Sunday, 20 January 2013

ஜமுனா 3

3
டிபன் சாம்பார் கொதி கிளம்பி கும் என்று மணத்தது. இன்னொரு மூலையில் காபி டிகாக்ஷன் வாசனை. காபி போடும் வைத்தா ஒற்றை நாடியாகப் பனியன்கூட இன்றி, ரத்தமின்றி வெளுத்த சரீரத்தில் வியர்வை வழிந்தோட,
யந்திரமாக இயங்கினான்.
சக்சக் கென்று டபரா செட்டுகளில் அவன் ஸ்பூன் ஸ்பூனாக சர்க்கரையை வீசி எறியும் வேகத்தையும், எதிரே வைத்திருந்த டிகாக்ஷன் கெட்டிலை வளைத்து, ஆர்டருக்குத் தகுந்த மாதிரி ஒரு துரித கதியில் நிரப்பும் லயத்தையும், சரக்கு மாஸ்டர் சுப்பண்ணா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
கவிழ்த்துப் போட்ட ட மாதிரி கட்டிய நீள அடுப்பு சுப்பண்ணாவின் சாம்ராஜ்யம். நடுவில் ட முனையில் வைத்தா. பக்கத்தில் தோசை மாஸ்டர் சாரங்கன். சுப்பண்ணாவின் வலப்புறத்தில் குக் ராமையா.
சுப்பண்ணா இட்லிக்கு இரண்டாவது ஈடாக மெதுவடை போட்டுக் கொண்டிருந்தார். கடபுடவென்று குழாயடியில் டபரா செட்டுகளும் தட்டுகளும் சரியும் ஓசையும், குழாய் பீச்சம் ஒலியும் ரெண்டு மசாலேய்ய்ய...’ என்று சர்வர் மாதவன் போடும் கூக்குரலும், தோசைக் கடாயின் சீற்றமும் வெங்காயம் அரியும் கண்ணப்பன் டக்டக் கென்று கத்தியை ஓட்டும் தாள லயமும், சப்த சம்மேளனமாகக் காதில் விழுந்தன. எண்ணெயில் மெதுவடை முறுமுறுக்கும் ஒலி எல்லாவற்றையும் தாண்டி அவர் காதில் விழுந்தது.
எண்ணெய் ஓசையை வைத்துக் கொண்டே வடை வெந்த சங்கதியைத் தெரிந்து கொண்டு விடுவார் சுப்பண்ணா. பதினெட்டு வயதுப் பையனாகக் கரண்டியைப் பிடித்து முப்பத்தைந்து வருஷம் அடுப்படியில் வெந்து இதைத் தெரிந்து கொள்வதா பிரமாதம் என்பார்.
“கண்ணப்பா, வெங்காயத்தை அப்புறமா அரிஞ்சுக்கலாம். புளி கொஞ்சம் கொண்டா. ராமையா, சாம்பாரிலே காரம் தூக்கலாயிருக்கு!” என்று மூக்கை ஒரு தரம் உறிஞ்சி வாசனையைக் கிரகித்தவாறே சொன்னார்.
“என்னைக் குறை கண்டுபிடிக்கலேன்னா ஒமக்கு பொழுது போகாதே.” என்று கறுவினார் குக் ராமையா.
“அஸிஸ்டெண்ட் பிரகஸ்பதி ஐயாசாமியை மொளகாப் பொடியைப் போடுடான்று விட்டுட்டு வாய் கொப்பளித்து வர குழாயடிக்குப் போய்த் திரும்பறதுக்குள்ளே பூந்து விளையாடிட்டான்...” என்று அடுப்புத் தீயை ஏறத் தள்ளிக் கொண்டே சொன்னார் ராமையா.
“ஐயாசாமி எங்கே?”
“லெட்ரீனுக்குப் போயிருப்பான். தம் அடிச்சட்டுவர...”
“ஹத்தேரி கொடகல்னானாம். பின்னே ஒம்மைப்போல ஓல்டு மாடலாகவா இருக்க சொல்கிறீர்... பல் தொலக்காமே காபி சாப்பிடப்படாது. குளிக்காமே டிபன் செய்யப்படாது. ஒம்ம அஸிஸ்டெண்ட் அப்டுடேட். ரேடியாவில் பாட்டு வச்சா இவனும்கூட சேர்ந்து ஜமாய்க்கிறானே... தம் மாரோ தம் மிட்ஜாயே கம்.”
தோசை மாஸ்டர் சாரங்கன் குறுக்கிட்டான்.
“பெரியண்ணா இருந்தா ஒரே கர்நாடக சங்கீதம்தான். எப்படா ராஜாமணி வரும்னு பார்த்துக் கிட்டிருந்து இத்தனை மணிக்கு விவிதபாரதி... இன்ன டயத்துக்கு சிலோன்லே நேயர் விருப்பம்னு போய் நின்னுடறான்.”
“டேய் சாரங்கா... பிறத்தியான் விஷயம்னா வைத்தா காபி ஆத்தறாப்பிலே ஒரு ஆத்து ஆத்தாம விடமாட்டியே! நீ என்னடா யோக்யம்? உன் சங்கதி என்னடா... டூட்டி ஆஃப் கெடைச்சதும் நியூ சினிமா வாசல்லே சைக்கில் ஷாப்பாண்டே காலை ஆட்டிண்டு உட்காந்திருக்கே.”
“மாமாவுக்கு என்னை மோதறதிலே ஒரு குஷி. மாமா நான் வெறும் தோசை... நீங்களோ உளுத்த வடை, போண்டா... தாங்குவேனா?”
சுப்பண்ணா பெரிய உருவம், உயரமும் பருமனும் மிரட்டும். தோற்றம் தான் அப்படி. அப்பளக் குழவிக்கு எண்ணெய் தடவிய மாதிரி வழுக்கைத் தலை. பெரிய வட்ட முகத்தில் எந்த மூலையில் ஒரு ஜோக் காத்திருக்கிறது என்று குறுகுறுக்கும் கண்கள், உப்பலான கன்னம். வெற்றிலைப் புகையிலையால் எப்போது சிவப்புச் சாயம் கட்டின உதடு. ஹே... ஹே..ஹே என்று கேவிக் கொண்டு தொந்தி குலுங்கத் தலையை அண்ணாந்தவாறு சிரித்தாரானால், கண்ணை ஒட்டிய சதை இடுங்கி ஒரு தனி வசீகரம் நிலவும். அவருக்கு வாழ்க்கையே ஒரு பெரிய தமாஷ்.
“மசால் தோசை ரெடி” என்று லொட் லொட் டென்று தோசை கடாயை கரண்டியால் இரண்டு முறை தட்டினான் சாரங்கன்.
“சாரங்கா... மிருதங்கம் வாசிக்கக் கத்துக்கோடா... நன்னா முன்னுக்கு வருவே! ஐயாசாமி பெரிய பாட்டுக்காரானாயிடுவான். நீ அவனுக்குப் பக்க வாத்தியமா இருக்கலாம்” என்று வடைகளை எடுத்துக் கொண்டே சாரங்கனைச் சீண்டினார்.“நான் என்ன முன்னுக்கு வந்தா என்ன மாமா... பொண்ணா வச்சிருக்கீரு.” என்னை மாப்பிள்ளையாக்கிக்க?
எனக்கு ஒரு பொண் இருந்தா ஒன்னை மாதிரி தோசை தேச்சிட்டு டண்டண்னு மோளம் அடிக்கிற பயலுக்கா கொடுப்பேன்! என்று கேட்டவாறே கப்பண்ணா வடைகளைக் கம்பியில் கோத்து வாணலியில் எண்ணெய் இறுக்க வைத்தார்.
தென்னந் துடைப்பத்தால் எண்ணையையும் தண்ணீரையும் தொட்டுக் கொண்டு தோசைக் கடாயின் மேல் இரண்டு விசிறு விசிறி விட்டு, சாரங்கன் பதில் சொன்னான்.
“கவர்னர் வீட்டிலே சமையல் பண்றவனாப் பார்த்துக் கொடுப்பீங்களாக்கும்.”
சாரங்கன் ஜோக்கில் ஓஹோ வென்று சிரிக்கத் தொடங்கினார் குக் ராமையா.
“நீ கெட்டிக்காரண்டா சாரங்கா.”
“எப்படி மாமா?”
“நம்ம ராமையாவைச் சிரிக்க வச்சிட்டையே... இது போறாதா?”
ராமையா முகத்தில சிரிப்பு இன்னும் ஆறவில்லை. ஏழெட்டுக் குழந்தைகள். பெரிய குடும்பி. அவர் சிரிப்பது துர்லபம்.
அதற்குள் தோசை எடுத்துப் போக மாதவன் வந்தான்.
“என்ன மாதவா... பெரியண்ணா சுப்புணியை விசாரிச்சிட்டிருக்காரா?”
“ஸ்டோர் ரூம் ஜன்னல்லே அவன் மொகம் மட்டும் தெரிஞ்சுது. ஒரு விஷயம் மாமா.. ஜம்னா வந்திருந்தா...”
“எந்த ஜம்னா?”ஜமுனா
“மறந்தே போயிட்டீங்காளா?”
“ஓ... ரங்கண்ணா பொண்ணா... இவ்வளவு தூரம் வர மாட்டாளே...
“அவ வந்ததும் ரங்கண்ணா கூடவே போய்ட்டார்...
சுப்பண்ணா, ஓட்டல் தொழிலாளிகள் அனைவருக்கும் மாமா. ரங்கையர் மட்டும் அண்ணா என்பார். இவரும் அண்ணா என்பார். ரங்கையர் தான் பெரியவர். என்றாலும் அப்படி ஒரு மரியாதை அவர்களுக்குள் நிலவிற்று.
வடையை எடுத்துப் போகணியில் போட்டுக் கொண்டே சுப்பண்ணா தொடர்ந்தார்.
“போகறச்சே... ரங்கண்ணா மொகம் எப்படி இருந்தது?”
வாழை இலையில் சட்னியை ஊற்றியவாறு சாரங்கன் பதிலளித்தான்.
“ரங்கண்ணா மொகத்திலே எந்த துப்பைக் கண்டுபிடிக்க முடியும்... எல்லாம் வழக்கப்படிதான்...”
சாரங்கன் தோசைகளை எடுத்துக் கொண்டு போய் விட்டான். அவன் அகன்றதும் வேஷ்டி முனையைக் கையில் பிடித்தவாறு. ஆனந்தராவ் உள்ளே வந்தார். அரட்டை நின்று மரியாதையான மௌனம் நிலவிற்று.
சுப்பு என்று குரல் கேட்டபின் தான் அவர் வருகையை உணர்ந்தார் சுப்பண்ணா.
“சுப்புணி போக மாட்டான்... மடப்பய... ரேஸ் பிசாசு அவனைப் பிடிச்சுண்டு பாடாப்படுத்தறது. மற்றபடி தங்கமான பையன். ரொம்ப புழுங்கிச் சாகறான். செய்யறப்ப செஞ்சுட்டானே தவிர இப்ப அவமானப்படறான். போனாப் போட்டும், அவன் திருந்தறந்துக்கு ஒரு சான்று கொடுக்கணும். கோட்டா பண்ணாதீங்கோ. குத்திக் காட்டவும் வேண்டாம். எலேய் சுப்புணி...” என்று ஸ்டால் ஓரமாக நின்று சுவரைச் சுரண்டிக் கொண்டிருந்த சர்வரைக் கூப்பிட்டார் ஆனந்தராவ்.
“மூட்டையை வச்சுட்டு டேபிளிக்குப் போடா. பொறப்பட்டுட்டான். மகா ரோசக்காரன். தம்படி சேத்து வக்யல்லே. தடிமாடு மாதிரி வயசாச்சு. ஊர் ஊரா ஓட்டல் மாத்திண்டு திரிஞ்சா எவண்டா ஒன்னை நம்பிப் பொண்ணு கொடுப்பான்?”
இந்த சித்திரையில் சுப்புணிக்கு கல்யாணம் செய்துவிட வேண்டும் என்று தீர்மானித்திருந்தார் ஆனந்தராவ்.
சுப்புணி பாத்திரங்கள் அடுக்கியிருந்த ரேக்கின் கீழே பெட்டியை வைத்து விட்டு வெளியேறினான்.
சமையல் அறைக்குக் கீழண்டைப் பகுதியில் ப்ளஷ்அவுட் அடித்து கட்டைதைத்து பெரிய தடுப்பு ஸ்டாண்ட் நின்றது. உள்ளே கடகடா சூடு சூடு என்று மாவுரல் அரையும் ஓசை.
ஆனந்தராவ் தலையை மட்டும் நீட்டி உள்ளே எட்டிப் பார்த்தார்.
முட்டை விழிகளில் ஏதோ ஓர் ஆழ்ந்த சோகத்தைக் கிளறும் வெறிச்சிட்ட பார்வையோடு கணபதி மாவாட்டிக் கொண்டிருந்தான். பொத பொதவென்று ஊறிய மேனி.
அழுக்குப் பனியன். தொந்தி அவர் எட்டிப் பார்த்ததைக் கூடக் கவனியாமல், ஜடம் போல வேதாந்தி போல அரவைக் கல்லோடு ஒன்றி விட்டிருந்தான்.
“என்னடா கணபதி, இட்லிக்கா வடைக்கா?”
டக்கென்று நிமிர்ந்தான் கணபதி.
“சாயந்திரம் இட்லிக்குத்தான், அண்ணா.”
ஆனந்தராவைப் பார்த்ததும், கணபதியின் முகம் அசல் பெண்ணைப் போல் கோணிக் கொண்டது.
அவன் ஆனந்த பவனுக்கு வந்த சேர்ந்த கதை எல்லோரும் அடிக்கடி போடும் கும்மாளம். வயிறு முட்டச் சாப்பிட்டு விட்டு இருபது ரூபாய் பில்லோடு, கூட்டத்தில் நழுவப் பார்த்தானாம். ரங்கையா பிடித்து விட்டார் கையில் பைசா கிடையாது.
“விட்டுடு ரங்கா ஏதோ வயத்துக் கொடுமை” என்று ஆனந்தராவ் அவனைப் போகச் சொல்லியிருக்கிறார்.
“இருங்கண்ணா... இன்னிக்கு இவனை விட்டுட்டா, நாளைக்கு இன்னொருத்தன் கிளம்புவான். இவனுக்கும் இப்படியே தோல் தடிச்சுடும்” என்று, சாப்பிட்ட காசுக்கு மாவாட்டச் சொல்லியிருக்கிறார்.
மைத்துனி காயலா என்று புறப்பட்டுப் போன அரவை மாஸ்டர் குப்புசாமி, இரண்டு மாடு வாங்கிக் கொண்டு, பால் வியாபாரம் செய்ய ஊரிலேயே நின்றுவிட்டான். கம்பெனி சாப்பாட்டை ருசித்துப் பார்த்த கணபதிக்கும் இதைவிடச் சாயுஜ்ய பதவி வேறு கிடைக்காது என்று சபலம் தட்டி விட்டது.
அப்புறம் என்ன? ஆனந்த பவனில் கணபதி அரைவை மாஸ்டராகி விட்டான். அன்றைக்கு உட்கார்ந்த உரலை விட்டு இன்னும் எழுந்திருக்கவில்லை. தேரை மாதிரி இருந்தவனுக்குத் தொந்தி தள்ளி விட்டது.
இதுதான் ஆனந்த பவன். அங்கே தண்டிக்கப்பட்டவர்கள் கூட பந்தப்பட்டு விடுவார்கள். வாழ்க்கையின் அலையில் வீசியெறியப்பட்ட அனாதைகளுக்கு அங்கே சோறும் வேலையும் கிடைத்து அவர்கள் மனிதர்களானார்கள். வந்தவன் போக விரும்பமாட்டான். போனவனும் ஒரு நாளைக்குக் கண்ணீர் விட்டுக் கொண்டு வந்து நிற்பான். மாஜி அரவை குப்புசாமியும் மாடு திருடு போய் விட்டதென்று முதலாளியிடம் வந்து அழுதான். போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைசாமி ஆனந்தபவன் கஸ்டமர், மூன்று நாளில் மாடு கிடைக்க ஆனந்தராவ் ஏற்பாடு செய்தார்.
“இந்தப் பய இல்லேன்னா இப்பவே வந்துடுவேண்ணா” என்று தன் காலிஸ்தானத்தைப் பூர்த்தி செய்த கணபதியைப் பார்த்துச் சொன்னான் குப்புசாமி.
“அவன் இருந்தா என்னடா... நம்மகிட்டே வேறே வேலையா இல்ல? எப்ப வேணும்னாலும் நீ வரலாம்” என்று தைரியங் கொடுத்து அவனை அனுப்பினார் ஆனந்தராவ்.
கணபதி, முதலாளியைப் பார்த்து எழுந்திருக்க முயற்சித்தான்.
“நீ உட்காரு, வேலையைக் கவனி” என்று திரும்பும்போது அவன் உட்கார்ந்திருந்த ஜன்னல் ஓரமாகத் தெரிந்த காட்சியைக் கண்டு திடுக்கிட்டு, ஆனந்தராவ் இன்னொரு முறை எட்டிப் பார்த்தார்.
ஜன்னல் கம்பிகளுக்கு அப்பால் கிணற்றில் ஓரமாக பைப் தெரிந்தது. தண்ணீர்த் தொட்டி அருகே அலமேலு பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள். பக்கத்தில் அலமேலுவின் பெண் தங்கம் நின்று கொண்டிருந்தாள். தாவணி முந்தானையைக் கடித்துக் கொண்டு அவள் பார்வை சுழன்றது. அலம்பிய பாத்திரத்தை எடுக்கிற சாக்கில் சர்வர் மணி, அவள் பார்வைக்குக் கண்ணைச் சாய்த்துப் பதில் தந்து கொண்டிருந்தான்.
ஆனந்தராவ் அவளையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தார்.
தங்கம் குதிர் மாதிரி வளர்ந்து தலையில் ஒரு கூடை கனகாம்பரமும் கண்ணில் மையுமாக நின்றாள். காதுப் பென்சிலும் மடித்த வேஷ்டியும் பரட்டைத் தலையுமாக மணியின் வாயில் அசட்டு இனிப்பு. பாத்திரத்தை அலம்பும் அலமேலுவுக்கு இந்த நாடகம் நடக்கிற பிரக்ஞையே இல்லை.
ஆனந்தராவுக்கு சிரிப்பும் வந்தது, கோபமும் வந்தது.
இவ்வளவு வயசாய் விட்ட பெண்ணை இவள் எதற்கு ஓட்டலுக்கு இழுத்துக் கொண்டு வருகிறாள் என்று கோபம் அலமேலு மேல் வந்தது. தங்கத்தை அவர் ஓரிரு முறை ஓட்டலில் நடமாடும்போதே கவனித்திருக்கிறார்.
தான் வயசுக்கு வந்துவிட்ட பூரிப்புத் தாங்காமல், சதிர் நடை நடந்து கொண்டு வாலிபப் பையன்கள் வாயில் ஈ நுழைவது மாதிரி, தாடை விழுந்துவிட தன்னைப் பார்ப்பதில் ஒரு குஷியை தங்கம் அனுபவிக்கிறாள் என்று பட்டது.
அவனைக் கண்டிக்கிற சாக்கில் அலமேலுவுக்கும் ஒரு டோஸ் விட வேண்டும் என்று நினைத்தார். கண்டிப்பது மிரட்டுவது இரண்டுமே தன்னால் ஆகாது. ரங்கையரிடம் சொல்லிட வேண்டும் என்று முடிவு செய்தார்.
“மணி” என்று ஜன்னல் வழியாகவே மணியைக் கூப்பிட்டார் ஆனந்தராவ், கையும் களவுமாகப் பிடிபட்ட மாதிரி மணிக்குத் தூக்கிவாரிப் போட்டது.
சிவுக்கென்று, திரும்பிப் பார்த்துவிட்டு “இதோ, வந்தேண்ணா” என்று ஓடி வந்தான்.
“சதா கிணத்தடியிலே என்னடா வேலை?”
“டபரா செட் எடுக்கப் போனேண்ணா.”
“பாபா எங்கே போனான்...?”
ஆனந்தராவ் கேட்கவே, கையில் ஒரு பெரிய பக்கெட்டோடு பாபா அவர் எதிரில் வந்து நின்றான். பெரிய பயில்வான் போல பெரிய கொரில்லா உருவம் ஒரு பக்கத்துக்கு ஓர் இரும்புப் பலகை தைத்த மாதிரி விரிந்த மார்பு, வலை பனியன், அழுக்கு நிஜார்.. கையில் டஸ்டர் துணி, உணர்ச்சி ததும்பும் கண்கள், பெரிய உதடு.
ஆனந்த பவனில் ஐந்து மணி முதல் இரவு பத்து மணி வரை ரங்கையருக்கு ஈடாக உழைக்கிற இன்னொரு ஆத்மா பாபாதான். ஒரு நாளைக்கு அவன் பேசுகிற வார்த்தையை எண்ணி விடலாம். சர்க்கஸ் கம்பெனியில் இருந்தவன். மூன்றாம் வருஷம் அந்த ஊரில் முகாம் போட்ட சர்க்கஸ் கம்பெனி பற்றியெரிந்து விடவே, அவன் ஆனந்தபவனில் வந்து வேலைக்குச் சேர்ந்து கொண்டான்.
பாபாவால் யாருக்கும் எவ்விதமான தொல்லையும் ஏற்பட்டதில்லை. எனினும் அவன் அருகே வந்து நின்றதுமே எவரும் ஒரு பயத்தை உணர்வார்கள்.
“டபரா செட்டுகளையும், தட்டுகளையும் நீயே கெணத்தடியிலிருந்து கொண்டாந்துடு.”
“ஊம்” என்று ஆனந்தராவைப் பார்த்து பவ்யமாகத் தலையாட்டினான் பாபா.
மணிக்குக் கொஞ்ச நஞ்சமிருந்த சந்தேகமும் தெளிவாய் விட்டது. முதலாளி சுத்தமாக மோப்பம் பிடித்து விட்டார்.
“மணி, ரங்கண்ணாவைக் கூப்பிடு.”
“அவரு இப்பத்தான் வீட்டுக்கு போனாரு.”
“வீட்டுக்கா?” - ஆனந்தராவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“அவரோட பொண்ணு ஜமுனா வந்து கூப்பிட்டுக்கிட்டு போச்சு.”
“என்னமோ ஏதோ என்று ஆனந்தராவுக்குக் கலவரம் ஏற்பட்டது. கல்லாவில் உட்கார்ந்திருந்த ராஜாமணியிடம் வந்து விசாரித்தார்.”
“யாரோ ஆனந்தலட்சுமின்று ஒருத்தி வந்திருக்கான்னு சொன்னா ஜம்னா...!”
ஆனந்தராவின் முகம் சட்டென்று மாறிற்று.
“ஆனந்தலட்சுமியா! இத்தனை வருஷங்கள் கழித்தா...!”
“சரி... நான் வீட்டுக்குப் போறேன்” ஆனந்தராவ் உடனே படியிறங்கினார்.

Thursday, 17 January 2013

ஜமுனா -2

2
ராஜாமணி கேஷில் உட்கார்ந்து பில் வாங்கிக் கொண்டிருந்தான். மணி ஏழு ஆகிவிட்டதால் பஸ் ஸ்டாண்டுக்கு வருகிற கூட்டம் அதிகரித்து, வியாபாரம் சூடு பிடித்திருந்தது.
“என்ன டோனி கர்டிஸ்... காலையிலே கிரவுண்டுக்குப் போகலியா?” என்று பாட்மிண்டன் மட்டையை அநாயாசமாகச் சுழற்றியவாறு இளைஞன் போல் தாவிக் குதித்துப் படியேறினார். கெமிஸ்ட்ரி லெக்சரர் ராமபத்ரன். தலைநகரைதான் வயது நாற்பதைத் தாண்டி விட்டது என்று காட்டிக் கொடுத்தது. உடம்பிலும் கண்களிலும் ஜீவசக்தி துள்ளியது.
ராஜாமணி எழுந்து நின்றான்.
“இல்லே சார்... ‘பார்ட்னர்ஸ்’ கெடைக்கலே.”
“ஸிட் டவுன்” “ஸிட் டவுன்” அநாயாசமாகக் கையசைத்தார்.
“நேத்து கிரவுண்ட்லே உன் ‘பிளே’வைக் கவனிச்சேன். நாட்பேட். ஆனா இன்னும் அலெர்ட்னஸ் வேணும், பேட்டிங்கில் ஷோ முக்கியமில்ல. உன் ப்ளேயிலே டிஸ்பிளே இருக்கு. ஆனா ஸ்விங் வேணும். பேட்டிங்குக்கு எனர்ஜியும் அக்யூரஸியும் முக்கியம். சும்மா சும்மா ஆனந்த பவன் மசால் தோசைகளையும், ஆமவடைகளையும் ஒரு கை பார்த்துண்டிருந்தா போதாது. யு ஷûட் லிஸன் ப்ளேயர்ஸ்... மெட்ராஸிலே டெஸ்ட் மாட்ச்சு இருக்கு பாக்கப் போறியா...?”
ராமபத்ரன் ஆல் ரவுண்டர். கிரிக்கெட், செஸ், கர்நாடக சங்கீதம், வேத அத்யயனம், கம்யூனிஸம், ஜாகரபீ, நவீன இலக்கியம், சினிமா எதற்கும் அவர் ஈடுகொடுப்பார். ‘அப்டுடேட்’டாக இருப்பார். ராஜாமணியின் கிரிக்கெட் ஈடுபாட்டிற்கு, அவர் தான் பிள்ளையார் சுழி போட்டவர்.
tய“இல்லீங்க சார்... ஸீஸன் டிக்கெட் கெடைக்கலே...”
“கெடைக்கலேன்னு முக்கரணம் சொல்லலாமா, கிரிக்கெட், ப்ளேயரா இருந்துண்டு? முண்டியடிச்சு போட்டு ஊரெல்லாம் அரிச்சாவது, ஒரு டிக்கெட்
வாங்கணுமோல்லியோ?
பில்லை வாங்கிப் போட்டவாறே ராஜாமணி பதிலளித்தான்.
“ஐ ட்ரைட் மை பெஸ்ட்.” - அவன் குரலில் உண்மையாகவே ஏக்கம் தொனித்தது.
“எங்கிட்டே ஒரு டிக்கெட் இருக்கு.”
“சார்... சார்...” - சட்டென்று ராஜாமணி கல்லாவை விட்டே எழுந்து விட்டான்.
“ஸிட் டவுட்... ஸிட் டவுன்... மை பாய், எவ்வளவு ரூபா கொடுப்பே?” என்று கண்களைச் சிமிட்டினார் ராமத்ரன்.
“கேக்கற ரூபாயைக் கொடுத்துடறேன் சார்.”
“ஈஸிட்...” என்று கேட்டுவிட்டு அவனைக் குறுகுறுவென்று பார்த்து, மெல்ல விசிலடித்தார் ராமபத்ரன்.
“என்ன சார்?” என்று நம்பிக்கையும் சந்கேமும் ஊசலாட, அவரைப் பார்த்து ராஜாமணியின் கண்கள் கெஞ்சின.
“தௌஸண்ட் ருபீஸ்...”
“மை காட்” என்று நாற்காலியில் உட்கார்ந்து விட்டான்.
“ஈஸி மை பாய், இவ்வளவுதானா உன் இன்ட்ரஸ்ட்?
“என் இன்ட்ரஸ்டுக்கு எல்லை இல்லை சார்... கபாஸிட்டிக்குத்தான்...”
“இட்ஸ் ஆல் ரைட்... எனக்காக என்னுடைய அத்திம்பேர் பிள்ளை வாங்கி அனுப்பிச்சிருந்தான், நான் போய்ப் பார்க்கிறதை விட, நீ போய்ப் பார்க்கறது யூஸ்ஃபுல்லா இருக்கும். சாயந்திரமா வீட்டுக்கு வா.
“பணம் சார்...?” என்ற இழுத்தான் ராஜாம்.
“என்கிட்டே அத்திம்பேர் பிள்ளை பணம் வாங்க மாட்டேன்னுட்டான். நான் எப்படி உங்கிட்டே வாங்கறது?” அவர் விடுவிடுவென்று உள்ளே நுழைந்தார்.
“சார்... சார்” என்று ராஜாமணி கூப்பிட்டான்.
அவன் குரலைப் புறக்கணித்து விட்டு உள்ளே யாரோடோ ராமபத்ரன் பேசத் தொடங்கிவிட்டார்.
“ஹலோ பத்மநாபன்... நேத்து ரேடியோவிலே படேகுலாம் பாட்ட வச்சானே, கேட்டீரா ஐயா... மைகாட்... அது என்னப் பாதுகுரலா... ஆத்மாவே குமுர்றாப்போல இருக்கு. சஞ்சாரங்கள்ளே என்ன டெப்த்... திரில்... திரில்... கிரேட் த்ரில்.”
ராஜாமணி வாயடைத்து விட்டான். இதுதான் ராமபத்ரன். நல்லதையும் கெட்டதையும் சட்டையில் ஒட்டிய தூசு மாதிரி உதறிவிடுவார்.
“எல்லாவற்றையும் எல்லாரையும் முன்னேற்றத்தை நோக்கி உதைத்துத் தள்ளு. அப்புறம் வாயை மூடிக்கொள். இதை நான் சொல்லலே. அப்பா, விவேகானந்தர் சொல்லியிருக்கிறார்...” என்பார்.
நிறையப் பேர் சொல்வார்கள். மேற்கோள்களை இரண்டு ஜேபிகளிலிருந்தும் எடுத்து அள்ளி வீசுவார்கள். விவகாரம் வரும்போது பின்வாங்கி விடுவார்கள். ராமபத்ரன் முரண்பாடு இல்லாதவர். பல இளைஞர்களின் உள்ளத்தில் அவர் வாக்கு ஒரு விளக்காகி இருக்கிறது.அது தான் கேஷ் டேபிளில் உட்கார்ந்திருந்த அவனை எழுந்திருக்க வைத்தது
ராஜாமணியின் உருவாக்கத்தில் அவர் பங்கு முக்கியம்.
வெளியே நிற்கும் சைக்கிளை எடுக்கச் செல்வதற்காக ஜீப் ஒன்று மெயின் ரோடில் விட்டு விட்டு ஹார்ன் செய்தது. டி.எஃப்.ஓ.ப் டிரைவர் ஜீப்பிலிருந்தவாறே ராஜாமணியைப் பார்த்துக் கையை அசைத்தான்.
“உமாசங்கர்... வெளியே ஜீப் நிற்க வழியில்லாமே சைக்கிளை விட்டிருக்காங்க பாரு” என்று உரக்கச் சொன்னவாறு மேஜை மேலிருந்த ‘காலிங் பெல்’லை அடித்தான்.
உமாசங்கர் போய்ச் சைக்கிளை எடுத்து ஒதுக்கிவிட்டு ஜீப்புக்கு வழி செய்தான்.
டிரைவர் வந்து கல்லாவுக்கு எதிரில் ஐஸ் ப்ளாண்டிற்குப் பக்கத்தில் போட்டிருந்த மேஜையருகில் உட்கார்ந்தான்.
“என்ன டிரைவர்?”
“ரிலீவர் வந்துட்டாரு... ஐயா நாளைக்குச் சார்ஜ் கொடுத்துடுவாரு...”
“அப்படியா...?”
ராஜாமணிக்கு முகம் வாடிவிட்டது. ஒரு காலை நேரத்தில் இனிப்பும் கசப்பும் எப்படி அடுத்தடுத்து வருகின்றன. டெஸ்ட் மாட்சுக்கு டிக்கெட் கிடைத்துவிட்டது. டி.எஃப்.ஓ. பங்களா இனி அந்நியமாகிவிடும் சார்ஜ் கொடுத்துவிட்டு டி.எஃப்.ஓ. நாளை கிளம்பப் போகிறார்.
சேக்ரட் ஹார்ட் கல்லூரிக்கு அருகில் மாதிரிக் காடு போல் உயர்ந்த மரங்களும், அடர்ந்த நிழலும் கவிந்த டி.எஃப்.ஓ. சார்ஜ் கொடுத்துவிட்டு நாளை கிளம்பப் போகிறார்.
டி.எஃப்.ஓ. சோமையா குடகு நாட்டைச் சேர்ந்தவர் குடகு 0ராஜாமணி.
மலிவான வாயில் சேலை, கறுப்பு வாயில் ரவிக்கை கழுத்தில் ஒரு கறுப்பு மணி. கைகளில் பிளாஸ்டிக் வளையல்கள்.
ராஜாமணிக்கு காலையில் நஷ்டமும் லாபமுமாகக் கிடைத்த இரண்டு உணர்வுகளும் சட்டென்று மறந்து விட்டன. ஓட்டலும், அவன் கல்லாவில் உட்கார்ந்திருப்பதும் ஒரு கணம் மறந்து விட்டது.
மை தீட்டிய கரிய இமைகள், இளஞ்சிவப்பு நிறமான உதடுகள், எலுமிச்சை நிறத்தில் கன்னங்கள் மட்டும் மஞ்சள் பூச்சையும் மீறிச் சிவந்திருப்பதும் உடல் வாகில் மிதமான சதை பிடித்திருப்பதும் எல்லாமே ஓர் அதிசயம்போல் தென்பட்டன.
ஜமுனா அவனைப் பார்த்து இனிமையாகச் சிரித்தாள். அவளது குளிர்ந்த கண்கள் உருண்டபோது, ஒரு காந்தப் பகுதி நோக்கி தன் வலிமையை எல்லாம் இழந்து தான் ஓடுவது போல் உணர்ந்தான்.
“ராஜு... அப்பாவைப் பார்க்கணும்” என்று சொன்னாள்.
அந்தக் குரல் ஐந்து வருஷத்துக்கு முன்கேட்ட ஜமுனாவின் குரல் போலவே இல்லை. இந்த நெகிழ்வும் ஒரு சங்கீதச் சாயலும் இவள் குரலுக்கு எப்போது வந்தன? பழைய ஜமுனாவா இவள்? பாவாடையில் மூக்கைத் துடைத்துக் கொண்டு கையிலும் காலிலும் தெருப்புழுதியில் அளைந்து மண்ணைப் பூசிக் கொண்டு வந்த அந்த ஜமுனாவா...?
ராஜாமணி, ரங்கையர் வீட்டுக்குப் போய் ஐந்து வருஷமாகிறது. இந்த இடைவெளியில் காலம் அவளை எப்படியெல்லாம் அலங்கரித்து விட்டிருக்கிறது. அவன் அவள் கேட்டதைக் கூட மறந்து அவனது யௌவனத்தின் காந்தச் சுழல்களில் தடுமாறிக் கொண்டிருந்தான்.
ஜமுனாவுக்கு சிரிப்பு வந்து விட்டது.
களுக்கென்று வாய் விட்டுச் சிரித்து விட்டாள். சட்டென்று சிரிப்பை வாய் மேல் கையை மூடி மறைத்துக் கொண்டாள்.
“ஆ...ஆம்... என்ன கேட்டே?”
புன்முறுவல் மாறாமல், அவனை ஒரு பழைய சிநேகிதனைப் பார்ப்பது போன்ற கனிவுடன் பார்த்தவாறே “என்ன அப்படிப் பார்க்கிறே... நான் யாரு தெரியுதா... ஜம்னா...” என்றாள்.
“ஜம்னா...ஓ...தெரியுமே... என்னமா வளர்ந்துட்டிருக்கே! என்ன கேட்டே...?”
“அப்பாவைப் பார்க்கணும்னேன்.”
“உட்காரேன்...” கணகணவென்று மேஜை மேலிருந்த மணியை அடித்தான் ராஜாமணி.
ரங்கையரே வந்துவிட்டார்.
“என்னம்மா...?” என்று திடுக்கிட்டவாறே அவர் ஜமுனாவைப் பார்த்தார்.
“யாரோ ஒருத்தி வீட்டுக்கு வந்திருக்காப்பா... பேரு ஆனந்த லட்சுமியாம். சேப்பா ஒல்லியா இருக்கா. கேதார் நாத்துக்குப் போறாளாம். வர்ற வழியிலே ஒங்களைப் பார்க்கணும்னு தோணித்தாம்.”
ஆனந்தலட்சுமி என்ற பெயரைக் கேட்டதும் ரங்கையர் முகம் மாறி விட்டது.
“சரி...சரி... அதுக்கு நீயே வரணுமா? வேற யாரையாவது அனுப்பிச்சிருக்கப்படாதா...?” என்று இதமாகக் கடிந்து கொண்டார்.
“இல்லப்பா... அவ பத்து மணி வண்டியிலே பொறப்படணும்னு அவசரப்பட்டா. வீதியிலே பையன்கள் யாரும் கெடைக்கலே...” என்று தன்ங தவற்றை உணர்ந்தது போல் கீழுதட்டை லேசாகக் கடித்துக் கொண்டாள் ஜமுனா.
அந்தக் கடிபட்ட கீழுதடு ராஜாமணியின் மனசில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்திற்று.
“ராஜா... நான் வீடு வரைக்கும் போயிட்டு வர்றேன். அண்ணா வந்தார்னா சொல்லிடு” என்று உடனே கிளம்பினார் அவர்.
ரங்கையர் படியிறங்கும்போது ஜமுனா அவளும் ராஜாமணியும் சேர்ந்து விளையாடிய காலங்களை நினைத்து மெதுவாகப் புன்னகை செய்தாள். அன்று கல்லாவில் உட்கார்ந்ததற்கு அற்புதமான பரிசு கிடைத்த மாதிரி ராஜாமணிக்குச் சிலிர்த்தது.

Tuesday, 15 January 2013

ஜமுனா-1

ஜமுனா
1
காலையில் காபி சாப்பிடுவோர் ஒவ்வொருவராகப் படி ஏறி ஏறி வந்து கொண்டிருந்தனர். ஆனந்த பவன், மெயின் ரோட்டில் இருந்து ஏழு படி உயரம். கோவிலுக்கு மலை ஏறுவது மாதிரி தான் ஏறி வரவேண்டும். அவ்வளவு உயரம் ஏறுவதை யாரும் பொருட்படுத்தவில்லை. நல்ல காப்பிக்கும் டிபனுக்கும் அதுவும் ஒரு விலைதானே!
சர்வர் ரங்கையர், பணம் வாங்கும் மேஜைக்குப் பின் சுவரில், உயரத்தில் மாட்டியிருந்த சுவாமி படங்களுக்குப் பூ மாட்ட வந்தார். முதலாளி ஆனந்தராவ், நாற்காலியைப் பின்னால் இழுத்துக் கொண்டு கல்லா மேஜையை விட்டு எழுந்தார். கல்லா ஒரு மேடையில். அந்த மேடையை விட்டு இறங்கி இரும்பு கேட்டின் ஓரத்தில் நின்று, படிக்கட்டுகளில் தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டிருப்பதைக் கவனித்தார்.
மெயின் ரோட்டில் இடமும் வலமுமாக வருவோர் போவோரை வேடிக்கை பார்க்கலானார். அருகிலேயே பஸ் ஸ்டாண்ட். எனவே காலை நேரத்துச் சுறுசுறுப்பு வேகமாகப் பரவியிருந்தது.
தெரிந்த வாடிக்கைக்காரர் ஒருவர் வரவே, “வாங்கோ, ராஜப்பன்... நேத்து ராத்திரி ரேடியாவிலே படே குலாம் அலி பாட்டு வச்சிருந்தானே.. கேட்டீரா?”
“கேட்டேன் ராயரே... ரெண்டாவது ரெக்கார்ட் அற்புதமாயிருந்தது.”
“முதல் ரிக்கார்ட் மட்டுமென்னவாம்? அந்நேரத்துக்கு நான் உம்மை நினைச்சுண்டேன்.”
வாக்கிங் ஸ்டிக்கும் கையுமாக வக்கீல் வாசுதேவாச்சார் அதிகாலை வாக்கிங்கிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார். எழுபது வயசுப் பழம் என்று அந்த மிடுக்கைப் பார்த்துச் சொல்ல முடியாது.
“என்ன வக்கீலண்ணா... தயவே காணோமே... நேரா போயிண்டிருக்கீரே?...”
“போடா ஆனந்தராவ்... நீ தினம் இப்படிக் கூப்பிட்டுக் கூப்பிட்டே எனக்கு காபி பழக்கம் வீக் பாயிண்டாப் போச்சு.
இன்னையிலிருந்து விட்டுடலாம்னு டிஸைட் பண்ணினேன்” என்று அந்தத் தீர்மானத்தைக் காற்றில் பறக்கவிட்டவாறே படிக்கட்டில் ஏறினார்.
“காபியை விடுங்கண்ணா... நான் வேண்டாங்கலே! காலை வாக்கிங்குக்கு அப்புறம் கடையை எட்டிப் பார்த்துட்டுப் போங்கோ. நீங்க வந்து போகலேன்னா எனக்குக் காபி சாப்பிடாத மாதிரி இருக்கு. இன்னிக்கு எவ்வளவு தூரம் போயிட்டு வந்தீங்க?”
“தாழம்புதர் தாண்டி பால்நாங்குப்பம் ரோடு வரைக்கும் போனேன்.”
“அடேயப்பா ரெண்டு ரெண்டரை மைல் இருக்குமே! ஒங்க வயசுக்கு நாங்க நடமாடறோமோ இல்லையோ?” ஆனந்தராவின் பெரிய முகத்தில், வயதானாலும் பிரகாசம் மங்காத கண்களில், பிரியம் தெரிந்தது.
வஞ்சனையின்றி வளர்ந்த உடம்பில், மொத்து மொத்தென்று குத்திக் கொஞ்சி விளையாடத் தூண்டும் சதைப் புஷ்டியும், தொந்தியும் அவர் மனசின் போஷாக்காகவே தெரிந்தன. வாசுதேவாச்சார் கிரிமினல் புலி. ஒரு பார்வையிலேயே குற்றவாளிக்குக் குலை நடுங்கும். ஊரே அவரைப் பார்த்தால் மரியாதையோடு பயந்து ஒதுங்கும். ஆனால் ஆனந்தராவ் அந்த இரும்புக் கோட்டைக்குள்ளும் கூட ஒரு காந்த ஊசி மாதிரி நுழைந்து விடுவார்.
வெறும் பிசினஸ் பேச்சு அல்ல அது. தானாக இழைந்து ஓடி வந்து மனசோடு குலாவும் பேச்சு. அதனால் வாசுதேவாச்சாரின் கிரீடம் கூட அங்கே இறங்கி விட்டது.
ஆனந்தராவ் உள்ளே திரும்பி, “மாதவா வக்கீல் அண்ணா வந்திருக்கார்... காபியை விட்டுடப் போறேங்கிறார். கவனி...” என்று குரல் கொடுத்தார். மறுபடியும் வாத்சல்யப் புன்னகை.
“நீ எங்கே என்னை நல்ல கதிக்கு விடப்போறே? டிக்ரியா ஒரு காபி கொண்டா மாதவா” என்று அமர்த்தல் புன்னகையோடு ஹாலுக்குள் நுழைந்தார் வாசுதேவாச்சார்.
அவர் உள்ளே போனதும் கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தா கிருஷ்ணமூர்த்தி, கையில் பிளாஸ்கோடு வேகமாகப் படியேறினான்.
“என்ன கிட்டு பிரசவமாயிடுத்தா?”
“இல்லீங்க ராயர்வாள்... ராத்திரி ஒம்பதுக்கு ஆரம்பிச்ச வலி இன்னும் நின்ன பாடில்லே. இன்னும் ரெண்டு மணி ஆகுமாம்...!”
“கவலைப் படாதே... தலைச்சனோல்லியோ... வலி இருக்கத்தான் செய்யும். உடுப்பி கிருஷ்ணன் காப்பாத்துவான். நல்லபடியா க்ஷேமமா, பிரசவம் ஆகும். ஆண் கொழந்தைதான். ஸ்வீட்டுக்கு எங்கிட்டே தானே ஆர்டர் கொடுக்க வரப்போறே! பாரேன்.”
“சாந்தா துடியாத் துடிக்கிறா ராயரே...!”
“த்சு...த்சு... பாவம்! கொழந்தைக்கு ஒல்லியான உடல் வாகு. ம்ம்.. ஆஞ்சநேய சுவாமிக்கு வடைமாலை சாத்தறதா வேண்டிக்கோ கிட்டு.”
ஆனந்தாவின் கரிசனமும், வாஞ்சையும் கிட்டுவின் முகத்தில் படர்ந்திருந்த கவலையைக் குறைத்தன.
“காபிக்கு வந்தியா?”
“ஆமாம், ராயர்வாள்”
“போ...போ... கிச்சன்லே உமாசங்கர் தான் இருக்கான். நீயும்தான் என்ன பண்ணுவே? ஒண்டிக்கட்டை, கூட மாட ஒத்தாசைக்கும் ஆளில்லே.”
கிட்டு உள்ளே போனான்.
உடனே பால்கார வடிவேலு, சைக்கிளில் பால் கேனோடு ஒய்யாரமாக வந்து, பெடல் ‘நக்’கென்று படியில் இடிக்க ஓரத்தில் நிறுத்தினான்.
“வடிவேலு... இன்னும் கொஞ்சம் காலம்பறவே வந்துடப்படாதா?”
“நான் என்னா சாமி பண்ணட்டும்? எவ்வளவு கறுக்கலே கிளம்பினாலும் நாலு மைல் வர்றதுக்குள்ளே பொழுது விடிஞ்சுடுது. ஒங்களுக்குப் பரவால்லே... பக்கத்து சந்திலே வீடு... அஞ்சு பத்துக்கு டக்குணு வந்து கல்லாவிலே குந்திடுவீங்க.”
‘கண கண’ வென்று சைக்கிள் மணியை முழக்கியபடி பேசினான்.
உமாசங்கரும் சாரங்கனும் வெளியே வந்து கேனுக்கு வடிவேலு கட்டியிருந்த கயிற்றை அவிழ்ப்பதை வேடிக்கை பார்த்தவாறே நின்றனர். உமாசங்கர் முகம் மட்டும் சுண்டியிருந்தது.
“காபிக்குப் பால் காய ஒரு மணி நேரமாவது ஆகும். காயாத பால்லே காபி போட்டா ஆனந்தபவன் பேரு ரிப்பேராக வேண்டியதுதான். “மாருதி கேப்” காரனுக்கு மட்டும் விடிகாலையிலே பால் எப்படி வர்றதாம்?” என்று பொரிந்தான் உமாசங்கர்.
வடிவேலுவை அது தாக்கிற்று.
“மாருதி கேப்புக்கு பால் ஊத்தறதை இவன் பாத்தானா? இவனுங்க என்ன சாமி அதிகாரம் பண்றது? பாத்தாலும் புரூஃப் பண்ண முடியுமா? இந்த சைக்கிள்ளே இன்னிக்கு நேத்தா கேன் கட்டி வர்றேன்? பத்து வருசம், ஆனந்தபவனைத் தவிர ஒரு ஓட்டலுக்கு நான் பால் ஊத்தறதா ப்ரூஃப் பண்ணட்டும், நான் வியாபாரத்தை விட்டுட்டு எருமை மேய்க்கறேன் சாமி...”
வடிவேலு விடுவிடு வென்று பேசிக் கொண்டே, கயிற்றை அவிழ்த்தான்.
“விடுடா வடிவேலு... அவனுக்குப் பால் காயற கவலை... உனக்கு சைக்கிள் மிதிக்கிற தொல்லை... ரெண்டு பேரும் ஒரு அட்ஜஸ்மெண்டுக்கு வந்துடுங்கோ... மடமடண்ணு சொரபாணம் மாதிரி உனக்கு ரோஷம் வந்துடறது. ஆனந்தபவனை நீ விட்டுடுவியா? இதுதான் உன்னை விட்டுடுமா? உமா, வடிவேலுக்கு ஒரு டிகிரி காபி கொடுத்து சமாதானம் பண்ணிக்கோ.”
பொங்கிய வடிவேலு, தண்ணீர் தெளித்த மாதிரி அடங்கி விட்டான்.
பால் கேனை சாரங்கனின் தோள் மீது ஒரு கையைப் போட்டபடி பிடித்துக் கொண்டு, படியேறினான் உமாசங்கர். வடிவேலு சைக்கிளைப் பூட்டிக் கொண்டு பின்தொடர்ந்தான்.
பூ சாத்தி முடிந்ததா என்று திரும்பிப் பார்த்தார் ஆனந்தராவ்.
ஒரு கொத்து ஊதுவத்தியைக் கொளுத்தி உள்ளங்கையால் மறைத்தவாறே தீக்கொழுந்தை அவித்தார் ரங்கையர். நெருப்புப் பொறி சிதறிற்று. மின்மினி பறப்பது போல.
அதிகாலைக் குளியலும் பூஜையும் முடிந்து விட்டன என்பதன் அடையாளமாக, ரங்கையர் முகத்தில் விபூதிப் பட்டை பிரகாசித்தது.
கடை மூட எப்படியும் மணி பத்தரை ஆகும். கணக்கை முடித்துக் கொண்டு ஆனந்தராவ் கிளம்புகிறவரை ரங்கையர் உடன் இருப்பார். ஐந்து மணி முதல் ஆஜர் அவர்தான். வயசு ஐம்பத்தைந்து, என்ன குளிர்! என்ன மழை! எதுவும் இந்த வழக்கத்தைக் குலைத்ததில்லை. ‘இந்த மாமூல், தள்ளாமையில் கூட மாறாது போலிருக்கே’ என்று யோசித்த ஆனந்தராவுக்கு, வெட்கமாக இருந்தது.
காரணம், ஒன்பது மணிக்குத்தான் அவர் குளிக்கப் போவார். அப்படிப் பழக்கமாய் விட்டது. அதனாலேயே குளிக்காமல் முதலில் கல்லாவில் உட்காரக் கூடாது என்று ரங்கையர் கெடுபிடிக்கு மரியாதை தந்து, அவரையே கொஞ்ச நேரம் கல்லா பார்க்க விட்டு விடுவார் ஆனந்தராவ்.
அப்புறம் ஆனந்தராவின் இரண்டாவது பிள்ளை ராஜாமணி ஒன்பது மணிக்கு வருவான். காலையில் கிரிக்கெட் ப்ராக்டீஸுக்குப் போய் விட்டுக் குளித்து வர அவ்வளவு நேரமாகி விடும். அப்புறம்தான் அவருக்கு ஓய்வு கிடைக்கும்.
ஸ்டூலின் மீது நின்றிருந்த ரங்கையர், கீழே இறங்கி அதற்கு மேலே படிந்த கால் தூசை ஒரு துணியால் தட்டிவிட்டு பின்னரே ஆனந்தராவ் கல்லாவுக்குப் போனார்.
ரங்கையர் ஸ்டூலை எடுத்துக் கொண்டு போய் மெயின் ரோட்டுக்குப் பார்வையாகப் போட்டுவிட்டு, மெனுபோர்டை எடுத்து வைத்தார். ஈரத் துணியில் நேற்றைய ஸ்பெஷலை அழித்துவிட்டு இன்றைய ஸ்பெஷலை எழுதத் தொடங்கினார்.
“இட்லி கொத்ஸு... மெதுவடை... பொங்கல் அவியல்” அப்போதுதான் ஆனந்தராவுக்கே அன்றைய அயிட்டம் தெரிந்தது.
“சாஹு போட்லியா... ரங்கா?”
“சாஹுதான் நேத்திக்குப் போட்டோமே அண்ணா.”
“ஓ! மறந்துட்டேன்.”
சாம்பிராணிப் புகை காட்ட நெருப்பை அள்ளி வரச் சாம்பிராணிக் கரண்டியை எடுத்துக் கொண்டு உள்ளே போனார், ரங்கையர்.
‘வேற யாராவது க்ளோஸா கவனிச்சாள்னா ஓட்டல் என்னிதா, ரங்கனோட தான்னு சந்தேகப்பட்டுடுவா. அவன் கட்டளை தான் ஓட்டலை நடத்தறது’ என்று நினைத்தார் ஆனந்தராவ், அடுத்த கணம் ‘கிருஷ்ண... கிருஷ்ண’ என்று மனசிற்குள் அபராதம் சொல்லிக் கொண்டார்.
“ஓட்டல் என்னிதா என்ன... இந்த ரங்கையர்... சரக்கு மாஸ்டர் சுப்பண்ணா... சமையல் ராமையா... ஸ்டோர் ரூம் மரியதாஸ்... இவர்களோடது. நான் என்ன, வெறும்
அடையாளம், நாற்காலியிலே உட்கார்ந்திருக்கேன். சும்மா காசை வாங்கிப் போட்டுட்டா ஆச்சா... இன்னிக்கு நேத்தா! பதினெட்டு வருஷமாச்சு. என்ன நெருக்கடி எவ்வளவு சோதனை.’
ஆனந்த பவனின் வளர்ச்சி சிறு செடியாக, மரமாக எத்தனையோ காற்று மழைகளை எதிர்ப்பட்டு உருவான கதை அவர் மனசில் மீண்டும் ஓடிற்று.
ஐந்தாம் வருஷம் சம்பத்துச் செட்டியார் கட்டிடத்தை வாங்கி, வேறு விலாசத்தில் கடை போடக் காலி செய்து தீர வேண்டுமென்று வந்து நின்றது ஞாபகம் வந்தது.
“செட்டியார்வாள்! இது வெறும் வியாபார ஸ்தலமில்லே. ஒரு குடும்பம். பதிமூணு வருஷமா ஊரோடே பழகிட்ட குடும்பம். பிடிவாதம் பிடிச்சுக் குடும்பத்தைக் கலைச்சிடாதீங்க. எங்களுக்கு வேலை கிடைக்காம போயிடாது. எங்க முதலாளியும் பட்டினியா இருந்துடப் போறதில்லை. ஆனா இந்தக் குடி சிதறிடும். நீங்க வக்கீலுக்கும் கோர்ட்டுக்கும் அழுது, காரியத்தை வேணும்னா சாதிச்சுடலாம். ஊர்ப் பகை வந்துட்டா நீங்க தொழில் செய்யவிடாது.” இது ரங்கையர்.
ரங்கையர் அதிகமாகப் பேசமாட்டார். எப்போதாவது பேசுவார். பெரிய மௌனத்தை அவசியம் ஏற்பட்டுக் கலைப்பதால் அந்தப் பேச்சில் கண்டாமணி போன்ற வலிமையும் தெளிவாக ஒலிக்கும்.
எதிர்ச்சாரி கடைக்காரர்கள்... வக்கீல் வாசுதேவாச்சார்... சேர்மன் முதலியார்... பெட்ரோல் பங்க் சிதம்பரம். ஒருவரா இருவரா... எத்தனை பேர்! சம்பத்து செட்டியார் பின்வாங்கி விட்டார்.
‘அண்ணன் தம்பியும், பெத்த பிள்ளைகளுமா சிப்பந்திகள் துணை. கிருஷ்ணப் பிரசாதமா கஸ்டமர்களோட வாஞ்சை. நானா இந்த ஓட்டலை நடத்திண்டிருக்கேன்... கிருஷ்ண... கிருஷ்ண... எல்லாம் நீ விளையாடிண்டிருக்கே.. . உன் சக்கரம் சுத்திண்டிருக்கு. நான் சம்பளம் இல்லாத குமாஸ்தா...’ என்று தமக்குள் முனகிக் கொண்டார்.
அவருடைய பிள்ளை ராஜாமணி சைக்கிளில் வந்து இறங்கினான். கிரிக்கெட் பேட்டை கேரியரிலிருந்து பிரித்து எடுத்து லாவகமாகச் சுழற்றிக் கொண்டே படியேறி காலண்டர் மாட்டியிருந்த சுவரில் சாய்த்து வைத்துவிட்டுத் திரும்பினான்.
ஸ்போர்ட்ஸ் பனியன்... பேண்ட்... கான்வாஸ்ஷý அகன்று விரிந்த மார்பு. லேசாக அரும்பிய மீசை. சந்தன நிறம், ஆனந்தராவ் மாதிரியே பெரிய கண்கள். ஆனால் அவற்றில் லட்சியமும் கனவுகளும் மிதந்தன. ‘சிவுக்’கென்று வெளிவந்த மாதிரி காணப்பட்ட கீழ் உதடு சற்றுப் பருமன்.
“ஏண்டா ராஜா... விளையாடப் போகலியா?”
தந்தையும் மகனும் வீட்டில் கூடத் தமிழ் தான் பேசுவர். ஏதோ ஒரு நேரத்தில், மனசு தோய்ந்த அந்தரங்கத்தில்தான் கன்னடம் வரும்.
“இல்லேப்பா... சந்துருவுக்கு ஜுரம், அவன் வரல்லே. காப்டன் நரசிம்மன் மெட்ராஸுக்குப் போகணும்னான், அந்திம்பேரிடமிருந்து டெலிகிராம் வந்திருக்குண்ணு போய்ட்டான். இவங்க ரெண்டு பேரும் போயிட்டா பௌலிங்குக்கு தோதான ஆளில்லே... வந்துட்டேன். நீங்க போய்க் குளிச்சிட்டு வாங்க” என்று ஷýவை அவிழ்த்து ஓரமாக விட்டவன், கல்லா மேடையில் ஏறப் போனான்.
“அரே பகவான்... மறந்தே போயிடறது அப்பா. ஸ்டோர் ரூமுக்குப் போய் வேஷ்டி மாத்திகிட்டு வந்துடறேன். ரங்கையர் பார்த்தா கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுடுவார்” என்று வேகமாக ஸ்டோர் ரூமுக்குப் போனான்.
ஓட்டல் தொடங்கும்போது ராஜாமணி ஐந்து வயசுப் பையன். ரங்கையர் கையைப் பிடித்துக் கொண்டு, கடைக்கு வருவான், அடுக்களையில் அவனை உட்கார வைத்து வெண்ணெய் தோசை போட்டுக் கொடுத்துஅவன் சாப்பிடுவதை, தாய் மாதிரி ரங்கையர் கரிசனத்தோடு பார்ப்பார்.
‘இப்போது எவ்வளவு வளர்ந்து விட்டான்...’ என்று நினைத்தார் ஆனந்தராவ்.
ராஜாமணி வந்ததும் கல்லாவை விட்டு ஆனந்தராவ் கிளம்பவும், பால்கார வடிவேலு தலையைச் சொறிந்து கொண்டு எதிரே வரவும் சரியாக இருந்தது.
“என்னடா வடிவேலு?”
“தவிடும் புண்ணாக்கும் வாங்கணும்,”
“பத்து மணிக்குப் பட்டுவாடா பண்ணச் சொல்றேன்.”
“நான் ஒரு நடை ஊருக்குப் போயிட்டு சாயந்தரம் வேற சந்தைக்கு வரணுமே சாமி!”
“ஏழரை மணிக்கு எந்தப் புண்ணாக்குக் கடை திறக்கப் போறது? டவுனிலே ஏதாவது ஜோலியிருந்தா பார்த்துண்டு வாடா... பணம் சேரணுமோல்லியோ!
“சரி, சாமி! இந்த உமாசங்கர் பையனைக் கொஞ்சம் வாயை அடக்கி வைக்கச் சொல்லுங்க.”
“என்னடா அவனோட போட்டி... போன வருஷம் கடைக்கு வந்த பையனும், பதினெட்டு வருஷமா பாலூத்தறவனும் சமமாயிடுவீங்களோ... கள்ளுச் சுள்ளுண்ணு பேசிடறான். ஆனா நீ தர்ற பாலைப் பத்தியும் உன்னைப் பத்தியும் என்ன மதிப்பு வச்சிருக்கான தெரியுமா? போடா... சின்னப் பிள்ளையாட்டம்...”
அவனை அனுப்பி வைத்தார்.
அடுக்களைக்குப் போகும் வழியில், ஆனந்தராவ் நுழைந்தார். வீட்டுக்குப் போகும்போது அடுப்படி, அரைவை, சாமான் அலம்பும் இடம், ஸ்டோர் ரூம் எல்லாவற்றையும் ஒரு சுற்றுப் பார்த்து விட்டுப் போகும் பழக்கம், ரங்கையர் பண்ணிப் பண்ணியே அவருக்குப் படிந்து விட்டது.
நாலு அடி எடுத்து வைத்திருக்க மாட்டார். பின்னாலிருந்து ரங்கையர் கூப்பிட்டார்.
“அண்ணா, ஒரு விஷயமில்லே...”
“என்னது...?”
“நீங்க கொஞ்சம் ஸ்டோர் ரூமுக்கு வரணும்.”
“வர்றேனே...”
“சுப்புணி மூட்டை கட்டிண்டு நிக்கறான். யாரும் தடுக்கலே. அவன் தோரணையைப் பார்த்தா தீர்மானம் பண்ணிட்டான் போலிருக்கு. நானும் பேசல்லே. நீங்க வந்து சொல்லுங்கோ.”
சர்வர் சுப்புணி ஒரு ரேஸ் பைத்தியம்! ஞாயிற்றுக் கிழமை பிருந்தாவனில் பெங்களூர் போகாவிட்டால் தலை வெடித்துவிடும். போன ஞாயிற்றுக்கிழமை கையில் காசில்லாமல் போகவே, சர்வர் மணியின் பெட்டியில் கை வைத்து விட்டான். கண்டுபிடித்து விட்டார்கள். அவனும் ஒப்புக் கொண்டு பணத்தைக் கொடுத்து விட்டான். அந்த அவமானம் தாங்கவில்லை.
“சரி... நான் போய் விசாரிக்கிறேன்.”
ரங்கையர் திரும்பிவிட்டார். முதலாளி யாரையாவது விசாரிக்கும்போது, அவர் கூட யாரும் இருக்க மாட்டார்கள்.
ஆனந்தராவ் ஸ்டோர் ரூமை நோக்கி நடந்தார்.
[தொடரும்]