்தது.
ரங்கையரின் கண்களில் நீர் கொப்புளித்துக் கொண்டு மாலை மாலையாக வழியலாயிற்று.
ஹைஸ்கூலில் படிக்கும் போது ராகவன், வீட்டில் எலித் தொந்தரவு பொறுக்க மாட்டாமல் ஓர் எலிப்பொறி வாங்கி வந்தான். அரை மணி நேரத்துக்கு ஓர் எலி என்று பட்பட்டென்று ஐந்தாறு எலிகள் பொறியில் விழுந்தன. ஒவ்வொரு முறையும் எலியை அடித்துக் கொல்லவோ, பூனைக்கு எதிரில் விடவோ மனசில்லாமல் இரண்டு பர்லாங் தூரம் நடந்து போய் ஏரிக்கரை ஓரமாக எலியை விட்டுவிட்டு வந்தான்.
“கெடந்துட்டு போறது விட்டுடுடா, காலமே பார்த்துக்கலாம்” என்று ஒரு நடையின்போது ரங்கையர் குறுக்கிட்டார்.
“சும்மாப் பிறாண்டிட்டு மனசைக் கெடுத்துண்டிருக்கேப்பா” என்று ஒரு நடைச் சோர்வு பார்க்காமல் தூக்கிக் கொண்டு கோனான் ராகவன்.
ரங்கையருக்கு அந்த ஞாபகம் வந்து விட்டது. கன்னத்தில் வழிந்த கண்ணீர் அவரது பரிதாபமான எதிர்காலத்தை அவருக்கே ஞாபகமூட்டிற்று. இனிமேல் அவருக்குக் கொடுத்து வைத்திருப்பதெல்லாம் கண்ணீர் தான். ஊற்று ஊற்றாய்ப் புறப்பட்டு, எந்த நதிமூலம் உற்பத்தி செய்கிறதோ அதுகூட வற்றி ஒருநாள் காய்ந்து போகும் கண்ணீர்தான்.
‘என்ன மாயமாக மனிதனின் மமதை அடிபட்டுப் போகிறது... காற்றில் புகையாக நூல் போல் பிசிறுவிட்டுப் பிரிந்து கரைந்து என்ன மந்திரமாக அவனது நம்பிக்கைகளும் பந்தயங்களும் சூன்யமாகி விடுகின்றன. திடீரென்று நாடகத்தில் திரை விழுந்த மாதிரி எல்லாம் எப்படி மூடி இருள் சூழ்ந்து விடுகிறது!’
ரங்கையரின் புத்திர சோகம் அவரது விம்மும் மார்பினுள் வயிற்றில் எரியும் அக்னியின் நாக்கு தீண்டியது போலச் சுட்டது. அநாதி காலமாக மார்பின் மீது கட்டிய கையோடு எல்லாவற்றையும் பார்த்து வரும் அந்தர்யாமி ஒருவனின் சித்திரம் அவர் மனசில் தெரிந்தது.
நான் என்ன கொடுமை பண்ணினேன்? எனக்கு ஏன் இந்தத் தண்டனை? என்று அவர் மனம் புழுவாய்த் துடித்தது.
மௌனம், மௌனம் மனிதர்களின் துயர்களும் துயரில் பிறக்கும் ஞானங்களும் தொட முடியாத தொலைவில் ஒரு மௌனம். என் துயரம்... என் துக்கம் என்று கூவும் கூக்குரல்களையே பதில்களாக்கி எதிரொலியாய்த் திருப்பி அனுப்பும் மௌனம்.
நாலரை மணி வரை நம்பிக்கை வேராக ஊன்றியிருந்த ஒருவன். ஒரே பிள்ளை, சாம்பலாய்ப் போய் ஒரு வாரமாகி விட்டது என்று ஐந்து மணிக்குத் தெரியும் போது கம்பீரம் குலையாத ஒரு மௌனம்.
ரங்கையருக்கு யாவும் ஒரு முடிவினை நெருங்கி விட்டால் தோன்றும் அச்சம் தோன்றியது.
பொறியினுள் சிக்கிய எலி, விரல் நகங்களால் கீறி அந்தத் தகரச் சட்டத்தைப் பிய்த்து விடுவது போல் முயற்சித்தது. பிறகு தன் முயற்சியின் வியர்த்தம் தனக்கே உறைத்தது போல் சட்டத்தின் வழியே பொருள் விளங்காத ஒரு பார்வையோடு பரிதாபமாக அவரைப் பார்த்தது.
ஸ்ருதியில் அவர் மனதை ஈர்த்த அந்த சுலோகம் மௌனத்தின் கதவிடுக்கு வழியே நழுவி வந்த ஓசை போல்அவருக்கு ஞாபகம் வந்தது.
பயாதஸ்யா க்னிஸ்தபம் பயாத்தபதி சூர்ய:
பயாத்திந்திரஸ்ச வாயுஸ்ச மிருத்யுர் தாவதி பஞ்சம:
‘இதன் அச்சத்தினால் நெருப்பு எரிகிறது. சூரியன் வெப்பத்தைத் தருகிறான். இந்திரனும் வாயுவும் தத்தம் தொழிலைச் செய்கின்றனர். மரணம் உலகத்திலே உலாவுகின்றது.’
ரங்கையர் மேல் துண்டால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கடிதத்தைப் பார்த்தார்.
மனிதனுக்கு சாத்தியமானது அது மட்டுமே. வழியும் கண்ணீரைத் துடைத்து கொள்வது.. அவர் கடிதத்தைப் படிக்கத்தொடங்கினார்.
அது ராகவனின் கடிதம். தவும் சியும் நியும் கொம்புகளும் சுழிகளும் முதிர்ந்த தெளிவுக்கு வந்த மனசின் அமைவைத் தெரிவித்தன.
“தேவரீர் தகப்பனார் அவர்களுக்கு,
மிக்க வினயத்துடன் நமஸ்கரித்து ராகவன் எழுதிக் கொள்ளும் கடிதம். க்ஷேமம்.
முந்தாநாள் எங்கள் கப்பலின் மாஸ்டை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த என்ஜினீயரிங் க்ரூவைச் சேர்ந்த வினாயக் மாச்வே என்ற மராத்திய இளைஞன் ஒருவன் கால் சறுக்கிக் கீழே விழுந்து ஸ்தலத்திலேயே காலமாகி விட்டான்.
இப்படி மரணம் திடீர் திடீரென்று தலைகாட்டும் போதெல்லாம் எனக்கு இப்போது பயம் ஏற்படுவதில்லை. எல்லாவற்றையும் எதிர்பார்த்துக் கொண்டு, எதற்கும் சித்தமாகக் காத்திருப்பதில் ஒரு நிம்மதி புலப்பட்டு அவ்விதமே இருந்து வருகிறேன்.
எனினும் கடந்த இரண்டு வருஷங்களாகத் தங்களிடம் மறைத்து வைத்திருக்கும் விஷயத்தைத் தெரிவிக்க வேண்டுமென்று இந்த இரண்டு தினங்களாக என் மனம் துடிக்கிறது.
இது தங்கள் பார்வையில் பட்டவுடனே தாங்கள் எவ்வளவு துடிப்பீர்கள் என்ற சங்கதியும், தங்கள் பாசத்திலிருந்து நான் எவ்வளவு விலகி விடுவேன் என்ற விஷயமும் என்னை இவ்வளவு நாள் இதைத் தெரிவிக்காமல் மறைத்து வைக்கத் தூண்டின.
இப்போது இதற்கு நாள் வந்துவிட்டது.
அப்பா, எனக்குக் கல்யாணமாகி ஓர் ஆண் குழந்தைக்கு நான் தந்தையும் ஆகிவிட்டேன்.
என்னுடன் பணிபுரிந்த சிநேகிதன் பெர்னார்ட் மில்லர் என்ற அமெரிக்கனின் சகோதரியான மோனிகா மில்லர் என்றபெண்ணை நான் விவாகம் செய்து கொள்ள வேண்டிய விதிவசம் நேரிட்டு விட்டது.
அந்தக் குடும்பம் சான்பிரான்ஸிஸ் கோவில் ஓர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றும் மார்த்தா மில்லர் என்ற அபூர்வமான அம்மையாரின் கண்காணிப்பில் வளர்ந்த உத்தமமான குடும்பம். தேசம் தேசமாகச் சுற்றுகின்ற இந்தத் தொழிலில் எல்லா இடங்களிலும் எல்லா வகைப்பட்ட ஜனங்களும் இருப்பதை நான் கண்டேன். லௌகீகமும் ஆத்மீகமும் இந்தியாவைப் போலவே எங்குமிருப்பதை நான் கண்டேன்.
மார்த்தா மில்லரின் பாட்டனாரும் பாட்டியுமான பார்பரா கோக்லீயும் அப்ரஹாம் கோக்லீயும் சுவாமி விவேகானந்தர் சான் பிரான்ஸிஸ்கோவில் திருமடம் அமைக்கச் செய்த முயற்சிகளுக்குத் துணை இருந்தவர்கள்.
என் நண்பன் பெர்னார்ட் மில்லருடன் எங்கள் கப்பலில் அமெரிக்கா செல்லும் போதெல்லாம் நான் அவர்கள் வீட்டிற்குப் போய் வந்திருக்கிறேன்.
சம்பிரதாயங்களும் ஆசாரங்களும் வித்தியாசப்பட்டிருப்பினும், சுவாமிஜி அமைத்த மடத்திற்கு இன்னும் போய் வந்து கொண்டு, லௌகீக வாழ்க்கைக்கு மேற்பட்ட தூய வாழ்க்கை ஒன்றை அவர்கள் நடத்தி வருவதை நான் பார்த்தேன்.
ஹார்வர்டு சர்வகலா சாலையில் மூன்றாம் வருஷம் வரை கீழ் நாட்டுத் தத்துவம் படித்துக் கொண்டிருந்தாள் மோனிகா மில்லர். எனது சந்திப்புகளில் எவ்வித விகல்பமும் இல்லை. என் மனசில் களங்கமும் ஏற்பட்டதில்லை.
திடீரென்று ஒருநாள் பாய்லர் வெடித்து பெர்னார்ட் மில்லர் காலமானான். அடுத்த தடவை அமெரிக்கா போனபோது துக்கம் விசாரிக்க நான் சான்பிரான்ஸிகோ போனேன். அங்கே மகனை இழந்த துயர் தாங்காமல் மார்த்தா மில்லர் மாரடைப்பினால் காலமாகி, சவ அடக்கம் முடிந்து மோனிகா வீட்டிற்குத் திரும்பி வந்திருந்தாள்.
எனக்கும் பெர்னாடிற்கும் இடையே இருந்த நட்பை மோனிகா நன்கு அறிவாள். தாய் இழந்த துக்கமும் தமையன் போன துயரமும் ஒரு சேரத் தாக்கி விடவே அவன் என் முன் மனமுடைந்து கதறினாள். அமெரிக்க வாழ்க்கை முறையில் பந்தபாசங்கள் மிகவும் குறைவு. ஒரு குடும்பம் முறிந்து போனால் அதில் அநாதையாக மிஞ்சுகிறவர்களை இந்திய சமூகம் அனுதாபத்தோடு ஏற்று தம் குடும்பத்தவர் ஆக்கிக் கொள்ளும் தன்மை அங்கே கிடையாது.
நான் ஒரு வாரம் சான்பிரான்ஸிஸ்கோவில் அவள் குடியிருந்த வீட்டில் தங்கியிருந்தேன். மார்த்தா மில்லரின் கடன்களுக்காக வீட்டைக் காலி செய்ய அதிகாரிகள் வந்தார்கள். அவள் அநாதையானாள்.
அந்த நிலையில் அவளை அங்கே விட்டு விட்டு வர எனக்கு மனம் சம்மதிக்கவில்லை. திடீரென்று தன் வாழ்வில் விழுந்த இடியைத் தாங்குமளவு மோனிகாவிற்கும் மனோதிடமில்லை.
தன்னை மனைவியாக ஏற்றுக் கொள்ளுமாறு கண்ணீர் வழிய அவள் கேட்டுக் கொண்டாள். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அநேக தயக்கத்திற்குப் பிறகு அவளை என்னால் புறக்கணிக்க முடியவில்லை.
அப்பா, ஒரு வேளை பெர்னாடிற்கும் வினாயக் மாச்வேக்கம் நேரிட்டது எனக்கும் நேரிடலாம். அப்போது எவ்வளவு நீசன் இவன் என்று என்னை திரஸ்கரித்த போதிலும் ஒன்றைத் தாங்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
இது நாள் வரை தங்கள் புத்திரன் என்ற கௌரவத்திற்கு ஹானி நேரும்படியான எந்தக் காரியத்தையும் நான் செய்யவில்லை.
மோனிகா மில்லரை நான் வைதீக முறைப்படி விவாகம் செய்து கொண்டேன். அவளது ரத்தத்தில் பூர்வீக வாசனையாக மகோன்னத ஹிந்துவான சுவாமிஜியின் வாக்கும் ஆசிகளும் கலந்திருக்கின்றன.
மோனிகாவை என் புத்திக்கும் முயற்சிகளுக்கும் எட்டிய விதத்தில் நான் ஹிந்துப் பெண்ணாக்கி இருக்கிறேன். சிரத்தையும் நம்பிக்கையும் அவளைப் புனிதவதியாக்கியுள்ளன.
இது தர்மத்திற்கும் சாஸ்திரத்திற்கும் விரோதமானது அல்ல என்பதைத் தங்கள் பாதங்களில் பணிந்து வினயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மனுதர்ம சாஸ்திரம், ஓடிச் சென்று அடையும் கடலின் இயல்பை எய்தும் ஆற்றைப் போல் தனது கணவனின் இயல்பினையே அவன்பால் இணையும் மாதும் அடைகின்றனள். சான்றாக வசிஷ்டரை மணந்த அக்ஷமாலையும் மந்தபால முனியின் மனைவியான சாரங்கியும் தாழ்குலப் பெண்களாக இருந்த போதிலும் தங்கள் கணவரான அம்முனிவர்களின் மேன்மையான தன்மையை அவர்களும் பெற்றுப் போற்றத்தக்கவர் ஆயினர் என்று கூறுவதைத் தாங்கள் அறிவீர்கள்.
அவர்களையொத்த மகானுபாவர்களின் பாத தூசிக்கும் நான் சமமானவன் அல்ல. எனினும் தங்கள் குமாரன்.இந்த நினைப்புடன் நான் செய்த காரியத்திற்கு தங்கள் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று நம்பிப் பணிந்து வேண்டுகிறேன்.
ஜமுனாவின் விவாகம் முடிந்த பின் இதைத் தெரிவிக்க எண்ணியிருந்தேன். ஆயினும் இப்போது வேளை வந்திருப்பதால் எழுத நேரிடுகிறது. நான் எவ்விதக் குற்றம் செய்திருந்தாலும் என்னை மன்னித்துத் தங்கள் புத்திரனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் பிரிய குமாரன்,
ஆர். ராகவன்
அந்தக் கடிதத்தின் மூலம் ராகவனுடைய பணிவும் மனத் தூய்மையும் ரங்கையருக்கு ஞாபகம் வந்து அவருடைய கண்களில் மீண்டும் ஓர் ஊற்று கிளம்பிற்று.
இரவு ஒன்பதரை மணி வரை ரங்கையர் மோனிகா மில்லருடன் பேசிக் கொண்டிருந்தார். இந்திய சமூகத்தில் விதவை என்பவன் சாஸ்திர விதிப்படி எப்படி இருக்க வேண்டுமென்று சொல்லிப் பார்த்தார். இங்கேயே விதவைத் திருமணம் என்பது சமூகம் இப்போது ஏற்றுக் கொண்ட மாற்றமாகி விட்டதைச் சுட்டிக் காட்டினார்.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டாள். மோனிகா மில்லர். அவள் விரும்பும் பட்சத்தில் அமெரிக்காவுக்கே ஜான்ஸனின உதவியோடு திரும்பி அனுப்புவதாகவும் ரங்கையர் கூறியதை அவள் மௌனமாகக் கேட்டுக் கொண்டாள்.
தீர்க்கமாக யோசித்து ஒரு முடிவுக்கு வரும்படி மோனிகாவிடம் அவர் சொன்னபோது தான் அவள் வாய் திறந்தாள்.
“அவருக்கு அப்ரம் வேர் ஒருத்ஙதர் கிட்டே நான் வால மாட்டேன். ஐப்ரஃபர் டு டை ஆஸ் ஹிஸ் விடோ (அவரது விதவையாகச் சாவதையே நான் மேலாகக் கருதுகிறேன்.)”
அந்த வார்த்தைகளை அவள் சொல்லும்போதுமோனிகாவின் முகத்தில் அபூர்வமான சாந்தி நிலவியது. அசையாத தீர்மானம் தெரிந்தது. ரங்கையரின் உடல் புல்லரித்தது.
“இன்னும் இரண்டு நாட்கள் யோசித்துத் தீர்மானம் செய். அதுவரை ஜான்ஸனின் பாதுகாப்பில் நீ இருப்பது தான் நல்லது” என்று கூறி விட்டு அவர் வீட்டிற்குப் புறப்பட்டார்.
பொறில் அகப்பட்ட எலியை ஒரு கோணியில் போட்டு அறைந்து கொன்று விட ஒரு மாணவன் பொறியைக் கோணிக்குள் திறந்து விட்டான்.
“அதை என்ன செய்யப்போகிறாய்?” என்று அவள் கேட்டாள்.
மாணவன் சொன்னான்.
“நோ... நோ... டோண்ட் கில் இட்... லீவ் இட் சம் வேர். (வேண்டாம் அதைக் கொல்லாதே. எங்காவது விட்டுவிடு)” என்றாள் மோனிகா.
ரங்கையருக்கு ராகவன் ஞாபகம் மறுபடியும் வந்தது.[தொடரும்]

ஜமுனா: 17

ஜமுனா: 17
“ஜமுனாம்மா... கயனித் தண்ணி இருக்குதா?”
தோல் பெட்டிக்குள் துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த ஜமுனா, பெட்டியை மூடி விட்டு வெளியே வந்தாள்.
சின்னம்மா இடுப்பில் பானையோடு நின்றிருந்தாள். ஒல்லியான, உயரமான உருவம், நாற்பதை எட்டும் வயது என்பதை அந்த முகத்தில் இன்னம் இருந்த கவர்ச்சியைக் கொண்டு தீர்மானிக்க முடியாது. சாயம் போன சேலை, மலிவான ஜாக்கெட், கையிலும் கழுத்திலும் ஏன், நெற்றியிலும் கூட ஒன்றுமில்லை. எனினும் அந்தக் கண்களும் உதடுமே போதும், தெருவில் போகிறவர்கள் திரும்பித் திரும்பிப் பார்த்தார்கள்.
“இருக்கு சின்னம்மா. மழை கொட்டறச்சே ஒன் ஞாபகம் வந்தது. சாணிக்கையைப் போட்டு மூடி ஓரமாக நகர்த்தி வச்சிருக்கேன்.”
“எல்லா வூட்டிலேயும் மழையிலே பானையைத் தொறந்து வுட்டுட்டாங்க அம்மா. இன்னிக்கு உன் தயவிலே தான் மாடுங்க குளுத்தி குடிக்கணும். இந்த மழைலே என் மாடுங்க ஞாபகம் ஒனக்கு இருந்துதே.”
ஜமுனாவுக்குக் கூச்சமாக இருந்தது.
“அதென்னமோம்மா... குளுத்தி குடிச்சிப் பளக்கப்பட்ட மாடுங்க வெய்யிலானாலும் மழையானாலும் அது இல்லேன்னா முளிச்சிக்கினு நிக்கிறது.”
“நாம்ப காப்பிக்கு பழக்கப்பட்டுட்டா மாதிரி அதுங்க.”
சின்னம்மா பானையிலிருந்த கழனித் தண்ணீரை தன் பானைக்கு மாற்றிக் கொண்டாள். அவள் குனிந்த போது இன்னும் நரைக்காத கேசம், தேங்காய்ப் பருமனுக்கு திண்டாக முடிந்திருந்ததை ஜமுனா கவனித்தாள். பின்னங்கழுத்தின் குறுகுறுவென்று ரோமக் கால்கள் ஓடியிருந்தன. முடிந்த கூந்தலின் கீழே அது ஓர் அழகாக ஈர்த்தது.
சின்னம்மாவுக்கு டீச்சர் டிரெய்னிங் படித்த பெண் இருக்கிறாள் என்பதையே நம்ப முடியவில்லை.
“காஞ்சனாவுக்கு இன்டர்வ்யூ என்னிக்கு”
“நாளன்னிக்கு.”
“வேலை கெடைச்சிருமா?”
“என்னமோ... பண்ற முயற்சியைப் பண்ணியிருக்கேம்மா. சேர்மன் கவுண்டர்கிட்டே நேர்லே போய்ச் சொல்லிட்டு வந்தேன். பார்க்கலாம்மான்னு சொல்லி இருக்காரு, அதுக்கப்பறம் தெய்வ சங்கல்பம். எவ்வளவோ பாடுபட்டு மானத்தோடே, காப்பாத்திட்டேன்! வேலை கெடைச்சுட்டா யாராவது ஒருத்தர் வந்து, காஞ்சனாவை கட்டிக்கினு போயிடுவாங்க. எனக்குப் பளு கொறஞ்சுடும்.”
சின்னம்மா வழக்கமாகக் கழுநீர் கொண்டு போவாள். வீடு மெழுகச் சாணம் கொணர்ந்து தருவாள். இந்தத் தொடர்பில் ஓர் உறவு வந்துவிட்டது. கஷ்ட நஷ்டங்களை மனம் விட்டு ஜமுனாவிடம் பரிமாறிக் கொள்வாள்.
நாளைக்கு அவள் கழுநீர் எடுக்க வரும்போது தான் இருக்க மாட்டோம் என்ற உணர்வு, அவளோடு இன்னும் சற்று நேரம் பேசும் ஆவலை ஜமுனாவிடம் தூண்டிற்று.
கணவன் போன பின்பு இரண்டு பசு மாடுகளை வைத்துக் கொண்டு சின்னம்மா வாழ்க்கையோடு போராடிய கதையை ஜமுனா நினைத்தாள். அந்த அழகு எத்தனை பேரைத் திசை தப்பி அவளிடம் மோத வைத்திருக்கிறது. ஆனால் கைம்பெண் ஆனாலும் தீக்குளிக்காமல் லட்சியங்களுக்காக வாழ்கிற ராஜபுதனத்து ராணி மாதிரி, கம்பீரமாக நடந்து கொண்டாள் சின்னம்மா.
ஒர்க் ஷாப் ராஜு, கவுன்சிலர் தாமு, தாசில்தார் ஹரிஹரன்... எத்தனை பேர் அவளிடம் தோற்றவர்கள்? அந்தரங்க சிநேகிதியாக ஜமுனாவைக் கருதி அவள் சொன்ன கதைகள் கல்வெட்டுகள் போல் ஜமுனா மனசில் பதிவாகியிருந்தன. அழகு, காவல் இல்லாத சரீரக் கவர்ச்சி, எந்த வீட்டுக் கதவு எப்போது திறந்திருக்குமோ என்று எத்தனை மனங்களில் நாய்கள் இரைத்துக் கொண்டிருக்கின்றன. உலகத்தில் ஏன் இப்படி ஒரு மாமிசப் பசி! தின்று அடங்குகின்ற பசியா அது? தெருத் தெருவாய், வீடு வீடாய் தடியடியும் தூஷணையும் வாங்கிக் கொண்டாவது அலைந்து கொண்டே திரியும் அடங்காப் பசி.
ஜமுனா குடிநீருக்காக ஆரிய வைசிய சங்கக் குழாய்க்குப் போவாள். வழியில் பல் போய், வெம்பிய பழமாக திண்ணையில் ஒரு கிழம் உட்கார்ந்திருக்கும், பாம்புக் கண். நாய்ப் பார்வை. அந்தக் கிழவன் கூட சின்னம்மா பாலூற்றப் போன போது கையைப் பிடிக்க வநதானாம். ‘உடம்பு வெம்பிக் கொண்டு இருக்கும்போது கூட அடங்காத பசி என்று அடங்கும்? மண்ணிலா? சாம்பலாய்க் காற்றில் பறந்த பின்னாலா? அப்போதும் அடங்காமல் ஆவியாய் அலையுமோ!’
சின்னம்மா இந்த ஈனப் பசிகளின் கங்காளித் தனத்தை நிறையப் பார்த்து விட்டாள்.
“நாலு மனுசன் பார்வையிலே நல்ல எண்ணம் வருமான்னு நான் யோக்யமா பொளைக்கிறவ ஜமுனா. இந்தப் பாளாப் போன மூஞ்சியைப் பார்த்ததும், நல்ல மனுசன்கூட தடுமாறிப் போறான். நமக்கு சாணி அடிச்ச மாதிரி ஆயிடுது. எனக்கு இது ஒரு சாபம்?”
பலமுறை சின்னம்மா தன் அழகைக் குறித்து வருந்தி முறையிட்டிருக்கிறாள்.
“அது சாபமில்லை. சோதனை” என்ற ஜமுனா பதில் சொல்வாள். நல்லதும் கெட்டதுமாகப் பெண்கள் கூடும் இடங்களில் எல்லாம் அவள் காதில் எத்தனையோ சேதிகள் விழுந்திருக்கின்றன. பெண் மனம் சாக்கடைச் சேறானதையும், மாற்றுக் குறைந்து மலிவானதையும் அவள் கேட்டிருக்கிறாள்.
பெண் எப்படி சீரழிந்து விட்டாள் என்பதற்கு ஆயிரம் கதைகளைத் தெருவும் சினிமாவும் பத்திரிகையும் திருப்பித் திருப்பி வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் இன்னும் சின்னம்மா உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாளே! எது மெய்? எது பொய்?
“நான் வர்றேன் ஜம்னாம்மா...” - அவள் தன் பானையைத் தூக்கி, முழங்காலின் மீது வைத்து ஒரு சாதுர்யத்தோடு, சடக்கென்று சும்மாடு கொல்லி வைத்த தலையில் ஏற்றிக் கொண்டு தெருவில் படியிறங்கும்போது, சற்றுக் குனிந்து வாசற்படி இடிக்காமல் வெளியேறினாள்.
“நாளைக்கு அவள் கழுநீருக்கு வரும்போது என்ன நினைப்பாள்?”
‘ஓடுகாலி என்றா...? ஆசார அனுஷ்டானம் தவறாத ரங்கையரின் வயிற்றிலும் மானத்திலும் நெருப்பை அள்ளிப் போட்டவள் என்றா...?’
ஜமுனா தன்னை மறந்து திறந்த தெருக்கதவையே பார்த்துக் கொண்டு நின்றாள். கடைசியாக ஒரு முறை கணக்கைச் சரி பார்ப்பது போல் அவள் மனசில் பல எண்ணங்கள்... ஞாபகங்கள்... அவளை அறிந்த ஒரு சமூகத்தின் பிரதிபலிப்புகள் என்று ஏடுகள் புரண்டன.
அவளது நடத்தையைப் பற்றி உலகம் வழங்கப் போகும் தீர்ப்புகள். தினுசு தினுசாக அவரவர் மனத்துக் கேற்றபடி அமையப் போவதை அவள் யூகித்தாள். எதுவுமே முழு உண்மையாகாது எல்லாமே ஒரு தப்பபிப்ராயமாகத் தான் இருக்கப் போகிறது.
‘மோகன்! உன்னோடு நான் ஓடி வராவிட்டால் தந்தையும் தாயுமின்றி அநாதை விடுதியிலே வளர்ந்து, அன்பு காட்ட ஓர் இதயமில்லாமற் போன பாவத்துக்காக எத்திப் பிழைத்து, ஏமாற்றிப் பொய் சொல்லி வாழ்க்கைச் சுழலில் சருகு மாதிரி பறக்கும் நீ என்ன ஆவாய்?’
ஜமுனா முகத்திற்கெதிரில் ஒரு குளவி பறந்து வந்ததை ஆடாமல் அசையாமல் கவனித்தாள். அது ஒரு செங்குளவி. நீளவாக்கு. துளைக் கொம்புகள் இரண்டு அசைந்து கொண்டு வர வார்னிஷ் டப்பாவில் விழுந்து, எழுந்து வந்தது போல் அது பளபளத்தது.
‘விஸ்ஸ்’ என்று முகத்தருகில் பறக்கும்போது அதன் சிறகுகள் வீசிய காற்று கொஞ்சம் அச்சத்தைத் தந்தது. அசைந்தால் தான் குளவி கொட்டும் என்று யாரோ சொல்லக் கேட்டிருக்கிறாள். இரைந்து கொண்டே குளவி அவள் முகத்தை விட்டு அப்பால் நகர்ந்தது.
அதற்கு ஏமாற்றமாக இருந்திருக்குமோ என்று நினைத்தாள் ஜமுனா.
எதிர்த்திருந்தால் அஞ்சி ஓடியிருக்கும். அல்லது கொட்டியிருக்கும்.
‘மோகன், உன்னையும் ஒரு விஷக் குளவி என்று தான் சமூகம் வெறுத்து ஒதுக்குகிறது. எத்தனையோ வாழ்க்கைகளை நீ துளைத்து விட்டாய் என்று புகார் சொல்கிறது. என்னிடம் நீ எதையும் மறைக்கவில்லையே...’
அன்னொரு நாள் மோகன் டைபாய்டில் அவதிப்பட்டுக் கொண்டு தனியாக மாடியில் படுத்திருந்தான். எதிர் வீட்டுக்காரர்கள் மாட்னிக்குப் போயிருந்தார்கள். அரை நிஜார் சுந்தரத்தின் மூலம் கேள்விப்பட்டுத் தைரியமாக ஜமுனா அவனைச் சென்று பார்த்தாள்.
அவனைப் பார்த்ததும் அவன் கண்களில் ஓர் அநாதையின் கண்ணீர் வழிந்தது. குடும்பம் இல்லாதவன், துணை அற்றவன், பணம் இல்லாதவன். இப்படி ஒரு ஜீவன் இந்த விசாலமான உலகில் வழிகாட்ட ஒரு துணை இல்லாமல் விதியின் பிரவாகத்தில் துரும்பு மாதிரி மிதப்பதை யார் பொருட்படுத்தினார்கள்? என்று அவள் நினைத்தாள்.
எந்தக் கண்ணீர் அப்படி ஓர் இதயத்திற்காகச் செலவழிந்தது? அப்பா... அம்மா... அண்ணன். தம்பி... மகன்... மகள் என எதிர்காலப் பாதுகாப்பிற்காக மனிதர்கள் எதைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்?
ஓர் அங்கஹீனனுக்குப் பரிதாபப்படுவது போல் ஜமுனா அவனிடம் முதலில் பரிவு காட்டினாள். ஊனங்ஙகள் மனத்தில் இருந்தால் கூட அவை பரிவுக்குரியவை தான்.
மோகனின் கண்ணீர் ஜமுனாவின் மனசில் வித்தாக விழுந்தது.
பெண்ணை எவ்வளவு நவீன மயமாக்கினாலும் அவளுக்குள் உறங்கும் தாய்மையை எதுவும் செய்ய முடியாது. அது அவளிடம் அது கருணையாக விளைந்தது.
பிறந்து இருபத்தைந்து ஆண்டுகளாக, கற்பாறைகளிலும் இரக்கமற்ற சுயநலக் குகைகளிலும் விலங்குகளால் வேட்டையாடப்பட்டு உயிர் பிழைப்பதற்கு எது செய்வதும் பொருத்தமானதே என்று அவனுக்குள் அலைந்து திரிந்த ஓர் ஆதி மனிதன் அந்தக் கருணையின் குரலைக் கேட்டுத் தன் வசமிழந்து நின்றான்.
அதன் புதுமை அவனை அதிரச் செய்தது.
அவன் கருணையைக் கதைகளில் தான் கேட்டிருக்கிறான். அது ஒரு பித்தலாட்டம் என்று சிரித்திருக்கிறான்.
இப்போது அவனது வீழ்ச்சிக்காக இரக்கமுற்று அந்தக் கருணையைப் பெறுவதற்கு, அவனுக்குள்ள தகுதியை நினைவூட்டி மோகனை ஜமுனா கௌரவப்படுத்தினாள். அவன் அவள் அடிமையானான்.
ஜமுனாவின் வாழ்க்கையில் எதிர்ப்பட்ட முதல் ஆண் அவன்தான். அவன் அவளை வழிபடத் தொடங்கினான்.
பெண், சீக்கிரம் தெய்வமாகிறாள். விரைவாக ஒரு ஜீவனின் முறையீடு பெண்ணின் செவிகளில் விழுகிறது. உலகத்தின் இகழ்ச்சிகளை ஒதுக்கிவிட்டு உண்மையின் ஒளியை அவளால் ஏற்க முடிகிறது.
அவ்விதம் ஜமுனா அவனை ஏற்றுக் கொண்டாள். அந்த ஆரம்பம் பிரியம் ஆயிற்று. நாளடைவில் நேசமாயிற்று. போகப் போக அவனிடம் மிஞ்சியிருந்த தூய்மையைப் பிரித்தெடுத்துப் போற்றிக் காக்க வேண்டிய பொறுப்பாயிற்று. அவள் மோகனை மனிதனாக்கி வந்தாள். அவனோ அந்தச் சோதனையில் அடிக்கடி தவறு செய்தான். எனினும் அவளிடம் நம்பிக்கை இருந்தது. அபாரமான பொறுமையோடு அந்த நம்பிக்கை அவளிடம் வளர்ந்தது.
‘மோகன், உன்னோடு நான் ஓடிவரப் போகிறேன்... உலகத்தின் வாய் என்னை எப்படியெல்லாம் தூற்றும் என்று தெரிந்ததும் ஓடிவரப் போகிறேன்.’
பெருமூச்செறிந்து விட்டு உள்ளே போனாள்.
சில துணிமணிகள் அவள் அப்பா கொடுத்ததில் செட்டாகச் செலவழித்துச் சேமித்துச் சேமித்து வைத்திருந்த தொளாயிரத்து முப்பது ரூபாய் ரொக்கம். ஒரு பகவத் கீதை. அம்மா உயிரோடிருந்த காலத்தில் குடும்பத்தோடு அப்பா எடுத்துக் கொண்ட ஒரு போட்டோ ப்ளஸ்டூ சர்டிபிகேட்... சமீபத்தில் நியூசிலாந்தில் மாலுமி உடையில் அண்ணா ராகவன் எடுத்துக் கொண்ட போட்டோ... இவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துத் தோல் பெட்டிக்குள் அடுக்கினாள்.
அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதி வைக்கலாமா என்று யோசித்தாள்.
தன் சமாதானத்துக்குத் தான் அது உதவும். அவர் மனசில் தன் நியாயங்களைப் புரிய வைக்க முடியாது என்று உணர்ந்தாள். பின்னால் எப்போதாவது அவர் மனம் ஆறித் தெளிவு பெற்ற நிலையில் எழுதினால் அப்படி ஒரு கடிதத்துக்குப் பயன் உண்டு என்று முடிவு கட்டிவிட்டு சமையல் அறைக்குப் போனாள்.
அப்பாவுக்காக இரவு உணவிற்கு உப்புமா கிண்டி வைக்க ஏற்பாடுகளைத் தொடங்கினாள் அவள் மனசு துறவுக்கோ, மரணத்துக்கோ சித்தமாகி விட்ட பரிபக்குவத்திற்கு வந்திருந்தது.
சமையல் வேலை முடிந்ததும் அவள் வீட்டை ஒரு தரம் சுத்தமாகப் பெருக்கிக் கூட்டினாள். புழக்கடையில் இருந்த சாமான்களை கழுவித் தண்ணீரை வற்ற வடித்து விட்டு ஒவ்வொன்றாகக் கொண்டு வந்து சமையல் அறையில் கவிழ்த்தினாள்.
பால்காரி, காய்காரி, சலவைக் கணக்கு இவற்றையெல்லாம் ஒரு வெள்ளைக் காகிதத்தில் எழுதி ரங்கையர் பார்வையில் படும்படி எதிரே வைத்தாள். வீட்டை ஒரு தரம் நன்றாகச் சுற்றிப் பார்த்துக் கொண்ட பின்பு கண்ணாடி அருகில் நின்று அவள் தலைவாரத் தொடங்கியபோது அந்த ஜப்பான் கடிகாரம் ஏழு அடித்தது.
அப்பா எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவாரோ? மழை விட்டு விட்டால் அநேகமாக ஓட்டலுக்குப் போய் வழக்கப்படி இரவு பத்து மணிக்குத் தான் வருவாரா என்று தனக்குள் சொல்லியவாறே தலைவாரி முடித்தாள்.
எட்டே முக்கால் மணிக்கு திறந்திருந்த கதவின் வழியாக ஒரு கூலி உள்ளே வந்து நின்றான்.
“என்னம்மா... பொட்டி இருக்குதாமே... ஐயா கொண்டாரச் சொன்னாரு...”
“அவரு எங்கே?”
“தோ, கோவுலாண்டே கார்லே ஒக்காந்துனுகீறாரு. வண்டி சந்துக்குள்ளே வராது. அதுக்குத் தான் பொட்டியை வாங்கிக்கினு உங்களை ஜல்தி வரச் சொன்னாரு...”
ஜமுனா பெட்டியை எடுத்துக் கூலி ஆளிடம் கொடுத்தாள். அதை வாங்கிக் கொண்டு அவன் தெருவில் இறங்கினான். அவன் போகும் வரை காத்திருந்து எல்லா விளக்குகளையும் அணைத்தாள். பின்பு ஏதோ ஞாபகம் வந்தது. பூஜை அறை விளக்கைப் போட்டு உள்ளே போனாள்.
அங்கேயிருந்த படங்களைக் குனிந்து நமஸ்கரித்தான்.
ரங்கையரின் படுக்கையைத் தொட்டு நமஸ்கரித்து விட்டு வெளியே வந்தாள். மழையின் காரணமாக அவர் விட்டு விட்டுச் சென்றிருந்த செருப்பு தென்பட்டது. பூஜை அறையின் மங்கலான வெளிச்சத்தில் அவற்றை ஒரு தரம் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டாள். பிறகு, பூஜை அறை விளக்கை அணைத்து அறைக் கதவை இழுத்துத் தாளிட்டாள்.
பூட்டும் சாவியும் நடை ஓரத்தில் தயாராக வைக்கப்பட்டிருந்தன. அவற்றை எடுத்துக் கொண்டு வெளியே வந்து தெருக்கதவை இழுத்துப் பூட்டினாள். வெளியே வந்து அடுத்த வீட்டு சுந்தரத்தைக் கூப்பிட்டாள்.
அரை நிஜார் சுந்தரம் பதில் தரவில்லை.
“சுந்தா... அக்கா கூப்பிடறா... போய்க் கேளு” என்று உள்ளேயிருந்து குரல் வந்தது.
அரை நிஜார் சுந்தரம் வெளியே வந்தான். முகத்தில் தூக்கக் கலக்கம்.
“என்னக்கா?”
“ஒண்ணுமில்லேடா... தாத்தா வந்தா இந்த சாவியைக் கொடுத்துடு. நான் கோவிலுக்குப் போயிட்டு வர்றேன்.”
“சரிக்கா...”
அவன் சாவியை வாங்கிக் கொண்டான். திரும்பினான்.
“இந்தாடா...”
அவள், அவன் கையில் ஒரு ரூபாய் நாணயத்தை அழுத்தினாள்.
“எதுக்குக்கா ?”
“வச்சுக்கோடா...?”
அவனுக்கு விளங்கவில்லை. ஆனால் வாங்கிக் கொண்டான். அவனது கன்னத்தை ஒருமுறை வருடி விட்டு ஜமுனா போவதை அவன் சற்று நேரம் விசித்திரமாகக் கவனித்தான்.
ஜமுனாவின் உருவம் தெருத் திருப்பத்தில் மறைந்தது.[தொடரும்]

Tuesday, 19 September 2017

ஜமுனா;16

ஜமுனா;16
மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டு வீட்டில் உட்கார்ந்திருக்கப் பிடிக்கவில்லை. ஆனந்தராவ் ஊஞ்சலில் புறங்கையைப் பின்னால் கொடுத்துக் கொக்கி தொங்கிய விட்டத்தை வெறித்தவாறு படுத்திருந்தார். கங்காபாய் மூலையில் உட்கார்ந்து அரிசியில் கல் பொறுக்கினாள்.
வீட்டில் ஒரு திரஸ்கார மௌனம் நிலவிற்று. யாரும் பேசவில்லை. அது ராஜாமணியின் மனசைத் தின்றது. அவன் ஊட்டிக்குப் போவதையோ, ஐ.எஃப்.எஸ்ஸுக்கு எழுதிப் போடுவதையோ குறித்து இவ்வளவு பலத்த ஆட்சேபம் இருக்கும் என்று அவன் எண்ணிப் பார்க்கவில்லை.
எல்லாம் போகப் போகச் சரியாய் விடும் என்று அவன் மனம் சமாதானப்படுத்திற்று. காரை பெயர்ந்த சுவரைச் சுண்ணாம்பு பூசி மறைப்பது போல் உறுத்தல். பெற்றோர் அதிருப்தி என்ற பிளவை எப்படிச் சரிக்கட்டுவாய் என்று ஓர் உறுமல்.
தண்ணீர் குடிப்பது மாதிரி, ஷர்ட்டைத் தேடுவது மாதிரி, குடையைப் பார்ப்பது மாதிரி அவன் தன் அறைக்கும் கூடத்துக்கும் நாலைந்து முறை நடந்து பார்த்தான். கங்காபாயும் ஆனந்தராவும் அசைந்து கொடுக்கவில்லை. ராஜாமணிக்கு ஆத்திரம் வந்தது. முதலில் அவர்கள் மீது அடுத்து தன் மீது ஒரு வாரத்தில் அவனுக்கு இரண்டு புறக்கணிப்புகள். ஜம்னா, இது.
இவர்கள் என்ன விரும்புகிறார்கள்? இவர்களைப் போலவே நானும் ஒரு சிற்றூரில் சிறிய வட்டத்தில் அடங்கி விட வேண்டுமென்றா? எனக்கு எதற்கு படிப்பு? ஏன் ஒரு பறக்கும் மனம்? முயற்சிகளின் இறக்கை ஒடிந்து ஒரு பாதுகாப்பான கூண்டில் கம்பிகளை எண்ணிக் கொண்டு உட்கார்ந்திருக்கவா?
மனிதன் எதையாவது சாதிக்க வேண்டாமா? சாப்பிட்டுத் தூங்கி சம்சாரம் நடத்தி நாலோடு நாராயணா என்று தன் பந்தோபஸ்துக் குறையாமல் பிழைத்திருந்தால் மட்டும் போதுமா? உலகம் இவர்களுடைய சிறிய எல்லைக்கப்புறம் எவ்வளவு பரந்திருக்கிறது என்று இவர்களுக்கு ஏன் புரியவில்லை...? பெற்று வளர்த்ததற்குரிய கடனைத் தீர்க்காமல் சேதுவைப் போல் மனச்சாட்சியை சீல் வைத்து மூடி விட்டு ஓடி விடுவேன் என்றா நினைக்கிறார்கள்?
ராஜாமணிக்கு எண்ணம் கொந்தளித்தது. ஸாக்சை மாட்டிக் கொண்டு, ரெயின் ஷýவைப் போட்டவாறு குடையை எடுத்தான்.
“எங்கேடா போறே? என்றான் கங்காபாய்.”
“ஹோட்டலுக்கு...”
“மழை கொட்டறதே!”
“குடை இருக்கே!”
“விட்டப்புறமா போ”
“இல்லே... போய்ட்டு வந்துடறேன். போரடிக்குது.”
அம்மா இரண்டு வார்த்தைகளாகப் பேசினாள். அப்பாவுக்கு ஒரு வார்த்தை கூட அகப்படவில்லையோ?
‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரிடையராகிவிட்ட கேசவலு நாயுடு மனம் உடைந்தாரே. அந்த மாதிரியோ உயர்ந்து வாழ்ந்து சட்டென்று சரிந்து போன சோடேலால் மாதிரியோ இந்தச் சிறிய அரங்கத்தில் ஓடியாடி அடங்கினால் இவர்களுக்குப் போதும். என் அவா பிடரியைப் பிடித்து அடிக்கிறதே... நான் என்ன செய்யட்டும்? என்னைப் புரிந்து கொள்ளுங்கள்!’
ராஜாமணி நினைத்துக் கொண்டே நடந்தான்.
சோமையாவின் கடிதத்தைக் கொண்டாடிக் களிக்க வேண்டிய மனம் நொண்டியாய்க் கெந்துவது சகிக்கவில்லை.
கொட்டும் மழையில் நடப்பது என்பது எதையோ பழிவாங்குவது மாதிரி. லட்சியம் செய்யாதது மாதிரி மனக் கடுப்புக்கு இசைவாக இருந்தது.
நேரே ஆனந்தபவனுக்கு நடந்தான். ஹர்த்தாலை முழுக்க ஸ்தம்பிக்க வைத்து விட்ட மழையைச் சபித்துக் கொண்டு அங்கங்கே கூட்டம் நின்றது.
ஆனந்தபவனுக்குள் நுழைந்தான். கலாய்கார சுபான் பீடியைக் குடித்துக் கொண்டு மூலையில் உட்கார்ந்திருந்தான். அவன் அடுப்புப் போட வேண்டிய முற்றத்தில் வெள்ளம் நாலுகாலாக ஓடிற்று. வைத்தா சினிமாப் பத்திரிக்கை படித்தான். சுப்பண்ணா இரண்டு டேபிளை சேர்த்துப் போட்டுத் தூங்கினார்.
உமாசங்கர், ஐயாசாமி, மாதவன், மணி நாலு பேரும் சமையல் அடுப்புக்குக் கீழே வட்டமாக உட்கார்ந்து சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். கணப்பு அடுப்பில் வெந்நீர் அண்டா காய்ந்தது. சூட்டை அனுபவித்துக் கொண்டு சுவாரஸ்யமான ஆட்டம். ராஜாமணி போனதும் சீட்டை மறைத்துக் கொண்டு எல்லோரும் எழுந்து நின்றார்கள். டேபிள் துடைக்கும் துணியில் இறைந்திருந்த சில்லறையை எடுக்க மறந்து எப்படி மறைப்பது என்று எல்லோரும் விழிப்பது தெரிந்தது.
ராஜாமணி கண்டு கொள்ளாதது போல் “சுபான் அடுப்பு போடலியா? சரி, நான் வர்றேன்!” என்று வெளியே கிளம்பினான். மேஜை மீது கவிழ்ந்து நாலு கால்களையும் மேலே நீட்டியவாறு படுத்திருந்த நாற்காலிகள், மூடிய ஸ்வீட் ஸ்டால். காஷ் கவுண்டர்.
வளைய வளைய இதையே சுற்றிக் கொண்டு என் வாழ்க்கையைக் கழித்து விட வேண்டுமா? - முடியாது - எந்த காரணத்தை முன்னிட்டும் முடியாது. ராஜாமணிக்கு உரத்த குரலில் சபதம் கூற வேண்டும் போலிருந்தது.
வெறிச்சிட்டிருந்த ஆனந்தபவனில் கொட்டு கொட்டென்று விழித்தவாறு மழை பெய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க அவனுக்குப் பிடிக்கவில்லை.
எங்கே போவது?
வீடு ஒரு மௌனச் சிறை.
நண்பர்கள் ஒவ்வொருவரையாக நினைத்தான். எக்ஸ்டென்ஷனில் சங்கர் இருப்பான். அவனுக்கு சோமையாவின் கடிதத்தைச் சொன்னால் ஆனந்தத்தால் துள்ளிக் குதிப்பான். எத்தனையோ அந்தரங்கங்களை அவனிடம் தான் ராஜாமணி பரிமாறிக் கொள்வான்.
கொட்டும் மழையை லட்சியம் செய்யாமல் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் நடந்தான். கிரிக்கெட் விளையாடும் ஈத்கா மைதானத்தைப் பார்க்க வேண்டுமென்று ஆவல் முளைத்தது. தாலுக்கா ஆபீஸ் வழியாகப் போவதைத் தவிர்த்து வேண்டுமென்றே அதிகமாக நடக்கிற தூரத்தைத் தேர்ந்தெடுத்தான்.
ஈத்கா மைதானம் மழைப் பந்தலில் கசகசத்துக் கொண்டிருந்தது.
சம்பந்தமின்றி ஜமுனா நினைவு வந்தது.
இந்நேரம் அவள் என்ன செய்து கொண்டிருப்பாள்? சமையல் முடிந்து பத்திரிக்கை படிப்பாளா? ரங்கையர் வீட்டில் இருப்பார். இல்லையென்றால் மனப் புழுக்கத்தையெல்லாம் அவளிடம் போய்க் கொட்டலாம்.
‘கேட்டுக் கொள்ள மாட்டாளோ... இதையெல்லாம் அவளிடம் சொல்வதற்கு எனக்கு உரிமை இல்லை என்று முகத்தில் அடித்துச் சொல்வாளோ?’
முழங்காலுக்குக் கீழே பாண்ட் நன்றாக நனைந்து விட்டது. சங்கர் வீட்டுக்குப் போய் பாண்டைக் கழற்றிப் போட்டு விட்டு லுங்கிக் கட்டிக் கொள்ளலாமென்று நினைத்தவாறு நடந்தான். அவன் வீடு வந்தது. வெளியே மூடியிருந்த இறக்கைக் கதவுகளைத் திறந்து உள்ளே நுழைந்தான்.
அவனுடைய அம்மா மட்டும் கட்டிலில் இருமிக் கொண்டு படுத்திருந்தாள்.
“சங்கர் இல்லியேப்பா... மழைக்கு முன்னாடியே பொறப்பட்டான். எங்கே போனானோ?”
“சரி... நான் வர்றேன்.”
ஏமாற்றம் தாங்காமல் திரும்பினான்.
“மழையா இருக்கே? நின்னப்பறம் போயேன்.”
“இல்லேம்மா நான் அவசரமாப் போகணும்.”
விச்ராந்தியாக வெறிச்சோடியிருந்த எக்ஸ்டென்ஷன் தெருக்களில் மழை வெள்ளம் ஓடிற்று.
எல்லா கதவுகளும் அடைந்து விட்ட மாதிரி அவனை எல்லோரும் புறக்கணித்துத் தெருவில் நிறுத்தியது போல ஒரு முறிவு. எங்கே போவது?
குடையின் மீது படபடவென்று கற்கள் விழுவது போல் சப்தம், தெருவில் ஆலங்கட்டிகள் இறைந்து அவன் முழங்காலின் மீது தெறித்தன. ஒன்று பலமாக விழுந்தது. அப்பாடா, என்ன வலி!
ராஜாமணி ஏதோ ஒரு வீட்டு ஓரமாக ஒதுங்கினான். படியேறி நிலைத் திண்ணைகள் தெரிந்த பகுதியில் நின்றான். அது யார் வீடு எங்கே நிற்கிறோம் என்ற பிரக்ஞை கூட இல்லை.
ஆலங்கட்டிகள் புளியம்பழம் போல் உதிர்வதை ரசிக்க முடியாமல் அரைச் சலிப்போடும் அரைச் சோர்வோடும் ஜடமாகி நின்றான்.
“உள்ளே வந்து நிக்கறது தானே!” - பின்னால் ஒரு பெண் குரல், திடுக்கிட்டுத் திரும்பினான். நிலைத் திண்ணைக்கப் பின்னால் நெடிய கம்பி அடைப்புக்கு அப்புறம் மழமழவென்ற சிவப்புக் காரையில் விசாலமான திண்ணையைத் தாண்டி ஜன்னல் அருகில் ஒரு சிரிப்போடு அவள் நின்று கொண்டிருந்தாள்.
ராஜாமணிக்கு முதலில் தெரிந்தது அவள் நெற்றியிலிருந்து வட்டமான குங்குமப் பொட்டுதான். மை தீட்டிய பெரிய கண்கள். கண்ணைச் சிரிக்க வைத்து, மனசில் எதையோ சிதைக்கிற மாதிரி ஒரு பார்வை. தாம்பூலத்தால் ரத்தமாகச் சிவந்திருந்த பெரிய உதடுகளில் பிரியம் என்ற வலையில் இழைகளாய் நீண்ட சிலந்திப் புன்னகை.
‘இந்த வீட்டின் பக்கமா ஒதுங்கி விட்டோம் என்று அவனுக்கு திக்கென்றது. இருக்கட்டும் பரவால்லே” என்ற அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
“அட மழையிலே நனையாமே திண்ணையிலே கொஞ்ச நேரம் இருந்திட்டுப் போறது.”
ராஜாமணிக்கு இறங்கி நடந்து விடலாமா என்ற அச்சம் வந்தது. வெகு தூரத்துக்கு வீடுகள் இல்லை.
‘நான் ஏன் பயப்பட வேண்டும், என்னை மீறி இவள் என்ன செய்து விடப் போகிறான்?’ என்று அவன் திடப்படுத்திக் கொண்டான்.
இப்போது அவள் ஜன்னலை விட்டு அகன்று நிலைக் கதவைத் திறந்து கொண்டு நெடுங்கம்பிகள் அடைத்த கதவையும் திறந்தவாறு வெளியே அவன் அருகில் வந்து நின்றாள். ராஜாமணி அவளைப் பார்க்கக் கூடாது என்று வேறுபுறம் திரும்பி நின்றான்.
பட்டுப் புடவையும் சென்ட்டும் தாம்பூலமும் மல்லிகையும் ஒன்று மாற்றி ஒன்று மணத்து அவன் மனோபலத்தைப் பரீட்சை செய்தன.
“ஆலங்கட்டி மழை இல்லே, இப்படிப் பேஞ்சி ரொம்ப நாளாச்சு. அப்பப்பா! என்ன ஜிலுஜிலுன்னுது!”
அவள் பேச்சுக் கொடுத்தாள். அந்தக் குரலில் ஓர் இனிமை. உயிர் கவ்வும் மோகன இனிமை.
“ஆமாம்” அவன் திரும்பாமல் பதில் சொன்னான்.
“ஏன் பிடிவாதமா இங்கே நிக்கறீங்க? உள்ளே வந்து கொங்ச நேரம் உட்கார்றது... நான் என்ன ஒங்களை முழுங்கிடவா போறேன்?”
அஸ்திரங்களைப் பிரயோகிப்பதில் அவள் சாமர்த்தியசாலி போலிருக்கிறது.
“எதுக்கு சிரமம்” என்றபடி அவள் பக்கம் ராஜாமணி திரும்பினான்.
‘அப்பா! அது என்ன மதமதவென்று மஞ்சள் எலுமிச்சை நிறமாய் நெடு வடிவில் கடைந்து வைத்த மேனி. அவள் மேல் திரும்பிய பார்வையை உடனே எடுக்கத் தவறி விட்டான் ராஜாமணி. வயது முப்பதோ கூடவோ... பருமன் அதிகம் தான். ஆனால் பூதாகாரமாக இல்லை. அந்த உயரத்திற்கு இசைவாய் இருந்தது. நீராவி மாதிரி தெரிந்த கறுப்பு ஃபுல்வாயில் ஜாக்கெட்டில் ஜாக்கெட் பிடிப்புக்குக் கீழே பிதுங்கிய சதை, பொற் பூக்கள் இறைத்த முந்தானையின் நழுவல் வேண்டுமென்று தானா!
‘தெய்வமே! எனக்கு என்ன நேரப் போகிறது?’
திறந்த வயிற்றிலும் இடைச் சரிவிலும் அந்தக் கறுப்பு ஜாக்கெட்டில் ஊடாடிய ப்ராவின் பட்டையிலும் அவன் பார்வை இடறி இடறி விழுவதை அவனால் தடுக்க முடியவில்லை.
மழை திசையை மாற்றிக் கொண்டு அவன் நிற்பதற்கு நேர்முகமாயிற்று.
“ஐயயோ! நனைஞ்சுட்டீங்களே! ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கணும்? உள்ளார வந்து நிக்கப்படாதா?” அவள் வாஞ்சை குழைய அழைத்தாள்.
மனமுறிவுக்கு அப்பேர்ப்பட்ட ஒரு கரிசனம் அப்போது இதமாக இருந்தது.
ராஜாமணி படியேறி உள்ளே போய், சிவப்புக்காரை போட்டத் திண்ணையில் உட்கார்ந்தான். மடித்து வைத்த குடையை எங்கே வைப்பது என்று தெரியாமல் அவன் திகைத்தபோது, “இப்படிக் கொடுங்க!” என்ற அவன் கையை உரசியவாறு அவள் வாங்கினாள். மெத்தென்ற அந்த ஸ்பரிசம் பட்டதும் ராஜாமணியின் உடம்பில் ஒரு ஜுர நடுக்கம் உண்டாயிற்று.
“ஒடம்பெல்லாம் நனைஞ்சு போச்சே! இருங்க, துண்டு கொண்டு வர்றேன்” என்று அவள் உள்ளே போய் ஒரு டர்க்கிடவலை எடுத்து வந்து நீட்டினாள். கும்மென்றுஅந்த டவல் மணத்தது. அவன் வாங்கி முழங்கைகளையும் தலையையும் துடைத்துக் கொண்டான்.
“இந்த மழையிலே அப்படி என்ன வேலையோ...?” அவன் உரிமையும் செல்லமும் கலந்து கோபித்துக் கொண்டாள்.
“ஒரு ஃபிரண்டைப் பார்க்க வந்தேன்” - அவன் மிடறு வியங்கியவாறு பதில் சொன்னான்.
“அடடே பேண்ட் எல்லாம் நனைஞ்சு போயிருக்க. சட்டையும் தொப்ப கட்டையாகி இருக்கு. உள்ளே லுங்கி வச்சிருக்கேன். வாங்க கொஞ்ச நேரம் கழட்டிக் காயப் போடுங்க.”
அவன் மனத்தோடு பலப்பரீட்சை செய்தான்.
“ஏன் இப்படிக் கூச்சப்படறீங்க? வீட்டிலே யாரும் இல்லே. நான் ஒண்ணும் ஒங்களை மென்னு முழுங்கிடமாட்டேன்.”
முறியடிக்கப்பட்டவன் போல் அலைக் கழிந்தான். ராஜாமணி, அவனால் மேலும் பலப்பரீட்சை செய்ய முடியவில்லை. அவள் கை சுவாதீனமாக அவன் புஜத்தைத் தொட்டது.
... ... ... ...
எவ்வளவு குழைவாக, சுபாவமாக, சகஜமாக, நளினமாக அவள் அவனை மென்று விழுங்கி விட்டாள்!
எதிரில் பிளாஸ்டிக் கயிற்றில் அவன் பேண்ட்டும் சட்டையும் அவன் இரையானதன் சாட்சியங்களாகத் தொங்கின. இரை தின்ற மலைப் பாம்பு போல் கட்டிலில் அவன் மார்பின் மீது அவள் நெளிந்தாள் கட்டிலின் விளிம்புக் கட்டை மீது அவளது பட்டுப்புடவை குப்பையாக விழுந்திருந்தது.
“பார்க்க ரொம்பக் கூச்சமான பிள்ளை மாதிரி இருந்தது அடேயப்பா!”
அவள் வார்த்தைகள் ஈயமாக அவன் காதில் விழுந்தன. அவளது செருகிய விழிகளும் முகமெல்லாம் தீற்றிய மாதிரி கலைந்த பொட்டும் படுக்கையில் சிதறிய மல்லிகையும் அவனுக்குக் குமட்டின.
‘ஜமுனா... ஜமுனா... நீ என் என்னைக் கைவிட்டாய்?’
சாக்கடையில் ஒரு புழு மாதிரி நெளிவதாக ராஜாமணி உணர்ந்தான்.
எந்த முகத்தோடு வீட்டுக்குப் போவது? அந்த வீட்டு வாசலை மிதிக்க எந்தத் தகுதி இன்னம் மிச்சமிருக்கிறது?
ராஜாமணி அவளை உதறிக் கொண்டு எழுந்தான். வெளியே மழை நின்றிருந்தது.
‘விதியே, எந்த அதலபாதாளத்திற்கு என்னைத் தயார் செய்கிறாய்? இது ஏன் நடந்தது? ஏன்? என்னால் ஏன் அவள் என் முதுகைத் தடவிய போது உதறிக் கொண்டு ஓடிப் போக முடியவில்லை?’
நான் நிராதரவாக இருப்பதை எவ்வளவு சுலபத்தில் இவள் யூகித்து விட்டாள்.
‘என் லட்சியங்கள்... ஜமுனா... எல்லாம் இவ்வளவு தானா? நான் சகதியில் மிதிபடத்தான் பிறந்திருக்கிறேனா வெறும் உடம்பின் சதைச் சூட்டில் கருகி விடும் சாம்பல் பிராணி தானா நான்?’
ராஜாமணி ஈட்டியால் தன்னை மானசீகமாகக் குத்திக் கொண்டான். கத்திகளால் கிழித்துக் கொண்டான்.
‘இவள் எதற்கு என்னை மயக்கினாள்? காசுக்கா...?’
சட்டை அணிந்து கொண்டு பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு அவன் மணிபர்ஸை எடுத்தான். இழவுச் சாப்பாடாக இருந்தும் பில் கொடுக்கும் நோக்கத்தில், நாலைந்து நோட்டுகளை நீட்டினான்.
“ப்பூ! பணமா? ஒனக்கு வேணும்னா சொல்லு. நான் தர்றேன்!”
அவள் வெட்கமின்றி அலட்சியமாகச் சிரித்தவாறே இன்னும் கட்டிலில் படுத்திருந்தாள். ரத்தப் பசி கொண்ட பிசாசைப் பார்ப்பது போல் அவளைப் பார்த்துப் பயந்தான்.
“அடிக்கடி வந்து போய்ட்டிரு. எப்ப வந்தாலும் ராத்திரி ஒன்பது மணிக்கு மேலே வா...” அவள் எழுந்து வந்து சட்டையணிந்த அவன் மார்பின் மீது மீண்டும் விழுந்தாள்.
“சீ” என்று உதறிவிட்டுக் குடையை எடுத்துக் கொண்டு அவன் தலை குனிந்தவாறே திரும்பிப் பார்க்காமல் வெளியேறினான்.
முற்றிலும் நம்ப முடியாத கேவலமாக எல்லாம் தோன்றிற்று. அந்த உடம்பிற்கு எத்தனை பசி. அந்தப் பசியைத் தணிக்க மீண்டும் மீண்டும் தணிக்க ஒரு கருவியாகத் தான் இழிந்து போனதை நினைக்க, துக்கம் ராஜாமணியின் தொண்டையை அடைத்தது.
‘ஜமுனா.. ஜமுனா! உன்னை நினைப்பதற்குக் கூட எனக்கு யோக்யதை போய்விட்டது.’
மழை நீர் வடிந்த சாலையில் பிரவேசித்தபோது அவன் சற்றுத் தெளிவுற்றான்.
பறந்து போகத் துடிக்கும் மனசிற்கும், உதைத்து எழுந்து நட்சத்திரமாகச் சீறிக் கொண்டு போக விரும்பும் பாதைக்கும் கன்னத்தில் அடி விழுந்தது போல் ஒரு பாடம்.
காவல் இல்லாத வாழ்வை, காக்கையும் நரிகளும் கொத்தித் தின்றுவிடும் என்று ஓர் எண்ணம் எழுந்தது. அவன் உடம்பு மெல்ல நடுங்கிற்று.[தொடரும்]


ஜமுனா-15

ஜமுனா-15
அநேக தடவை ரங்கையர் ஜான்ஸனைச் சந்தித்திருக்கிறார். ஒய்.எம்.சி.ஏ-வில் டீ பார்ட்டி நடக்கும்போது, ராகவன் படிக்கிற காலத்தில் அப்புறம் சந்தர்ப்பம் கிடைத்த வேளையில், சமயத்தில் தெருவில் எதிர்ப்படும் போது, தலை நரைத்து, புருவம் நரைத்து கண்ணிமைகள் கூட நரைத்து விட்டாலும் அந்த முகம் பால்ய வயதுப் பையன் மாதிரி இளமைச் சாயல் மாறாத முகம். வெள்ளை வெளேரென்ற ஐரோப்பிய வெளுப்பில், முழங்கையை முட்டும் அரைக்கை ஷர்ட், நாலு முழம் வேஷ்டி, கையை வீசி வீசிப் போட்டபடி தோள்களை அசைத்து கொண்டு ஒரு மாலுமி நடை நடப்பார். மஞ்சள் பாரித்த பல் வரிசையைக் காட்டியவாறு ஜான்ஸன் சிரிக்கும்போது, முகத்தைத் தொங்கப் போடும் வருத்தம் ஒன்றைப் பார்த்து குறும்புக்காரச் சிறுவன் ஒருவன் சிரிப்பது போலிருக்கும்.
அவருக்குக் கவலை இல்லை, சொந்தத்திற்கு என்று இரண்டு சட்டை, இரண்டு வேஷ்டி, ஆஸ்தி அதுதான். எங்கோ ஸ்காட்லாந்தின் கிராமத்தில் ஓடை போகும் காட்டோரத்தில் சொத்து வீடு குடும்பம் எல்லாமிருந்தும் கிறிஸ்துவின் நற்செய்தி அவரது மனசில் நங்கூரமிட்ட நாளிலிருந்து யாவும் அர்த்தமற்றுப் போயின.
பாதிரியாகி மதத்தைப் பரப்பும் ஆவலோ, பிரசங்க மேடைகளில் அங்கியும் ஆபரணங்களும் தரித்துக் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேட்கையோ அவருக்குப் பிடிக்கவில்லை. உபதேசிக்கப்பட்டவற்றை வாழ்ந்து பார்க்கும் எண்ணம்தான் மேலோங்கிற்று.
மாண்ட்ரீலில் அவர் இதயத்தைப் புரிந்து கொண்ட ஜிம் பாட்டர்ஸன், அவரை இந்தியாவுக்கு அனுப்பினார்.
திருப்பத்தூரின் அடர்ந்த மரங்கள் இருளடித்திருந்த ஒரு மூலையில், ரயில்வே ஸ்டேஷன் அருகாமையில் ஜான்ஸனின் மனம் சென்று நின்றது. பறவைகள் பாடிய அந்தப் பிரதேசத்தில் ஒய்.எம்.சி.ஏ-வுக்கு ஒருநாள் ஒரு கொத்தனார் முதற் செங்கல்லை எடுத்து வைத்தது ரங்கையருக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது.
ஜான்ஸன் பிரம்மசாரி. யாராரோ பெற்ற பிள்ளைகளைச் சொந்த பிள்ளைகளாகக் கருதி வளர்க்கக் குடும்பம் என்ற ஒன்று இடம் தராது என்று நிர்ணயித்தவர்.
ஐந்தாம் வருஷம் ஜான்ஸனைத் தவிர வேறு பிள்ளைகள் இல்லாத அவரது தாய், ஸ்காட்லாந்தின் கிராமத்து ஓடையருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது காலமானாள். சொத்து முழுவதையும் ஒய்.எம்.சி.ஏ-வுக்கு உயில் எழுதி விட்டு! கேபிள் வந்த போது ஏலகிரி மலைக்கு மாணவர்களைப் பிக்னிக் அழைத்துச் செல்ல ஜான்ஸன் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அங்கே பத்து நாள் காம்ப்.
கேபிளைப் படித்ததும், ஐந்து நிமிஷம் அவர் தன் ஆபீஸ் ரூமுக்குள் போய் உட்கார்ந்தார். நாற்காலிக்கு நேர் எதிரில் சிலுவையில் புன்னகையோடு தொங்கும் மனுஷ குமாரனின் படம் இருந்தது.
‘மரிதோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும். நீ என்னைப் பின்பற்றி வா!’ என்று தகப்பனின் அடக்கத்துக்குப் போக அனுமதி கேட்ட சீடனுக்கு ஏசு சொன்ன வாக்கு. அகச் செவியில் கேட்ட, சலனம் நின்றது.
அவரது தாய்க்கு வயது தொண்ணூறு, முதிர்ந்த பழம், ஜான்ஸன் அதுவரை அவள் பொருட்டுக் கண்ணீர் சிந்தியது இல்லை. கர்த்தரின் சேவையில் ஒப்படைக்கப்பட்ட வாழ்க்கையில், கண்ணீருக்கு அவசியமே இல்லை என்று அவர் கருதினார். குறுகுறுத்த கண்கள் சாந்தி பெற்று விட்டன. ஏசு சிலுவையிலிருந்து மீண்டும் புன்னகை செய்தார்.
‘ஒரு பிள்ளையை என் நாமத்தில் நிமித்தம் ஏற்றுக் கொள்கிறவன் என்னை ஏற்றுக் கொள்கிறான்.’
ஜான்ஸன் தெம்பு கொண்டார். ஒலிவ மலைக்க அருகே பெத்பகேயின் தேவாலயத்தில் மனுஷமாரனுக்கு குழந்தைகள் ஓசன்னா சொன்னபோது, கோபித்துக் கொண்ட பிரதான ஆசாரியருக்கும் வேதபாரகர்களுக்கும் அவர் சொன்ன மறுமொழி நினைவில் மின்னிற்று.
‘குழந்தைகளுடைய வாயினாலும், பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா?’
ஜான்ஸன் எழுந்து வெளியே போய் விசிலை ஊதினார். சிறுவர்கள் முன் காம்புக்குக் கையை வீசி வீசிப் போட்டவாறு அதே மிடுக்குடன் முன்பே நடந்தார். அவரது தாய், ஓடைக்கு அருகே அடக்கம் பண்ணப்பட்ட செய்தி வந்ததும் கர்த்தரின் நாமத்தை வாழ்த்தினார். அவர் வாயில் ரங்கையர் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டிருக்கிறார்.
ஜான்ஸனின் ஒவ்வொரு சந்திப்பிலும், ரங்கையரின் மனசு பளு குறைந்த மாதிரி குளிர்ந்த அருவியில் குளித்த மாதிரி உற்சாகம் பெறும். இந்த முறை அந்தச் சந்திப்பு வேறு விதமாக இருந்தது. மழை வெள்ளம் வடிந்து ஒய்.எம்.சி.ஏ-வின் மைதானமும் மரங்களும் குளிர்ந்திருந்தன.
ரங்கையர் கனத்த உள்ளத்தோடு சில்லிட்டிருந்த சிமெண்ட் படிக்கட்டில் ஏறியவுடன் ஜான்ஸன் எதிர்ப்பட்டார்.
‘ஹல்லோ, ரங்கையர்!’ ஜான்ஸனின் குரலில் ஒரு வினோதமான சீழ்க்கை கலந்திருந்தது. மூன்று வருஷமாக அவர் ஈசனோபிலியாவில் அவதிப்பட்டு வந்தார். அதனால் பேசும்போது மூச்சிழுப்பில் விசில் ஓசை வரும்.
ஜான்ஸனின் பெரிய கை அவர் உள்ளங்கையை மெதுவாக அழுத்தித் தோளைத் தொட்டது.
“இங்கே வான்டாம். மேலே போய் பேஸ்வோம்” என்று ஓர் ஐரோப்பியக் கொச்சையில் சொன்னார்.
ரங்கையருக்கள் பூகம்பம் ஒன்று கிடுகிடுத்தது. ஜான்ஸனின் முகத்திலும் ஸ்பரிசத்திலும் அமிதமான பரிவு, எந்த இடத்திலும் பேசுபவர், அவர் ஏன் மேலே கூப்பிடுகிறார்?”
“எதைச் சொல்லப் போகிறார்?”
ரங்கையர் தேக்குக் கிராதியிட்ட மாடிப்படியின் பிடிச்சவரை ஆதாரமாகப் பற்றிக் கொண்டே மாடியேறினார்.
“உக்காருங்கோ ரங்கையர்” என்று நாற்காலியைக் காட்டி விட்டு எதிரில் ஒரு ஸ்டீல் சேரில் ஜான்ஸன் அமர்ந்தார்.
“உங்கள் வூட்டு எனக்கு தெரியாது. இல்லேன்னா நான் வந்து இருப்பேன். ஜீசஸ், மனுசனுக்கு ரொம்ப சோதனை வக்கிறார். மன்சன் தாங்கணும். எய்ந்து மர்படியும் நிக்னம்.”
ரங்கையர் அவரையே மெதுவாய்த் தலையசைத்தவாறு பார்த்தார்.
“நீங்கள் உர்தி ஆனவர். சோதனை வந்து இருக்கு. எனக்கு ரொம்ப வர்தம். ரங்கையர்... ஜீசஸ் உங்கள் மன்ஸ்க்கு இன்னம் உர்தி தர்வார்” என்று சொல்லி விட்டுக் கண்களை மூடிக் கொண்டார். எதையோ எப்படித் தெரிவிப்பது என்று அவர் தனக்குள் தயங்குவது வெளிப்படையாகத் தெரிந்தது. அந்தச் சங்கடத்திலிருந்து அவரை மீட்க வேண்டிய கடமையை ரங்கையர் உணர்ந்தார்.
“தைரியமா சொல்லுங்கோ... எதுவானாலும் நேர்ந்தப்புறம் மனுஷாள் ஏத்துக்க வேண்டியது. அதானே?”
“எஸ்..எஸ்” என்று அவரைப் பார்த்துப் பலமாக ஆமோதிப்பது போல் தலையை ஆட்டினார் ஜான்ஸன்.
“உங்கள் பையன் ராகவன்... ம்ம்ம்...ஷிப் ஆக்ஸிடெண்ட்லே காலமாயிட்டான்.”
ஜான்ஸனின் வாயிலிருந்து அந்த வார்த்தை வெளியானதும் அவருள் நடுங்கிக் கொண்டிருந்த அந்த பூகம்பம் வெடித்தது. முதலில் அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியவில்லை. வெறும் சொற்கூட்டம் போல் ஒரு நொடி தோன்றிய அவை திடீரென்று பூகம்பமாய் வெடித்தன.
நாற்காலியின் கைப்பிடியை ரங்கையர் இறுகப் பற்றிக் கொண்டார்.
அப்போது திடீரென்று ஒரு பேரிரைச்சலோடு, ஜன்னலுக்கு வெளியே தெரிந்த தண்டவாளங்களில் ஓர் எக்ஸ்பிரஸ் வண்டியின் என்ஜின் பாய்ந்து பார்வைக்கு மறைந்தது. கடகடத்துக் கொண்டு தொடர்ந்த, ரயில் பெட்டிகள் ஜான்ஸனின் சொற்கள் உருவாக்கிய பெரிய சூன்யத்தை மிதித்துக் கொண்டு பறந்தன.
“ஆய்ல் டாங்கர் வெடிச்சு ராகவன் காலம் ஆய்ட்டான்.”
ரங்கையர் குமுறி வந்த அழுகையை மேல் துண்டை எடுத்து வாயில் புதைத்தவாறு அடக்கினார்.
“ராகவா... இந்த முடிவுக்கா இவ்வளவு சாகசம் பண்ணே? மெடல் மெடலா வாங்கினே... கப்பு கப்பா ஜெயிச்சே... மரம் ஏறினே... குதிச்சே... எத்தனை சாகசம்டா மகனே... எத்தனை சாகசம்! செஞ்ச சாகசம் போறும்னு பகவான் முடிவு கட்டிட்டானோ? ஒங்கம்மா இருந்தா அவ மனசு எப்படி வெடிச்சுப் போயிருக்குண்டா... மகனே!”
புத்திரபாசம் ரங்கையரைச் சிறிது நேரம் பித்தனாக்கி விட்டது. எதிரில் ஜான்ஸன் இல்லாமற் போயிருந்தால் அவர் கதறிக் கதறித் துடித்திருப்பார். வாயில் புதைத்திருந்த துண்டைப் பற்கள் இறுகக் கடித்தன. மார்பு விம்மி விம்மி அடங்கி எழுந்தது.
அந்த வயதான தந்தையின் விழுதுகள் அறுந்து போன சேதி தன் வாயால் வர நேரிட்ட துன்பத்தை ஜான்ஸன் மௌனமாக அனுபவித்தார்.
ரங்கையர் சுயநிலைக்கு வந்தபோது, அந்த இடைவெளியில் பல வருடங்கள் அதிகமாய் வயது கூடிப் பாதிக்கு மேல் பலம் அழிந்து போனதை உணர்ந்தார்.
“எனக்கு ரொம்ப ரொம்ப வர்தம் ரங்கையர். இன்னும் ஒரு சங்தி. ராகவன் கல்யாணம் பண்ணிக்கிட்டான். ஒரு ஆண் கொழந்தை இருக்கு. அவன் வைஃப் ஒரு அமேரிக்கன். ரெண்டு பேரும் கீலே இர்காங்கோ. உங்கள்கிட்டே பேஸ்னுமாம். அவுங்கோ இன்னிக்கி காலை ரயில்வே வன்தாங்கோ.”
ரங்கையரை முறுக்கிப் பிழிந்து யாரோ வீசியெறிந்தது போல் அவர் உணர்ந்தார்.
‘பகவானே... என்னை ஏன் இப்படிச் சோதனைக்கு மேலே சோதனை பண்றே? ராகவா, மிலேச்சப் பெண்ணையா கல்யாணம் பண்ணிண்டே? போன லீவிலே வந்தபோது ஒரு வார்த்தைகூட சொல்லலியே... என் ஆசாரத்தின் மேலேயும் சீலத்தின் மேலேயும் சேத்தை வாரி எறைச்சுட்டு அத்து வானத்திலே என்னை நிறுத்திட்டுப் போயிடற சங்கல்பத்தோட தான் எனக்கு மகனாகப் பொறந்தியா? ஆண் கொழந்தை வேறே இருக்காமே!’
சூறைக் காற்றில் உதிர்ந்த இலை பறப்பது போல அவர் மனம் சுற்றிச் சுழன்றது.
“கூப்டுகினு வர்றேன்.”
ஜான்சன் கீழே போய் ஓரிரு நிமிஷத்தில் திரும்பி வந்தார்.
ரங்கையரின் அனுமானங்களை பொய்த்துப் போகச் செய்தவளாக அந்த அமெரிக்கப் பெண், கையில் குழந்தையோடு உள்ளே வந்தாள். மிதமான உயரம் சிறிது இந்தியக் களை தெரிகிற முகம். மருளுகிற மான் கண்கள்.
வெள்ளை வாயில் புடவை, வெள்ளை ரவிக்கை, புடவை கட்டிப் பயிற்சி வந்துவிட்ட மாதிரி உடம்புக்குப் பொருத்தி விட்ட மாதிரி, அந்த உடையில் ஒரு பாந்தம், பொன்னிறமான கேசம். அதைச் சுற்றி முறுக்கிக் கோடாலி முடிச்சிட்டிருந்தாள்.
நேரே வந்தவள், கை கூப்பிக் குழந்தையோடு நமஸ்கரித்தாள். பிறகு, குழந்தையை அவர் காலடியில் போட்டு விட்டுத் தானும் அவரது பாதத்தை தொட்டு வணங்கினாள்.
“தீர்க்காயுஸா இரும்மா” என்ற தொண்டை கரகரக்கக் கூறினார். அவளுக்கு அது புரியுமா என்ற சந்தேகம். இன்னும் காலடியில் தவழ்ந்த குழந்தையை ரங்கையர் குனிந்து தூக்கினார்.
எல்லாம் கனவில் நடப்பது போல இருந்தது.
குழந்தை அவரைப் பார்த்து சிரித்தது. ராகவனின் மூக்கு, ராகவனின் நெற்றி, அதே காதுகள், வாய் அவன் தாயைக் கொண்டிருந்தது. கண்கள் அவனுடைய அம்மா மாதிரி நீலம், துயர் இல்லாத உல்லாச நீலம். அவரது மார்பில் எதுவோ இளகிப் பாகாக ஓடிற்று. குழந்தையை மார்புறத் தழுவிக் கொண்டார். வம்சக் கொடி!”
பேச்சற்ற அந்த நிமிஷங்கள் முடிந்தன.
“உன் பேரென்ன?” என்று அவளிடம் கேட்டார்.
“ஹி ஈஸ் ஆஸ்கிங் யுவர் நேம்” என்று ஜான்ஸன் மொழி பெயர்த்தார்.
மாமனாரும் மருமகளுக்கும் இடையில் மொழி பெயர்ப்பு தேவையா இருக்கிற அந்த வினோதம் ரங்கையர் மனசைப் பிளந்தது.
“என் பெயர் மோனிகா மில்லர்...” என்று கொச்சைத் தமிழில் அவள் பதில் சொன்னாள்.
“ராகவனுக்கும் உனக்கும் கல்யாணம் ஆகி எத்தனை நாளாச்சு?”
“ரெண்டரை வருஷம்”
“கல்யாணம் எங்கே நடந்தது? சர்ச்சிலா, ரிஜிஸ்டர் ஆபீசிலா?”
“பாம்பே மஹாலக்ஸ்மி கோவுல்லே.”
அவர் அதிர்ச்சியுடன் பார்த்தார்.
“ரகு எனக்கு தாலி கட்டித்தான் கல்யாணம் நடந்தது. புரோஹித் மந்த்ரம் சொன்னார். நாங்கள் நெருப்பு சுத்தி வந்தோம்.”
சாஸ்த்ரீயமாக நடந்த விவாகம் தான்.
அப்படியானால்... அப்படியானால்... அவள் சர்ச்சுக்குப் போவதில்லையா?
“நீ ஒரு கிறிஸ்துவப் பெண் தானே?”
“இல்லே ஹிண்டு, ரகு என்னை ஹிண்டு ஆக்கிட்டார்.”
பேதைப் பெண். இந்துவாக யாரும் மாற முடியாது! இந்துவாக ஒருவர் பிறக்கத்தான் முடியும். இதை அவன் அவளிடம் தெரிவிக்கவில்லையோ?
குழந்தை நெளிந்து வீறிட்டது. அவளிடம் அதை நீட்டினார்.
“குழந்தைக்குப் பேர் என்ன?”
“யோகி”
ராகவனின் விதவையாக ரங்கையரின் மாட்டும் பெண்ணாக மோனிகா மில்லர் அவர் வீட்டில் வாழ வந்திருப்பதாகத் தெரிவித்த போது, மகத்தான சோதனை ஒன்று ரங்கையர் முன்பு விஸ்வரூபம் எடுத்தது.[தொடரும்]


Sunday, 3 February 2013

ஜமுனா-14


14
“சின்னக் கொழந்தை மாதிரி பிடிவாதம் பண்ணினா எப்படி? மறுபடியும் மழை வர்றாப்பிலே வானம் மூடிண்டிருக்கு, நான் போடமாட்டேன்.”
“இதிலே பிடிவாதம் என்ன டீ... வயறு எரியறது. வேறே எதுவும் பிடிக்கல்லே. கொஞ்சம் தயவு பண்ணுடீ...”
“ரூம்லே ராஜா ஷேவ் பண்ணிண்டிருக்கான். ரொம்ப கொஞ்சாதேள். கேட்டா சிரிப்பான்.”
“இல்லேன்னா ஒன் பிடிவாதமும்... என் அடக்கமும் அவனுக்குத் தெரியாதாக்கும்?”
“அடக்கம்...அடடா... அப்பப்பா! எவ்வளவு அடக்கம்... காரியம் முடியணும்னா ஐஸா கரைவேள்!”
“இல்லேன்னா பந்தமா எரிவேனாக்கும்?”
“நீங்க பந்தமாகவும் எரிய வேணாம், ஐஸாவும் கரைய வேணாம். என்ன பல்டி அடிச்சுட்டாலும் நான் போட முடியாது.”
கீழுதட்டை மடித்தவாறு ரேஸரை பக்குவமாக சோப்பு நுரை வழிய இழுத்துக் கொண்டிருந்த ராஜாமணிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அவனுடைய தந்தை ஆனந்தராவுக்கும் தாய் கங்காபாய்க்கும் மத்தியில் இப்படி ஒரு விளையாட்டு அடிக்கடி நடக்கும். அந்த வயதான தம்பதிகள் மத்தியில் பிசிரில்லாத பந்தம் இருப்பதை, அந்தக் கொஞ்சலும், கோபமும் தெரிவிக்கும், மனம் ஈடுபட்டு அவன் ரசிப்பான்.
“என்னப்பா அது?” என்ற அறையிலிருந்தவாறே குரல் கொடுத்தான்.
“ஒண்ணுமில்லேடா” என்ற ஆனந்தராவின் குரல் தயங்கியவாறு வந்தது.
“ஒண்ணுமில்லையா? நான் சொல்றேன் கேளுடா ராஜா. இவ்வளவு குளுந்திருக்கு... காலையிலே பழையதக்கு தயிர் விட்டுண்டு, வடுமாங்காய் கடிச்சுண்டு சாப்பிடணுங்கிறார். ஏற்கனவே ஈர ஒடம்பு, ஊசியும் மருந்தும் இப்பத்தான் போயிட்டு வர்றேன்னு கிளம்பியிருக்கு, இதுக்குள்ளற பழையதைச் சாப்பிட்டு ஒடம்பைக் கெடுத்துண்டாத்தானே. டாக்டர் ஆத்துக்குப் போய் மணிக்கணக்கிலே அரட்டை அடிக்கலாம்.”
“டாக்டர் ரங்கநாதன்ட்டே கேட்டேன். அவர், பழையது, தயிர், வடுமாங்காயிலே எந்த வகையான அப்ஜெக்ஷனும் கிடையாதுன்னுட்டார்.”
“ஒங்க உடம்பு அவருக்கு என்ன தெரியும்?”
“அவர்கூட அதையே தான் டெய்லி சாப்பிடறாராம். இதோ பார் ஆனந்தராவ், இந்த இட்லி சாம்பார் மசால் தோசையிலே இருக்கறதெல்லாம் விட எஃபக்ட் அதுலேதான் இருக்குன்னார்.”
அறையில் இருந்தவாறே ராஜாமணி குறுக்கிட்டான்.
“பேசாம போடேம்மா... இவ்வளவு தூரம் அப்பாவைக் கெஞ்ச வைக்கறியே?”
“நீ சும்மா இருடா. நோக்கென்ன தெரியும்? அவஸ்தைப்படறவர் அவரா, டாக்டர் ரங்கநாதனா?”
“அடியே... அடியே... நீ பெரிய எம்.டி. மாதிரி பேசாதே டாக்டர் ரங்கநாதன் பெரிய ஜீனியஸ்...”
ஆனந்தராவுக்கு நாக்கு சாப்பிட்டு விட்டது.
“சரி... வேறே என்ன பண்ணியிருக்கப் போறே... ரவா உப்புமா தானே... விடிஞ்சா ரவா உப்புமா... பொழுது போன ரவா உப்புமா... ம்..ம்...ம்...”
மனம் விழுந்த மாதிரி அவர் பேசியது கங்காபாய்க்குப் பொறுக்கவில்லை. அதிகமாய்த்தான் அவரை ஆட்டிப் படைக்கிறோமோ என்று சுரத்து குறைந்தது.
“நேக்கென்ன வந்தது? நல்லதைச் சொன்னா கேக்க மாட்டேள். படறச்சே, நானும்னா சேர்ந்து அவஸ்தைப்படறேன். நாக்கை அடக்க மாட்டேள். பழையதையே கொண்டாறேன். திருப்தியா இருங்கோ.”
கங்காபாய் எப்போதும் கடைசியில் விட்டுக் கொடுத்து விடுவாள். இதுவும் ராஜாமணிக்குத் தெரிந்த சங்கதி தான்.
கூடத்திலிருந்து ஆனந்தராவ் குரல் கொடுத்தார்.
“ராஜா, ஷேவ் பண்ணிக்கிறியா?”
“ஆமாம்ப்பா...”
“குளிச்சிட்டு எங்கே போகப் போறே?”
“ஹர்த்தால் தமாஷ் பார்க்கலாம்னு இருக்கேன்.”
“நான் ஒரு கோழித் தூக்கம் போட்டுட்டு கடைக்கு வர்றேன்.”
அவருக்கு உடல் நிலை சரியில்லை. ஓய்வு தேவையென்று டாக்டர் சொன்னது ராஜாமணிக்குக் கவனம் வந்தது.
“நானே போறேம்பா. நீங்க ரெஸ்ட் எடுங்கோ!”
“இந்தாங்கோ, ஒங்க பழைய சாதம்” என்று கங்காபாய் வந்தது போட்டது. எதுவும் மனசில் ராஜாமணி. அப்பாவிடம் ஜமுனாவைப் பற்றிய பேச நினைத்த யோசனையைத் தள்ளிப் போட்டான். ஒரு பெண்ணால் முகத்துக்கு எதிரில் நிராகரிக்கப்பட்டு விட்ட சோகம் மனதிற்குள் இன்னும் பெரிய பளுவாகத் தங்கியிருந்தது.
கண்ணாடியில் முகத்தைப் பார்த்தான்.
‘இந்த மூக்கு... கண்... உதடுகள்... நண்பர்கள் வீட்டில்... ஹைஸ்கூலில்... எத்தனை பெண்கள் அவனிடம் பிரியமாய்ப் பேசுகிறார்கள். எங்கே போனாலும் அவனுக்கு ஒரு செல்ல மாப்பிள்ளை மாதிரி என்ன வரவேற்பு... எத்தனை பெண் உள்ளங்கள் அவன் மனசோடு ரகசியம் பேசத் துடித்தன.’
கண்ணாடியில் மீண்டும் முகத்தைப் பார்க்கத்தான்.
‘என்ன அகந்தை ஒனக்கு! நான் போய் நேரடியாக ஜமுனா மாதிரி ஒரு அபூர்வமாக அழகியைக் காதலிக்கிறேன் என்றதும், அவள் காலடியில் மயங்கி விழுந்துவிட வேண்டுமோ...? இது என்ன கொழுப்பு? அதற்காகத் தான் பிளேட் கூட ஷேவிங் செய்யும்போது வெட்டி விட்டது’ என்று நினைத்தான்.
மோகன் மாரி ஒருவனை நேசிப்பதற்குக் கூட அவளுக்கு முழு உரிமை உண்டு. அவனுக்குத் தெரிந்து எத்தனையோ பெண்கள் நம்ப முடியாத பேர் வழிகளிடம் காதல் கொண்டிருந்தார்கள். மோகனையும் ஜமுனாவையும் தன் மனசுதான் இணைத்துக் கொண்டதேயொழிய உண்மையில் அவர்கள் இருவருக்கும் மத்தியில் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருக்கலாம். வெறும் அனுமானம். தனக்குக் கிடைத்த தோல்வியின் கசப்பிலிருந்து மனமே பழி வாங்குவது போல் குரூரமாகப் பிணைந்து விட்ட அனுமானம்...
ஜமுனா மாதிரி உன்னதமான பெண்ணாவது... மோகன் மாதிரி பேர் வழிகளை ஏறெடுத்துப் பார்ப்பதாவது?
“சீ... என்ன மனசு எனக்கு... சாக்கடை ஓடுகின்ற இந்த மனசுக்கு ஜமுனா எப்படிக் கிடைப்பாள்?”
ராஜாமணி ஷேவிங் செய்வதை மறந்து ஜன்னலுக்கு வெளியே இருண்டு கொண்டு வந்த வானத்தைப் பார்த்தான்.
“போஸ்ட்” என்று வெளியே கேசவலு நாயுடுவின் கனத்த சாரீரம் கேட்டது.
ராஜா என்று குரல் கொடுத்தார் ஆனந்தராவ்.
“ராஜாமணி சார்” என்று கேசவலு நாயுடு கூப்பிட்டார்.
“இதோ வர்றேன்” என்று சோப்பைக் காகிதத்தில் வழித்து ரேஸரைக் கழற்றிக் கோப்பையில் போட்டு விட்டு வெளியே போனான் ராஜாமணி.
“ஒங்களுக்கு ஒரு ரிஜிஸ்டர் கவர்...”
பட்டை பட்டையாகத் திருநாமம். நெற்றி உச்சியில் நரையைக் கூடத் தொட்டிருந்து. கண்கள் குந்து சாலேஸ்திரக் கண்ணாடி வழியாகப் பயமுறுத்துவது போல் தெரிந்தன. ஸ்தூல சரீம். மூச்சு வாங்கிற்று. முதுமை.
“அப்பாவுக்கு தபால்.”
“ரிஜிஸ்டர் கவரா?” என்று யோசித்தவாறே ரசீதை வாங்கி போஸ்ட்மேன் நாயுடு தடித்த சிவப்புப் பேனாவினால் கையெழுத்திட்டான்.
தபால்களை வாங்கிக் கொண்டான். அவனுக்கு வந்த கவர், அலுவலகங்களில் பயன்படும்பெரிய பழுப்புக் கவர் மாதிரி இருந்தது. அனுப்பியவர் விலாசத்தைப் படிப்பதற்குள் நாயுடு குறுக்கிட்டார்.
“ராஜா சார். அப்பா இருக்காரா?”
“இருக்காங்க.”
“கூப்பிடுங்க...”
“சாப்பிடறார்.”
“அப்படியா?” அவர் திண்ணையில் உட்கார்ந்தார். பெரிய பூசணிப்பழம் பழுத்து உட்கார்ந்த மாதிரி இருந்தது. திருஷ்டிப் பரிகாரத்துக்கு நாமம் போட்டு வைத்த பூசணிப் பழம்.
“இதுதான் என்னுடைய கடைசி பட்டுவாடா-” நாயுடு சிரித்துக் கொண்டு சொல்ல முயன்றார். அந்தச் சிரிப்பில் அங்குமிங்கும் விழுந்துபோன பற்களின் காலியிடங்கள் தெரிந்தன.
“ஐஸீ... என்ன விஷயம் நாயுடு?”
“இன்னியோட நான் ரிடையராகிறேன்”
ஆனந்தராவ் அதற்குள் சாப்பிட்டு முடித்து விட்டுக் கைகளையும் வாயையும் துண்டில் ஒற்றிக் கொண்டே வெளியே வந்து விட்டார்.
“என்ன நாயுடு... சாவதானமா ஒக்காந்துட்டேள்?”
“இந்தாங்க தபால். நாயுடு இன்னியோடு ரிடையராகிறாராம்.”
தபாலை வாங்கிக் கொண்ட ஆனந்தராவ், “அப்படியா நாயுடு?” என்று ஆச்சரியத்தோடு நிமிர்ந்தார்.
“ஆமாம் ராயரே?” அதற்குள் நாயுடுவிற்குக் குரல் கம்மி விட்டது. சட்டென்று அவர் கண்களில் இறுக்கம் நெகிழ்ந்து கண்ணீர் தளதளவென்று இறங்கி விட்டது.
என்ன நாயுடு இது... சின்னப்பிள்ளை மாதிரி...?
ஆனந்தராவுக்கும் நெஞ்சு நெகிழ்ந்து விட்டது.
போஸ்ட் என்ற அந்த கனத்த சரீரம் இனிமேல் அந்த வீதியிலோ, வேறெங்குமோ காதில் விழப் போவதில்லை என்ற விஷயம் அவரையும் கலக்கி விட்டது.
“முப்பத்தஞ்சு வருசம் ராயரே... எல்லாம் விளையாட்டு மாதிரி முடிஞ்சு போச்சு. ஒங்க மாதிரி பெரியவா ஆசீர்வாதத்தாலே எந்த கம்ப்ளெயிண்டும் இல்லாமெ வண்டி ஓடிப்போச்சு. இந்த ஒரே பீட்லே பதினஞ்சு வருசம் வுட்டு வச்சாங்க. யாராரோ டக்கர் அடிச்சும் முடியல்லே. இது ஒண்ணு போறாதா எனக்க சரடிபிகேட்டு... மனசு தான் தாங்கல்ல... பாத்துப் பழகின மனுஷாளை சடுக்குன்னு விட்டுப் பிரியற மாதிரி இருக்கு.”
“இதென்ன பிரமாதம் நாயுடு... மனசை நீர் அலட்டிக்கப்படாது. நாங்களாம் எங்கே போயிடறோம் நீங்க போஸ்ட்டுன்னு வந்து நின்னாத்தான் பேசுவோம். இல்லேன்னா மொகத்தைத் திருப்பிக்குவோமா என்ன? ராஜாமணி உள்ளே போய் அம்மாவைக் காப்பி தரச் சொல்லு என்று ஆனந்தராவ் தாமே உள்ளே எழுந்து போனார்.
பீரோவில் சுப்பண்ணாவுக்கு புது வருஷத்துக்காக எடுத்துக் கொடுக்கத் தவறி விட்ட வேஷ்டித் துண்டு இருப்பது ஞாபகம் வந்தது. எழுந்து போய் பீரோவைத் திறந்து அவற்றை எடுத்துக் கொண்டு, நூறு ரூபாய் நோட்டு ஒன்றைக் கட்டிலிருந்து உருவி எடுத்தவாறு திரும்பி வந்தார்.
நாயுடு எப்பேர்ப்பட்டவர்! துக்கத்தை ஹாஸ்யமாக்கி விடுவார். துன்பத்தை லகுவாக்கி சேர்ந்து விழுகின்ற மனதைத் தூக்கி தோளில் ஏற்றி நிமிர்த்துவார். ஒவ்வொரு வீட்டின் குடும்ப சங்கதியும் அவருக்கு மனப்பாடம்.
அம்மா கொடுத்த காப்பியோடு வந்தான் ராஜாமணி.
ஆனந்தராவ் மேலே சுற்றியிருந்த கண்ணாடிக் காகிதம் மொரமொரக்க வேஷ்டியையும் துண்டையும் நீட்டினார். ரூபாய் நோட்டை உள்ளே செருகியிருந்தார்.
அந்த சன்மானத்தை வாங்கும்போது குழந்தை மாதிரி வெடித்து அழுது விட்டார் நாயுடு.
நாயுடுவின் குலுங்கும் முதுகை ஒரு கையால் அணைத்துக் கொண்டார் ஆனந்தராவ்.
நாயுடுவையும் அப்பாவையும் விட்டு விட்டு ராஜாமணி ஆவலோடு ரிஜிஸ்டர் கவரைப் பிரித்தான்.
ஐ.எஃப்.எஸ் விண்ணப்ப பாரம். சோமையா அனுப்பியிருந்தார். கூட ஒரு கடிதம். அவன் விறுவிறுவென்று கண்களை ஓட்டினான். அவரது வாழ்த்துக்களைச் சொல்லியிருந்தார். ஒரு மாதம் ஊட்டியில் கழிக்க அவனைக் கூப்பிட்டிருந்தார். கோடை விடுமுறையைக் கழிக்க டேராடூன் பாரஸ்ட் காலேஜ் புரொபசர்கள் எல்லாம் வருகிறார்கள். ஃபாரஸ்ட்ரியைப் பற்றித் தெரிந்து கொள்ள நல்ல சந்தர்ப்பமாம்.
ராஜாமணிக்கு உள்ளம் பொங்கி வழிந்தது.
“அப்பா... அப்பா... டி.எஃப்.ஓ. சோமையா லெட்டர் போட்டியிருக்கார். ஐ.ஃப்.ஓ. அப்ளிகேஷன் அனுப்பியிருக்கார். ஊட்டிக்கு ஒரு மாசம் வரச் சொல்லி இன்வைட் பண்ணியிருக்கார்.”
அவன் குரலில் துள்ளிய களிப்பிற்கு எதிரொலி இல்லை. கங்காபாய் ஆனந்தராவைப் பார்த்தாள். அவர் அவளைப் பார்த்தார். அந்த இரு முகங்களிலும் ஒரு வாட்டம் பரஸ்பரம் பரிமாறப்பட்டது. அப்போது மீண்டும் மழை ஆரம்பமாயிற்று.

Saturday, 2 February 2013

ஜமுனா-13


13
கல்யாணம் முடிந்து தெருவை அடைத்துப் போட்டிருந்த பந்தலைப் பிரித்த மாதிரி வெளிவாங்கிற்று வானம். மாலை மணி மூன்றுக்கு மேல் ஆகிவிட்டது.
நாளைக்கும் பாக்கி வைத்திருப்பது போல் மந்தமாகக் காய்ந்த வெய்யிலைப் பார்த்து விட்டு ஈரத் துணிகளை இப்போதே ஆறப்போட வேசண்டியது தான் என்று உள்ளே வந்தாள் ஜமுனா.
ரங்கையர் ஒய்.எம்.சி.ஏ.வுக்குப் போய் இருந்தார். அப்பாவின் அங்கவஸ்திரமும் குடையும் கயிற்றில் தொங்குவதைப் பார்த்தும் எவ்வளவு தைரியமாகத்தான் பேசி விட்டோம் என்று ஞாபகம் வந்து அவளுக்கு மனம் நலிந்தது. என்னவெல்லாம் நடந்துவிட்டது என்று பிரமித்தாள்.
நவகாளி, ராமநவமிக்கு பிரசங்கியை ஏற்பாடு செய்வதற்காக மட்டும் அங்கே வரவில்லை. ஜமுனாவுக்கு வரன் ஒன்று கிடைத்திருப்பதைப் பற்றித் தெரிவிக்கத்தான் வந்திருந்தார். ரங்கையர் ஜமுனாவின் ஜாதகத்தை ஏற்கெனவே அவரிடம் கொடுத்திருந்தது ஜமுனாவுக்கு தெரியாது.
திவ்யமான பொருத்தம் என்ற ஜோஸ்யர் சிலாகித்ததாக ஆரம்பித்து வரனுடைய போட்டோவைக் கொடுத்தார். முப்பத்தைந்து வயது. சிலுப்பிக் கொண்டு நின்ற சுருட்டை முடி, ஸ்பெக்ஸ் வழியாக தப்புக் கண்டு பிடித்த மாதிரிப் பார்க்கும் ஒரு பார்வை. பெரிய உதடுகளில் கர்வப்புன்னகை. சிவராமகிருஷ்ணன் பி.எஸ்.ஸி., ஆடிட்டர் வேலை. ஏழாயிரத்துச் சொச்சம் சம்பளம். பெண் அழகாய் இருந்தால் போதுமாம். வரதட்சிணை வேண்டாமாம்.
நவகாளி அந்த விவாகத்தை நடத்தியே வைப்பது என்ற தோரணையில் பேசத் தொடங்கினார். ஒரு மணிக்கு சாப்பாடு முடிந்தது. முதல் ஈடு மழை இடைவேளை விட்ட மாதிரி சற்றுத் தணிந்த போது மீண்டும் ரங்கையரை முடுக்கி விட்டுத்தான் குடையோடு கிளம்பினார்.
அவர் போய் மழை மறுபாட்டம் ஆரம்பித்தபோது, ரங்கையர் ஜமுனாவிடம் மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார்:
“போட்டோவைப் பார்த்தியாமா?”
“பார்த்தேம்பா.”
“பிடிக்கிறதா?”
“.........”
பதில் வராததைக் கண்டு ரங்கையர் தாம் ஒரு தரம் போட்டோவைப் பார்த்துக் கொண்டார். அவருக்குப் பிடிக்கவில்லை. நவகாளிக்கு தன் குடும்பத்திலிருந்து ஈடுபாடு அவருக்கு ஞாபகம் வந்தது. போட்டோக்கள் பொய் சொல்வதை அவர் அறிந்திருக்கிறார். நவகாளி ஈடுபட்டுச் செய்யும் முயற்சியை நம்ப வேண்டும் என்ற மனசின் உட்குரல் சொல்லிற்று. இன்னும் எத்தனை நாள் ஜமுனா காத்திருப்பாள்?
“என்னம்மா?”
ஜமுனா மௌனமாயிருந்தான். மழை வெளியே பலக்கப் பிடித்துக் கொண்டது. அந்தக் கேள்விக்கு அவள் பதில் சொல்லியாக வேண்டும். உண்மைகளை உடைத்துச் சொல்ல வேண்டிய தருணம், இவ்வளவு துரிதமாகச் சற்றும் எதிர்பாராத ஒரு வேகத்தில் உருவாகி விட்டது தான், அவள் வாயை அடைத்து விட்டது.
“பிடிக்கலையா?”
“அப்பா...அப்பா... உங்கள் முகத்தைத் தொங்க வைக்கப் போகும் பதிலை வைத்திருக்கிறேனே... இதைக் கேட்டு நீங்கள் எப்படித் திடுக்கிடுவேள்... என்ன செய்றது? இப்படி நேர்ந்து விட்டது. எந்தத் தப்பும் நடக்கலே. இருந்தாலும் மனசு திருடு போய் விட்டது. என் ஜாக்கிரதையை மீறி, என் கண்டிப்பை மீறி. நீங்க எப்படிப்பா தாங்குவேள்?” மனசு மறுகிற்று.
“மனசு விட்டுச் சொல்லம்மா...”
அவள் தன்னைத் தயார் செய்து கொண்டாள்.
“இப்ப எனக்குக் கல்யாணம் வேண்டாம்பா.”
மனசுக்குப் பிடிக்கவில்லையென்றால், ஜமுனா வெளிப்படையாகச் சொல்லி விடுவாள். இந்தப் பதில் வேறு மாதிரி இருக்கவே அவர் திடுக்கிட்டார். அவள் குரலும் வேறு மாதிரி இருந்தது.
“அப்படீன்னா...”
அதை அவரிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் தனக்கே நேரிட்டதை அவளால் தாள முடியவில்லை. தன் மனசை அவரிடம் தெரிவிக்க ஒருத்தர் இருந்திருந்தால்? அண்ணா ராகவன்? ஊஹும். அம்மா... அம்மா இருந்திருந்தால்... ஜமுனா வசமிழந்து விட்டாள். திடீரென்று துக்கம் பொங்கிற்று. விசித்து விசித்து அழத் தொடங்கினாள்.
“ஜமுனா... ஜமுனா... என்னம்மா?” - அவளைத் தேற்றுவதற்காக எழுந்த ரங்கையர், ஏதோ ஒரு அச்சம் தடுக்க அப்படியே நின்று விட்டார்.
ஜமுனா தேம்பி தேம்பி அழத் தொடங்கினாள். மழை வெளியே விளாசிற்று.
இப்போது இதை விட்டு விடலாம் என்று நினைத்தார் ரங்கையர். ஆனால் இது ஏதோ அபாயக் குறி என்று அவருக்குள் ஓர் உணர்வு துணுக்கென்றது.
“ஏம்மா... அழறே... என்ன நடந்துடுத்து? பிடிக்கலேன்னா வாண்டாம்!”
அவள் அழுகை தணிகிறவரை அவர் காத்திருந்தார். ஜமுனா முழங்காலிட்டு அதன் மீது முகத்தைக் கவிழ்த்துக் 
கொண்டிருந்தாள். முதுகு விம்மி விம்மித் தணிந்தது. மழை ஓசை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.
மழையும் அழுகையும் தணிகிறவரை அவர் காத்திருந்தார்.
திகிலும் அரைகுறைச் சந்தேகங்களும், தாயற்று வளர்ந்த மகளின் வாடிக் கொண்டு வரும் பருவமும், காலா காலத்தில் அவளது கடமையை நிறைவேற்றாத கையறு நிலையும் அவரது நெஞ்சைப் பின்னின. ரங்கையர் துன்பத்தை மௌனமாகத் தாங்குவது போல் கண்களை மூடிக் கொண்டார்.
வழிந்த கண்ணீரோடு அவரை நிமிர்ந்து பார்த்த ஜமுனா ரங்கையரின் மூடிய கண்களைக் கண்டதும், தைரியமிழந்து மீண்டும் முகத்தை முழங்காலில் புதைத்துக் கொண்டாள்.
“ஜமுனா...” அவர் குரல் கரகரத்தது.
“.......”
“என்னண்டே சத்தியமா இரும்மா.”
“ஏம்மா இப்படி அழறே? நோக்கு வேற அபிப்ராயம் இருக்கா...?” அதைக் கேட்கும் போது அவர் குரல் நடுங்கிற்று.
“........”
“வேற யாரையோ மனசுலே நெனச்சண்டிருக்கியா?”
அவள் பதில் முழங்காலின் மேல் பதிந்திருந்த தலை அசைவின் மூலம் வெளிப்பட்டது.
“யாரது?” - ரங்கையரின் தந்தை உள்ளம் திடீரென்று நிலை தாழ்ந்தது போல ஹீனமுற்றது.
“மோகன்... எதிர்த்தாத்து மோகன்.”
“பழக்கம் உண்டோ?”
“ம்...ம்...ம்”
“எத்தனை நாளா?”
“ஆறு மாசமா”
மழை அப்போது நின்றது. ஓங்காரம் அடங்கி பிசுகிசுவென்ற தூரல்கள் விழுந்து கொண்டிருந்தன. வெளியே சாக்கடை வெள்ளம் ஓடுவதையும், தெருவில் பேச்சுக் குரல்கள் ஈசலாய்க் கிளம்பியதையும், கேட்டுக் கொண்டு மரக் கட்டை மாதிரி உட்கார்ந்திருந்தார் ரங்கையர்.
அவரது பெருமை சீலம், ஞானம், மகள் மீது வைத்திருந்த பாசம், அவர் போற்றிய தர்மம் எல்லாம் உருண்டு உடைந்து சாக்கடை வெள்ளமாக ஓடிப்போக, தான் மட்டும் வெறிச்சிட்டு நிற்பதாக உணர்ந்தார்.
மோகனை அவருக்குத் தெரியும். ஓட்டலில் அக்கவுண்ட் வைத்திருந்தான். எப்போதும் சிகரெட்டும் கையுமாக அலைவான். கிளப்பில் சூதாடுவதாகவும், வேறு என்ன என்னவோ சகவாசங்கள் உண்டென்றும் கேள்விப்பட்டிருக்கிறார். அவனுக்கு ஓட்டலில் ஒருநாள் சாம்பார் பரிமாறும்போது, மது நாற்றம் கூட வந்தது. சரளமாக அவன் மராட்டி பேசினான், நிச்சயம் அவள் ஐயராக இருக்க முடியாது.
அவர் சிலை போல் உட்கார்ந்திருந்தார். அவரது முழு வாழ்க்கையும் அவர் முன் ஒரு கேள்விக் குறியாயிற்று. ‘கடாம்பி’ நாராயணதாஸர்... நவகாளி நாராயணசாமி... ஸ்மிருதிகளிலும் பிரமாணங்களிலும் மூச்சு விடாமல் தர்க்கம் செய்யும் வைத்தியநாத ஐயர்... சங்க மடத்துக் காரியஸ்தர்கள்...ஆனந்தராவ்... ஆனந்தபவன் சகாக்கள்... வாடிக்கைக்காரர்கள்... எவ்வளவு பெரிய வட்டம்.
அவர் தலை சுழன்றது.
‘என்ன வாழ்க்கை வாழ்ந்து விட்டு இந்த சங்கதியைக் கேட்க இன்னும் உயிர் இருக்கிறதே!’
“ஜம்னா... ஒன்னை எவ்வளவு ஆசாரத்தோடு வளர்த்தேன். ஒன் புத்தியை எவ்வளவு மேலான விஷயங்களிலே செலுத்தினேன்... இவ்வளவு கீழ்த்தரத்துக்கு ஒன்னை எந்தப் பிசாசும்மா சேர்த்துட்டது?”
- அவர் மௌனமாகக் குமுறினார். ஜமுனாவின் தலை நிமிரவேயில்லை.
“இது ஏன் நேர்ந்தது... எப்படி நேர்ந்தது” என்று கேள்விகள் அவர் மனசில் சம்மட்டி கொண்டு தாக்கின.
வெகுநேரம் கழித்து அவர் தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு பேசினார்.
“இது நடக்காது ஜம்னா... அவன் ஒரு நீசன்... நோக்குத் தெரியாது... அவனுக்கு எத்தனையோ துர்ச்சகவாசம் பழக்கம் உண்டு.”
“நேக்கு எல்லாம் தெரியும்பா.”
அந்தப் பதில் அவரை மேலும் திணற அடித்தது.
“தெரிஞ்சுமா? நோக்கென்ன பைத்தியமா...?”
“அவர் ஒரு கட்டுப்பாடில்லாதவர் தாம்பா... ஆனா அவரை அடக்கி நேர் பண்ணினா ரொம்ப உயர்ந்த மனுஷரா ஆயிடுவார்!”
“அவர்... சீ!” ரங்கையருக்கு குமட்டிற்று. அவள் குரலில் தெரிந்த தீர்மானமும், அவனை அளந்து வைத்திருப்பது போல் அவள் பேசுவதும் நெருப்பாய்த் தகித்தது. தன்னை மறந்த மூர்க்கம் பிறந்தது.
“என் உயிர் இருக்கிறவரைக்கும் அது நடக்காது ஜம்னா.” அந்த விஷயத்துக்கு மறு தீர்மானமே இல்லாதது போல் தீர்க்கமாக முடிவு கட்டிய மாதிரி, அவர் குரலில் வைரம் பாய்ந்திருந்தது.
“அப்பா...” என்று அதிர்ந்து போய்க் கேவினாள் ஜமுனா.
“நானும்... என் மனசும்... நேக்கும் அதே மாதிரி...!”
அவள் விம்மினாள்.
“போறும் நிறுத்து! நோக்கு விவாகமே ஆகாமே நீ கன்னியாவே இருந்துட்டாலும் சரி... இது ஒண்ணு மட்டும் நடக்காது!”
ரங்கையர், போட்ட சட்டையோடு அங்கவஸ்திரம் கூட இல்லாமல் குடையைக் கூட மறந்து, வெளியே புறப்பட்டு விட்டார்.
‘நானும் அவர் மகள் தான்’ என்று சொல்லிக் கொண்டு அவள் வீட்டு வேலைகளைக் கவனிக்க எழுந்தாள். நிறைந்திருந்த குடங்களில், மிஞ்சிய மழைத்துளி முகட்டிலிருந்து சிதறி வட்டம் போட்டது.
“ப்பாய்ங்... ப்பாய்ங்” என்ற ஐஸ் வண்டிக்காரன் வெளியேயிருந்து ஹாரன் அடித்தான். அவனிடம் மத்தியானத்தில் ஒன்றில் இரண்டில் ஜமுனா பால் ஐஸ் வாங்குவாள்.
“வேண்டாம்பா... இந்த மழையில் ஐஸ் எதுக்கு?”
“ஹர்த்தால் ஆச்சேன்னு ஏகமா சரக் போட்டேன். வியாபாரமே ஆகலேம்மா, மழை மோசம் பண்ணிடுச்சி” - அவன் பெருமூச்சு விட்டான்.
“அப்படியா... சரி... எனக்கு வழக்கமாகக் கொடுக்கற பால் ஐஸைக் குடு.”
ஐஸைக் கொடுத்து விட்டு வண்டிக்காரன் தெருக் கோடியில் மறைந்தான்.
“இந்த மழையிலே ஐஸா?” என்று ஒரு குரல் கேட்டது.
அவள் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள். ‘மோகன்!’ பனியனோடு நின்று கொண்டிருந்தான். பொறுப்பற்ற ஷோக் பேர்வழியைப் போல் அவன் சிரித்தான்.
அவள் பார்வையில் ஏதோ ஆழம் தட்டுப்பட்டது போல் அவன் சிரிப்பு மறைந்தது. அவன், தெருவில் வலமும் இடமும் திரும்பிப் பார்த்து விட்டு, போஸ்ட் என்றான். அது அவர்கள் மத்தியில் ஒரு சங்கேதம். தபால் அனுப்புகிறேன் என்று அர்த்தம்.
ஜமுனா அவனைப் பார்த்து நெடுமூச்செறிந்து உள்ளே திரும்பினாள். மோகன் இப்போது ஏதாவது ஒரு புத்தகத்தில் சீட்டை மறைத்து அனுப்புவான். அதைக் கொண்டு வரும் பொடியனிடம் ஐஸைக் கொடுத்து விடலாம் என்று ஒரு டம்ளரில் அதைப் போடத் திரும்பினாள்.
“அக்கா... மோகன் மாமாட்டே பொஸ்தகம் கேட்டியாமே!” என்று கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்தான் அரை நிஜார் சுந்தரம்.
அவன் போன பிறகு ஜமுனா புத்தகத்தைத் திறந்து கடிதத்தை எடுத்துப் பிரித்தாள்.
“அன்புள்ள ஜமுனா,
இனிமேல் நான் இங்கிருக்க முடியாது. நம் விஷயம் எல்லாருக்கும் தெரிந்து விட்டது. என்னைத் தாகுவதற்குத் திட்டம் தீட்டுகிறார்கள். என் உயிருக்கு ஆபத்து. எனவே இன்று இரவு புளூமவுண்டன் எக்ஸ்பிரஸில் நாம் இருவரும் புறப்படுகிறோம். புறப்படுவாய் அல்லவா? உன்னை நம்பி ஏற்பாடு செய்யலாமா?
உயிரில் பிரிவதாய் இருந்தாலும் அது உன்னோடு பிரிய வேண்டும் என்று துடிக்கிறேன். உன் சம்மதத்தை தெரிவிக்க உங்கள் வீட்டுக் கொடிக் கம்பியின் மீது உன் பச்சை ஜாக்கெட்டைக் காயப்போடு.
துணிமணிகளையும், முடிந்த அளவு ரொக்கத்தையும் எடுத்து ஒரு பெட்டியில் போட்டு வைத்திருக்கவும். ஒரு கூலியான அனுப்புகிறேன். அவன் தலையில் பெட்டியை வைத்துவிடவும். தெருத் திருப்பத்தில் நான் டாக்ஸியுடன் காத்திருக்கிறேன். மற்றவை நேரில்.
உன்,
மோகன்
“எவ்வளவு துரிதமாக விஷயங்கள் ஓடி வருகின்றன! ஏன் இந்த வேகம்? என்ன செய்வது... அப்பா... அப்பா...”
வெகுநேரம் திக்பிரமை பிடித்தது போல் நின்றாள் ஜமுனாபிறகு அந்தக் கடிதத்தைப் புத்தகத்தினுள் வைத்து விட்டு அவள் உள்ளே போனாள்.
அரை மணி நேரம் கழித்து அந்த வீட்டுக் கொடிக் கம்பியில் அவளது பச்சை ஜாக்கெட் உலர்ந்து கொண்டிருந்தது.

ஜமுனா-12


12
வேதாந்த கீதம் புருஷம் பஜேஹம்
ஆத்மானம் ஆனந்தகனம் ஹ்ருதிஸ்தம்
கஜானனம் யம்ஸ்ரீமகசா ஜனானாம்
மகாநதகாரோ விலயம் பிரயாதி:
கூடத்தை ஒட்டிய வடக்குப் பார்த்த அறையிலிருந்து ரங்கையரின் கம்பீர தொனி, நாத ஜங்காரத்தோடு வந்தது. அறைக்கு வெளியே கூடத்தில் சிறிய துண்டுப் பாயின் மீது அமர்ந்து, ஜமுனா பூத்தொடுத்துக் கொண்டிருந்தாள்.
ரங்கையரின் ஸ்லோகங்கள் கரவில்லாத இருதயத்திலிருந்து வருவது போல், ஆன்ம லயத்தின் சங்கீதமாய் ஒரு நதியின் கம்பீர கதியாய் ஒலித்தன. இது சாரதா திலகத்தில் வரும் கணேச ஸ்துதி என்று புரிந்து கொண்டாள் ஜமுனா.
வாசலில் மழை திடீரென்று பலத்தது. கொட்டி முழக்கப் போகிறேன் என்று அச்சுறுத்துவது போல் ஆரம்பித்துச் சட்டென்று குறைந்தது. சாரல் தெறிக்கவே ஜமுனா எழுந்து பாயையும் தாம்பாளத்தையும் நகர்த்திக் கொண்டு, சற்று உள் தள்ளி உட்கார்ந்தாள். சட்டென்று தாழ்ந்த மழை, ஓரிரு விநாடியில் கிறுகிறுவென்று உயர்ந்தது. மீண்டும் ஒரு தணிவு.
நடையில் மாட்டியிருந்த பழங்காலத்து அறுகோண ஜப்பான் கடிகாரம் டங்டங் கென்ற நிறுத்தி நிறுத்தி ஒரு நிதானத்தோடு பத்து மணி அடித்தது.
மீண்டும் ரங்கையரின் குரல் சங்க நாதம் போல் உள்ளிருந்து வந்தது.
ஈஸா வாஸ்யம் இதம் சர்வம்
யத் கிம் ச ஜத்யரம் ஜகத்
தென தியக்தென புஞ்சீதா
மா கிருதஹ் கஸ்ய ஸ்வித்-தனம்
ரங்கையர் ஸ்லோகம் சொல்வதை நிறுத்தி விட்டு கொழந்தே “ஜம்னா...” என்று அழைத்தார். அந்த அழைப்பில் வாஞ்சை குழைந்தது.
“என்ன அப்பா?”
“இப்ப சொன்னேனே, அந்த ஸ்லோகத்தைக் கேட்டியோ?”
“கேட்டேம்பா...”
“எதிலே வர்றது சொல்லு பார்ப்போம்.”
“ஈசோபநிஷத்திலே மொதல் ஸ்லோகம்.”
“பேஷ்! அர்த்தம்?”
“அசையும் ஜகத்திலுள்ள ஒவ்வோர் அசையும் பொருளிலும் ஈஸ்வரன் நிரம்பி இருக்கார். இந்தப் பொருள்களின் மேலே இருக்கற பற்றை விடுவதன் மூலம் தான், நீ சுகம் பெறுவது சாத்தியம். பிறத்தியார் எவருடைய செல்வத்திலும் ஆசை வைக்காதே...”
ரங்கையர், உள்ளே இடப்புறம் ஸ்ரீராமச்சந்திரனும் வலப்புறம் கிருஷ்ண பகவானும் அவற்றின் கீழே ஸ்ரீராம கிருஷ்ணருமாகக் காட்சியளித்த படங்களின் அடியில் மான் தோல் மீது உட்கார்ந்தவாறு பேசினார்.
“இந்த ஸ்லோகத்தின் மேலே காந்திக்கு அபாரப் பிரமை தெரியுமோ?”
“அப்படியாப்பா...?”
“ஆமாம், திடீர்னு ஒரு வேளைலே எல்லா வேதங்களும் உபநிஷத்துகளும் வெந்து சாம்பலாகப் போயிட்டாலும் ஈசோபநிஷத்தின் இந்த மொதல் லோகம் மட்டும் மிஞ்சினா. அது ஒவ்வொரு ஹிந்துவினுடைய நினைவிலே நீங்காமே நின்னுடும்ன்னா, ஹிந்து மதம் அழியாமே என்னிக்கும் வாழும்னு சொல்லியிருக்கிறார்!”
“சத்திய வாக்குதான்.”
ஜமுனாவின் பதில் ரங்கையருக்குப் புளகத்தை ஏற்படுத்திற்று. மெதுவாகப் புன்னகை செய்து கொண்டார். தந்தையின் ஞானம் மகளிடம் சிந்தியிருப்பது பெருமை தந்தது.
விளையாட்டுப் போக்கு மறைந்து மழை சோவென்று பலக்கப் பிடித்துக் கொண்டது. ரங்கையர் மான் தோலிலிருந்து எழுந்து ஒரு தரம் கைகூப்பி நமஸ்கரித்து விட்டுக் கதவோரமாகப் போட்டிருந்த ஸ்டூலின் மீது வந்து உட்கார்ந்தார்.
மகளோடு பேச வேண்டுமென்ற ஆவல், மழையின் இரைச்சலைப் பொருட்படுத்தவில்லை. அவர் வந்து உட்கார்ந்தும் ரங்கையரின் மனப்போக்கு புரிந்து ஜமுனா அவரை நிமிர்ந்து பார்த்துப் புன்னகை செய்தாள்.
“இந்த வருஷத்தில் நீங்க காத்தாலே பத்து மணிக்கு வீட்டிலே இருக்கிறது இதான் இரண்டாவது தடவை காலையிலே இருந்து நீங்க ஓட்டலுக்குப் போகலே.”
“மொதல் தடவை எப்போ?”
“வைகாசியிலே ராகவன் வந்திருந்தானே, அன்னிக்குக் காலையிலே நீங்க ஓட்டலுக்குப் போகலே!”
“அவர் வீட்டில் தங்குவதை ஜமனா எவ்வளவு ஏக்கத்தோடு எதிர்பார்க்கிறாள்’ என்று எண்ணி ரங்கையர் மெதுவாகச் சிரித்துவிட்டு மழையைப் பார்த்தார். பகலில் வீட்டில் தங்கும் அனுபவம் இதமாகத்தான் இருந்தது.
“பாவம்...! ஹர்த்தால்காராளுக்குப் பெரிய ஏமாற்றம்!”
“ஏம்பா?”
“அவங்க ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்த விடாமே மழையே ஆர்ப்பாட்டம் நடத்திண்டிருக்கே!”
ஜமுனா தட்டிலிருந்த முல்லைப் பூக்களை கிளறிக் கொடுத்தாள்.
ரங்கையரின் தந்தை உள்ளம் நெகிழ்ந்து பூரித்தது.
“இவள் வயசுக்கு வந்து அஞ்சு வருஷம் ஆகப்போறது. இன்னும் சரியான வரன் தகையலே. வரதட்சணை... வரதட்சணைன்னு ஓநாயா அலையற கும்பல் தான் வந்துண்டிருக்கு. இந்தச் சௌந்தர்யம்... இந்த ஞானம்... இந்தப் புத்திச் சாதுர்யம் எதுவும் எந்த யோக்கியவான் கண்ணிலும் படல்லே... இருக்கட்டும். விதி எப்படியோ லபி அப்படி... எவனோ ஒருத்தன் இவளுக்குன்னு பொறந்திருக்கான். இந்தப் புஷ்பம் பரிபூரணமா பூத்து மலர்ந்திருக்கிற இந்த வேளைக்கு வருவானோ... இன்னம் தாமதிச்சு வருவானோ... நம்ம பிரயத்தனம் எல்லாம் விரயமாயிண்டே போறதப் பார்த்தா பகவத் சங்கல்பம் ஏதோ இருக்குன்னு தோணறது...’ என்று நினைத்தவாறு தமக்குள் பீறிட்ட பெருமூச்சை ஸ்வரம் குறைந்து மௌனப்படுத்தினர் ரங்கையர்.
வெளியே நிலையாகப் பெய்த மழையில் திடீரென்று ஒரு மாறுதல். படபடவென்று சிறிய தவளைக்குஞ்சுகள், கூடத்திலும் வாசலிலும் தாவுவது போல ஆலங்கட்டிகள் சிதறித் தெறித்தன.
“அப்பா... அப்பா... ஆலங்கட்டி விழறதுப்பா” என்று மகிழ்ச்சியோடு கூவினாள் ஜமுனா.
சிறிதும் பெரிதுமாக வாசலில் தெறித்து வீழ்ந்த ஆலங்கட்டிகள் வந்த விசையில் தரையில் மோதி இன்னொரு துள்ளுத்துள்ளின. தன்னை மறந்து கைகொட்டிச் சிரித்தாள் ஜமுனா.
அந்த ஆச்சரியமும் குதூகலமும் அவள் முகத்தில் பளீரென்று விகசித்தன. ரங்கையர் புன்னகையோடு அவளைப் பார்த்தார். ஒரு குழந்தை மாதிரி வினோதங்களையும் ஆனந்தத்தையும் வாங்கிக் கொள்ளும் ஜமுனாவின் உள்ளம் அவரைக் கிளர்ச்சியுறச் செய்தது.
வாசல் தரையில் விழும் ஆலங்கட்டிகளின் விளையாட்டை ரசிக்கத் தொடங்கினார்.
“ஒங்களுக்கு ஒண்ணு ஞாபகம் வர்றதாப்பா?”
“என்னது கொழந்தே?”
“நானும் ராகவனும் அப்போ ரொம்ப சின்னவங்களாயிருந்தோம். இந்த மாதிரி ஆலங்கட்டி மழை பெய்தது. அதை சீசாவிலே போட்டு எடுத்து வச்சா, தேள் கடிக்கு நல்லதுன்னு பள்ளிக்கூடத்திலே பிள்ளைகள் சொல்றதைக் கேட்டு நம்பிண்டு. ஒரு சீசாவை எடுத்துண்டு ராகவன் அவசரமா ஓடி வந்தான். கால் சறுக்கிப் போதேர்னு வாசல்லே வெள்ளமா நின்னுருந்த மழை ஜலத்திலே விழுந்துட்டான். நீங்க ஓடி வந்து அவனைத் தூக்கினேன். தலையிலே அவனுக்கு நல்ல அடி!”
ஜமுனாவின் ஞாபக சக்தி எவ்வளவு கூர்மையானது என்று தமக்குள் வியந்து கொண்டார்.
ஜமுனா திடீரென்று அவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டாள்.
“சமுத்திரத்திலே கப்பலிலே போகறச்சே கூட, கனமா மழை பெய்யும் இல்லேப்பா?”
“ஏன் பெய்யாது...? மழைக்கு இடமா, காலமா?”
“சமுத்திரம் அப்போ பெரிசா குமுறுமாமே?”
“இருக்கும்”
“பெரிய புயல், சூறாவளிகூட வருமோல்லியோ?”
“வரலாம்.”
தூர தேசங்களின் சமுத்திர வெளிகளில் இரவு பகல் பேதமின்றிப் புயலும் அலைகளும் போராடும் சூழ்நிலைகளில் ராகவனை வைத்து நினைக்க அவரது தந்தை உள்ளம் சங்கடப்பட்டது. ஜமுனா மேற்கொண்டு பேசாமல் ஏதோ மனோ நிலையில் மௌனமானாள்.
ஆலங்கட்டிகள் டப் டப் பென்று தெறித்துத் தெறித்து விழுந்தன.
ரங்கையரை ராகவன் நினைவு தாக்கி வருத்தத் தொடங்கிற்று.
பால்யத்திலிருந்தே ராகவன் அவருக்கு ஒரு கவலை. எவ்வளவு உயரமான மரமாக இருந்தாலும் விறுவிறுவென்று ஏறிவிடுவது. ஏரியில் நீர் ததும்பும் காலத்தில்குதித்து நீந்துவது, சைக்கிள் ரேஸ் விடுவது என்று எப்போதும் சாகசத்துக்கே துடித்துக் கொண்டு நிற்பான். முனிசிபல் ஹைஸ்கூலில் படிக்கும்போது, முக்கியமான வாலிபால் ப்ளேயர். ஸ்போர்ட்ஸிலும் எவருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டான்.
ராகவனின் உடம்பில் ஹனுமத் பிரசன்னம் இருப்பதாக ரங்கையர் கணக்கிட்டார். ராகவனுக்கும் ஆஞ்சநேயர் என்றால் பரம பக்தி. தினசரி கடைத் தெருவில் இருந்த ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போய் விட்டு வருவான். ஒன்பதாவதுக்கு மேல் அவனுடைய அடங்காத இளமைத் துடிப்பைப் பற்றிக் கவலை ஏற்படவே அவனை ஒய்.எம்.சி.ஏ. மாணவர் ஹாஸ்டலில் சேர்த்து விட்டார் ரங்கையர்.
ஒய்.எம்.சி.ஏ. அவனுடைய கட்டுப்பாடற்ற சக்திப் பெருக்கைச் சாணை தீட்டி வைரமாக்கிற்று. நிர்வாகி ஜான்ஸன் அவனை நெறிப்படுத்தினார். ஸ்காட்லாந்திலிருந்து கடல் கடந்து வந்து அந்தச் சிற்றூரின் மாணவர் குலத்தில் தன்னை அடையாளம் கண்டு கொண்ட அவரது பரந்த இதயம் ராகவனின் மன வரம்புகளை விஸ்தரித்தது.
கடல் கடந்து சென்று தேசங்களை மனத்தால் தழுவிக் கொள்ளும் ஆவலை அவர் வளர்த்தார். மெர்ச்சன்ட் நேவியைப் பற்றி ஒய்.எம்.சி.ஏ.வில் திரையிடப் பெற்ற ஒரு சினிமா அவன் கனவுகளுக்கு உருவமளித்தது. ஒய்.எம்.சி.ஏ.விலேயே படித்து விட்டு, விசாகப்பட்டினத்தில் கமாண்டராகப் பணிபுரிந்த ஒருவர் தற்செயலாகத் தனது பழைய ஹாஸ்டலைப் பார்க்க வந்த போது, ராகவன் அவரைச் சந்தித்தான்.
ரங்கையரிடம் சொல்லிக் கொள்ளாமல் ராகவன் அடுத்த மாதம் விசாகப்பட்டினத்திற்குத் தன்னந்தனியாக ரயில் 
றிவிட்டான்.
ஒரு மாதம் கழித்துக் கப்பற் பயிற்சியில் சேர அவருடைய சம்மதக் கையெழுத்துக்கு கடிதம் வந்த போது தான் அவன் விலாசம் தெரிந்தது. கடிதத்தை எடுத்துக் கொண்டு அவர் ஒய்.எம்.சி.ஏவுக்குப் போனார். ஜான்சன் அவருக்குத் தைரியம் தந்தார். ரங்கையர், ராகவன் பாதைக்குத் தடையாக இருக்க விரும்பவில்லை.
வருஷங்கள் ஐந்து ஓடி மறைந்தன.
தெருக்கதவைத் தள்ளித் திறந்து கொண்டு குடையும் கையுமாகத் தெப்பலாக நனைந்தவாறு நவகாளிநாராயண சாமியின் உருவம் உள்ளே நுழைந்தது.
“என்னடா நாணா இது.. இந்த மழையிலே?” என்று திடுக்கிட்டு எழுந்து அவரை வரவேற்றார் ரங்கையர்.
ஒரே பாய்ச்சலில் உள்ளே வந்தார் நவகாளி.
வயது ஐம்பத்தைந்துக்கு மேல். நெருப்பு மாதிரிச் சிவப்பு. நெட்டை, திடகாத்திரம், பெரிய காதுகள், வழுக்கைக்கு வழிவிட்டு அலையோடிய அமெரிக்கன் கிராப்பு, சுத்த நரை, ஆடைகள் எல்லாம் கதர், பிறைச்சந்திர வடிவத்தில் சந்தனக்கீற்று நெற்றியில் கரைந்து ஆறாக ஓடிற்று. கண்களில் தீர்மானமும் உயிர்ச் சக்தியும் ஆரத் தழுவும் அன்பும் மின்னத் தெறித்தன. கலகல வென்று வெண்கலக் குரல்.
“தலையைத் துவட்டுங்கோ மாமா!” என்று டவலைக் கொண்டு வந்தாள் ஜமுனா நவகாளியிடமிருந்து குடைய வாங்கினாள்.
“மகராஜியா இருக்குமா” என்று டவலை வாங்கியவர் “என்னடா ரங்கா... டர்க்கி டவலா... கதர்த்துண்டு கிடையாதா? கதரைக் கை கழுவிட்டயோ?” என்றார்.
“டேய் நாணா, ஆபத்துக்குப் பாபமில்லே. கதர்த்துண்டு தேடறதுக்குள்ளே ஜலதோஷம் பிடிச்சிடும். காந்திஜி மன்னிப்பார். தொடச்சுக்கோ” என்று கிண்டல் செய்தார் ரங்கையர்.
தலையைத் துவட்டிக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தார் நவகாளி.
நவகாளி நாராயணசாமி, அலிப்பூரிலும் கடலூரிலும் ஏழெட்டு வருஷம் சுதந்திரப் போராட்டத்தில் சிறையிருந்தவர். தீவிர பிரம்மச்சாரி, காந்திஜியின் நவகாளி யாத்திரையில் உயிருக்குத் துணிந்து கலந்து கொண்டவர். நவகாளிப் பட்டம் அப்போது ஒட்டியதுதான். தியாகி நிலத்திலும் மான்யத்திலும் பாரத மாதா தேசிய பாடசாலை என்று ஒரு பள்ளி நடத்துகிறார். முஸ்லீம்களின் அத்யந்த நண்பர். அதே சமயம் ஹிந்துப் பண்டிகைகளையும் விழாக்களையும் ஆத்மீக ஈடுபாட்டோடு, ஊரில் பக்தி இயக்கம் பரவுகிற மாதிரி விமரிசையாகக் கொண்டாடுவார். பொது நிகழ்ச்சிகள் நவகாளி இல்லாமல் சோபிக்காது.
“நான் வந்துண்டே இருந்தேனா, வழியிலே ஒய்.எம்.சி.ஏ. ஜான்சன், அஞ்சுகை ராந்தல் பக்கமா ஒதுங்கிண்டிருந்தார். நான் ஒன்னண்டை வர்றேன்னு கேட்டுத் தெரிஞ்சுண்டு அவசியமா ஒன்னை ஒய்.எம்.சி.ஏ.வுக்கு மழை விட்டப்புறமா வரச் சொன்னார். நான் வரலேன்னா, அவரே வந்திருப்பாராம். விலாசம் தெரியாமே திணறினார்!” என்றார் நவகாளி.
“என்ன விஷயம்?”
“நான் கேட்டேன், ராகவன் சமாசாரம்னாரு. விவரமா சொல்லலே!”
“ராகவன் சமாசாரமா?” - ரங்கையருக்கு ஏனோ மனம் கலங்கிற்று.
அவசியமில்லாமல் அவர் கூப்பிட்டு அனுப்பமாட்டார் என்று அவர் உள்மனம் அரித்தது, என்னது?
திடீரென்று வானத்தில் ஓர் இடி இடித்தது. காது செவிடுபடும் அந்த ஓசையில் அவர் சற்று நடுங்கிவிட்டார்.