Friday, 6 October 2017

மணல்வெளி மான்கள்:1

மணல்வெளி மான்கள்
1
தென் மேற்கிலிருந்து வட கிழக்காக நீண்டிருக்கிறது அந்த நெடுஞ்சாலை. இரவும் பகலும் அதற்கு ஓய்வில்லை. லாரிகள், பஸ்கள், வேன்கள் கார்கள் என்று எல்லா வாகனங்களும் இருட்டு வெளிச்சம் பார்க்காமல், மழை வெய்யில் என்று பொருட்படுத்தாமல் ஓடிக் கொண்டே இருக்கின்றன.
பெங்களூரிலிருந்து சென்னைக்கு என இரு மாநகரங்களுக்கும் இடையே எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் அது போடப்பட்டது. தற்போது அதன் ஒரு கிளை பிரிந்து வலுத்து, கோவைக்குப் போகிறது. அங்கிருந்து கேரளம், பெங்களூரிலிருந்து பூனா, பம்பாய்.
அந்தச் சாலையின் தொட்க்கப் புள்ளி எது முடியும் புள்ளி எது என்று தற்போது சொல்ல முடியாதவாறு, காலம் அந்தச் சாலையை ஒரு கிளையோடு மறு கிளையாய் இணைத்து என்னென்னவோ கோலம் போட்டு விட்டது. மூன்று கடற்கரைகள், சென்னை பம்பாய் கன்னியாகுமரி ஆகியவை. கடைசியாக அந்தச் சாலையை வழிமறிக்கின்றன.
வழியில் எத்தனையோ சிறு பெருநகரங்கள், சிறிய பெரிய ஊர்கள். அவற்றை அலட்சியமாகக் கடந்து வாகனங்கள் காலதேவனின் கட்டளையை ஏந்திச் செல்வது போல் இடைவிடாது போய்க் கொண்டே இருக்கின்றன.
நெடுஞ்சாலை தன் சிறு கிளையாக, வடமேற்கே கை நீட்டியது போல் ஒரு குறுஞ்சாலை. பூந்துறை ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகிறது.
அந்தக் குறுக்குச்சாலை வெட்டித் திரும்பும் இடம் தான் விட்டலாபுரம். தேர்வு நிலைப் பேரூராட்சி. 22 கி.மீட்டரில் ஒரு மாவட்டத் தலைநகருக்கும், 9 கி.மீட்டரில் ஒரு வட்டத் தலைநகருக்கும் இடையில் மாட்டிக் கொள்கிற எந்தப் பேரூரும் சிற்றூரும் எப்படி வளர வழியின்றித் தேங்கித் திகைத்து நிற்குமோ, அப்படித்தான் விட்டலாபுரமும் நின்றது. நூற்றாண்டு நூற்றாண்டுகளாக
பாலாற்றுப் படுகை இருப்பதால் தொழில் வேளாண்மைதான். தென்னை, நெல், கரும்பு, மாதா கோயில், மசூதி, பெருமாள், சிவன், கோயில்கள் உண்டு. எல்லையம்மன் செல்லியம்மன் இவர்களுக்கும்தான்!
ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி மேல்நிலைப் பள்ளிகள் ஒரு காவல் நிலையம், சினிமாக்கொட்டகை, கயிறு பாக்டரி, மரம் அறுக்கும் தொழிற்கூடம் எல்லாம் உண்டு. காலையில் ஓடும் வாகனங்களை, முறைத்து வெறித்து வெறித்துப் பார்த்திருக்கும் விட்டலாபுரத்தில் கல்யாண முகூர்த்தங்கள் வந்தால், கொஞ்சம் கலகலப்பு கூடிவிடும்.
விட்டலாபுரத்தில் நிறைய கல்யாணச் சத்திரங்கள். அதுதவிர அனந்த சயன பெருமாள் கோயிலேயே ஒரே சமயத்தில் ஏழெட்டுக் கல்யாணங்கள் நடக்கும்.
நெடுஞ்சாலையிலிருந்து ஊருக்குள்ளே நுழையும் குறுஞ்சாலையில் 2 கி.மீ. தள்ளி, பாலாற்றின் கரையோரமாக அனந்த சயன பெருமாள் கோயில்.
கரையோரங்கள் நாளுக்கு நாள் குறுகி, ஆறே குறுகிக் கொண்டு வருகின்றது மனித ஆக்கிரமிப்பைப் பார்த்துப் பெருமூச்செறிந்தபடி, பல ஆண்டுகளாக மழை மேகங்கள் கடந்து சென்று கொண்டே இருக்கின்றன.
எல்லா அநீதிகளையும் ஆக்கிரமிப்புக்களையும் புரட்டித் தள்ளி பிரளயப் பிரவாகமாக ஓடவேண்டிய ஒரு மழைவெள்ளத்தை ஆற்று மணல் எதிர்நோக்கி நின்றது. ஆறா இல்லை ஏதாவது சுரங்கமா என்று கேள்விக் குறிகள் போல் ஆங்காங்கே ஆயிரமாயிரமாக லாரிகளில் மணல் திருட்டுப் போய் மூளி மூளியாக நிற்கிறது ஆறு.
ஆற்றங்கரை ஓரமாக ஒரு சிறு தென்னந் தோப்பு உள்ள நிலம். கரையிலிருந்து உள்ளே ஒதுங்கி வெட்டிய பெரிய கிணறு. பம்பு ஷெட். கிணற்று நீர் வழிந்தோடி நிலத்துக்குப்பாய வெட்டிய கால்வாயின் குறுக்கே துணிதுவைக்க வசதியாகப் பலகைக் கல் போட்டிருந்தது.
கிணற்றின் எதிர்ப்பக்கத்தில், பம்பு ஷெட் போடுவதற்கு முன், தாழ்ந்து இறங்கும். மாடு இழுத்துக் கவலை ஓடி நீர் இறைக்கக் கட்டிய மேடை. மாடு ஏறி இறங்கப் போட்ட பாதை. பட்டறைக் கம்பில் துருவேறிய அச்சுப் பதித்த மர ராட்டினம். இரண்டு மாடுகள் கால் கடுக்க கிணற்று மேட்டில் நின்றன. பம்பு ஷெட்டில் ஏதோ ரிப்பேர்.
கிணற்றைச் சுற்றிலும் யாரும் இல்லை. மாடுகள் மட்டும் நின்றன. கிணற்றுக்குள்ளேயிருந்து லொட்டு லொட்டென்று ஓர் ஓசை. எதையோ யாரோ முடுக்குவது போல் விட்டு விட்டுக் கேட்கும் ஓசை.
வியர்த்தது, பின்னங் கழுத்தில். பனியனுக்குள், உடம்பின் ஒவ்வொரு மயிர்க் காலிலும்...
பனியனையும் உரித்துச் சுருட்டிக் கிடாசி விட்டு அப்படியே கிணற்றில், நிற்கிற திட்டிலிருந்தே ஒரு டைவ் அடிக்க வேண்டும்.
பொறு! அவன் உடம்பு அரிப்புக்குக் கட்டளையிட்டான். கட்டியிருந்த லுங்கி அவிழ்ந்தது. ஸ்பேனரை ஸக்ஷன் பம்ப் கட்டை மீது வைத்து லுங்கியை இறுகக் கட்டினான்.
இன்னும் இரண்டு சுற்று சுற்றினால் அந்த நட்டு இறுகிவிடும். ஸ்பானர்தான் வழுக்குகிறது. கொஞ்சம் வாய் விரிசல். இருந்தாலென்ன? கௌதமுக்குச் சவால்கள். இப்படிச் சின்னச்சின்ன இடைஞ்சல்கள் பிடிக்கும்.
கௌதம் இரண்டு சுற்று வழுக்கி வழுக்கி டைட் வைத்தான். ஸக்ஷன் பம்பின் நட்டு, மாடு பிடித் திருவிழாவில் பிடித்து நிறுத்திய காளை மாதிரி ஸ்தம்பித்தது.
அவன் ஸ்பானரைக் கீழே வைத்தான். நெற்றி வியர்வையை விரல் வைத்து வழித்தெறிந்தான்.
ஏழு மணிக்குக் கிணற்றில் இறங்கியது. ஒரு மணி நேரம் ஆகியிருக்கலாம்.
போனது ஃபுட் வால்வ் லெதர் என்று தெரியாமல் ஆதிகேசவன் அலைமோதிவிட்டான். கார் நெல்லுக்கு அன்றாடம் நீர் பாய்ச்ச மோட்டார் பம்ப் கை விட்டு விட, பழைய பாணியில் கவலை மாடுகளை நம்பினான்.
ஏழு நாட்களாக மோட்டார் சப்தம் ஓய்ந்து போன கிணற்றில் இனி அது பலிக்கும்.
ஆதி கிணற்றுக்கு மேலே தான் நின்று கொண்டிருப்பான். கௌதம் உள்ளே இருந்து குரல் கொடுத்தான்.
ஆதி... மோட்டாரைப் போடு.
கிணற்றின் சுற்றுச் சுவரில் பட்டுப்பட்டு எதிரொலிகள். ஒன்று, இரண்டு, மூன்று முறை... பதில் வரவில்லை. எங்கே போய்விட்டான்?
தன் சிரமம் பலித்திருக்கிறதா என்று கௌதமுக்கு உடனே முடிவை எதிர்பார்க்கும் தவிப்பு. மேலே போகலாமா? ஸ்பானரை எடுக்கக் கௌதம் குனிந்தபோது அவன் முதுகில் லொட்டென்று குறி பார்த்து அடித்த மாதிரி எதுவோ தாக்கியது. முதுகைத் தாக்கிவிட்டு அந்த ஏதோ ஒன்று தாவி விழுந்து தண்ணீரில் மறைந்தது.
சிவுக்கென்று தலை நிமிர்த்தினான். கிணற்றுக்கு மேலே சாலும் வடக்கயிறும் தொங்கின. யாரும் தென்படவில்லை. ஆனாலும் யாரோ விளையாடுகிறார்கள். ஆதியா? இல்லை. அவனிடம் ஆதி விளையாடமாட்டான். ஸ்பானரை இன்னும் வைத்த இடத்திலிருந்து எடுக்கவில்லை. எனவே மீண்டும் குனிந்தான்.
லொட்டென்று மீண்டும் முதுகில் பனியனின் ஈர நைப்புக்கு உறைக்கிற மாதிரி ஒரு கொட்டையளவு ஏதோ விழுந்தது. அதிகம் வலிக்கவில்லை.
வெள்ளி மணலாக அடி தெரிந்த கிணற்று நீரின் இள நீலத்தில் ஒரு சிலும்பல். இப்போது விழுந்தது ஒரு சின்னஞ்சிறு மாம் பிஞ்சு.
கௌதம் மனசில் ஒரு முகம் தெரிந்தது. நித்யாவாகத் தான் இருக்கும்.
மேலே ஏறி வந்தா என்ன நடக்கும் தெரியுமா நித்யா?என்று தலை உயர்த்தாமல் கத்தினான்.
நித்யா என்று கிணற்றில் எதிரொலி வந்தது. மும்முறை. கிணற்று நீரின் ஒருபுறத்தில், கரை மீதிருந்த நித்யாவின் பிம்பம் சிலும்பலில் நெளிந்தது.
என்ன பண்ணுவே?மேலே நின்றபடி நித்யா கேட்டாள்.
அவன் பிம்பத்தைப் பார்த்தே பேசினான்.
ஆத்து மணல்லே, அன்னக் கூடையை இடுப்பிலே தூக்க வச்சு ஓட ஓடத் துரத்துவேன்.
நீ?என்றாள் நித்யா – எகத்தாளம். கொஞ்சம் சவால்.
கிணற்றின் அலைகள் தத்தித் தத்தி, கோடை வானத்தின் வெளிர் நீலப் பின்னணியில் நித்யாவின் முகபிம்பத்தை அலைக்கழித்தன. அவள் பற்கள் தெரியச் சிரித்தாள்.
மேலே யாரும் இல்லியா?
அவன் பிம்பத்தைப் பார்த்துப் பேசினான். அவளும் அவன் பிம்பத்தைப் பார்த்துப் பதில் சொன்னாள்.
கேக்கறே பாரேன் கேள்வி!
நாக்கைக் கடித்துக் கொண்டான்.
முட்டாள்! யாராவது இருந்தால் அவள் இப்படி விளையாடுவாளா?
ஆதி இருப்பானே!அவன் சமாளித்தான்.
நுணா மரத்துப் பம்பு ஷெட்டாண்ட ஒரு கூட்டம் நிக்குது. அவரு அங்கே நிக்கறாரு.
கூட்டமா?
ஆமா...என்னமோ தகராறுன்னு நெனைக்கிறேன்.
சரிதான். இப்பத்திக்கி வர மாட்டான்! அப்ப ஒண்ணு செய்யி...
என்ன?
கெணத்திலே குதிச்சுடு!
ஐயா வந்து காப்பாத்திடுவீங்க...
நீ குதிச்சா உன்னைக் காப்பாத்தற சாக்கிலே சேர்ந்து குளிக்கலாம் பாரு.
இப்ப நெஜமாலும் ஒன் தலை மேல குதிச்சுடுவேன்.
இன்னும் சௌகரியம்.
வர வர உனக்கு வாய் கொழுத்துப் போச்சு. நான் போறேன்.
அவள் முகம் விருட்டென்று மறைந்தது.
நித்யா..நித்யா!
என்ன?மீண்டும் அவள் பிம்பம்.
மோட்டார் ஸ்விட்சு தெரியுமில்லே ஒனக்கு?
சொல்லு...
அதைப் போடேன். ஃபுட் வால்வ் லெதர் மாத்தினேன். தண்ணி எடுக்குதான்னு பார்க்கணும்.
கரெண்ட் போயி அரை மணி நேரம் ஆவுது.
அவன் வெறுத்துப் போனான். பிறகு அவள் வாயைக் கிண்டினாள்.
வழக்கமா ஒங்க அம்மாதானே துணி துவைக்க வருவாங்க?
ஆமா! அவங்க சொந்தக்காரங்க கருமாதிக்குப் போயிருக்காங்க.
அதான் நேரா இங்கே வந்துட்டே.
ஆமா. பம்ப் ஷெட் ரிப்பேருக்குக்காக கெணத்திலே எறங்கி இருப்பாருன்னு ஞான திருஷ்டியிலே தெரிஞ்சது.மீண்டும் தலை மறைந்தாள்.
துணி துவைக்கணுமா வேண்டாமா?
அதான் கரண்ட்டும் இல்லே... தண்ணியும் இறைக்கலியே!
மாடுங்க நுகத்தடி பூட்டி நிக்குதுங்க இல்லே?
நிக்குதுங்க.
இரு... தோ வர்றேன்.
அவன் செருகு செருகாகப் படிக்குப் பதில் கிணற்றோடு பதித்திருந்த ஜல்லிக் கல்லில் ஒவ்வொரு கல்லாகத் தாவித்தாவி ஏறினான். என்ன வேகமாக ஏறுகிறான்! கால் வழுக்கி விடாது என்று நினைத்தாள் நித்யா.
அவளுக்கு அவன் வேகத்தின் மீது இலேசான பயம்.
அவன் கடைசி ஜல்லிக் கல்லில் நின்றபோது கண் பூத்து விடுகிற மாதிரி கிழக்கு மேற்காய் ஆற்று மணல் தெரிந்தது. விட்டலாபுரத்திற்கும் அன்னவாசலுக்கும் இடையில் பாலாற்றின் குறுக்கே போட்ட நீண்ட தாம்போகிப் பாதை தெரிந்தது.
கல் பரவிய அந்தப் பாதை மீது எட்டரை மணி ரயிலின் வரவுக்காகப் பூந்துறை ஸ்டேஷனுக்குச் செல்லும் டவுன் பஸ் போவது தெரிந்தது.
அந்த எட்டரை மணி பஸ்ஸைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு மீன்கொத்தி மாதிரி மனசு இறந்த காலத்திற்குப் பாய்கிறது.
ஒரு நொடி - இல்லை; ஒரு நொடியில் ஒரு சிறு கூறு...
அந்த பஸ்ஸில்தான் பூத்துறையில் அம்மா இறங்குவாள் என்ற ஆவலோடு பதினாலு வயது கௌதம் பூந்துறைக்குப் போவான்.
மனசு விசித்திரமானது. பழக்க வாசனையுள்ள புறா மாதிரி ஒரே கூட்டிற்குத் திரும்பித் திரும்பிப் போகிறது.
நினைவை உதறி விட்டு நித்யாவைப் பார்த்தான். பத்தொன்பது வயசில் எதற்குக் கோடாலி முடிச்சு? சாக்லேட் பாவாடை. பொன்னிழை ஓடிய கறுப்புத் தாவணி... அவன் அவன் நெற்றித் திலகத்தை, கண்மையை, முகத்தை ரசித்துக் கொண்டே நிற்பதை நித்யாவும் ரசித்தாள்.
இவ்வளவு சிவப்பு ரொம்ப ஓவர்!
அவன் தன் நிறத்தைச் சொல்கிறான் என்று அவளுக்கும் புரிந்தது.
என்ன பண்ணச் சொல்றே? கறுப்பு பெயிண்ட் அடிச்சுக்கவா?
முயற்சி பண்ணு!
இதைச் சொல்றதுக்குத்தான் கெணத்தை விட்டு மேல வந்தியா?
பூட்டிய நுகத்தடியோடு சிவனே என்று நிற்கும் கவலை மாடுகளை நோக்கி அவன் நடந்தான்.[தொடரும்]

Monday, 2 October 2017

மணல்வெளி மான்கள் :முன்னுரை

மணல்வெளி மான்கள்
முன்னுரை
மணல் வெளியில் மான்கள் வசிப்பதில்லை. ஆனால் குரூர சக்திகள் துரத்தி வரும்போது அவை மணல் வெளிகளைக் கடக்க முயலும். சில சமயம் வெல்லும்; சில சமயம் மடியும்.
மனிதகுலமேதான் இன்றைய மணல்வெளி மான்கள். துரத்துவது வன்முறை. தடுப்பதற்கு அல்லது தவிர்ப்பதற்கு மனிதர்களைத் தவிர வேறு எவருமில்லை.
எதிர்த்துத்தாக்கு!
தீயைத் தீயால் அணை!
முள்ளை முள்ளால் எடு!
இதுதான் காட்டுமிராண்டி வாழ்வின் ஆதி அம்சம். மனிதனின் அந்த விலங்குத் தன்மையை மாற்றி மாற்றி எழுந்த மகான்களின் குரல்கள் மறு பரிசீலனை செய்தன; பக்குவப்படுத்தின.
எனினும் அது இடையறாத போராட்டம் ஆயிற்று. நன்மைக்கும் தீமைக்குமான நிரந்தர யுத்தமாகியது.
இதை நீக்க மெய்யறிவு உதவியதைப் போல் அறிவியல் உதவவில்லை. அறிவியல் உதவ்வில்லை. அறிவியல் இதயத்தை, உணர்வுகளை, மனிதனிடம் உள்ள மனிதத்துவத்தை மேன்மைப் படுத்துவதற்கு மாறாக ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளவே அதிநவீன ஆயுதங்களையே உற்பத்தி செய்து வருகின்றது.
அதன் விளைவுகளை அமெரிக்காவில் பெண்டகன் சந்தித்தது.
அறிவுக்கு மாற்று மருந்து உணர்வின் மேன்மை, கலைகள் அதற்கே முயலுகின்றன.
கலைகளின் தலைமைப்பீடம் இன்றும், இலக்கியமாகவே இருந்து வருகிறது. உலகெங்கும் நிகழும் வன்முறைகளைக் கண்டு மனங் கசிந்து வெற்றுக் கண்ணீர் விடாமல் மேலான பாத்திரங்களைச் சிருஷ்டித்துக் காட்ட வேண்டிய பொறுப்பு இலக்கிய ஆசிரியனுக்கு உண்டு.
இந்த நாவல் அதையே உத்தேசமாகக் கொண்டது. இதன் கதாநாயகனும் கதாநாயகியும் வாழ்ந்து காட்டி, வன்முறைக்கு இரையாகாமல் நிமிர்ந்து நிற்பது எப்படி என்று நிரூபிக்க முனைந்துள்ளார்கள்.
நாவலைப் பொழுது போக்குச் சாதனமாகக் கருதாமல் ஆத்மீக வழிபாடாகக் கொண்டு படைத்த முயற்சி இது. படித்துப்பாருங்கள். 

                                                                                                                                                         வையவன்                                                                                                                                                                           சென்னை – 20                                                                                                                     

Monday, 25 September 2017

ஜமுனா :24

ஜமுனா :24
கிர்ரென்று அலாரம் அடித்தது. வெந்நீர் பாய்லருக்குப் போடச் சிறிய வாளியில் கரியை எடுத்துக் கொண்டு போன ராஜாமணி. பக்கெட்டை அங்கேயே வைத்து விடு நடுக் கூடத்திற்குப் போய் அலாரத்தை நிறுத்தினான். காலை மணி ஐந்தரை.
அவன் தான் விடியற்காலையில் எழுந்திருக்க அலாரம் வைத்திருந்தான். அது அடிப்பதற்கு முன்பே அவன் எழுந்து விட்டான். இப்போதெல்லாம் தூக்கம் சரியாக வருவதில்லை. கவலையோ பயமோ இல்லை. ஆரம்பத்தில் தான் அப்படி இருந்தது. ஆனந்தராவ் சற்றுத் திரும்பிப் படுத்தால் கூட மனம் துணுக்குறும். படுக்கையை விட்டு எழுந்து வந்து அவர், உறக்கத்தைக் கலைக்க மனமின்றி கதவருகில் நின்று ஒட்டுக் கேட்பான்.
வலியில் முனகுகிற ஓசை ஏதாவது வருகிறதா என்று மனம் பதைபதை என்று பதைக்கும். பிறகு மறுபடியுவு போய்ப் படுத்துக் கொள்வான். தனக்கு இருக்கிற பயத்தை கங்காபாயிடம் சொல்வதற்குக் கூடக் கஷ்டமாயிருந்தது.
ஓட்டலில் சைக்கிளில் போகும் போது, தெருவில் உறங்கும்போது சட்டென்று வரும் விழிப்பில், அந்தக் கொடிய அச்சம் சிறிது கூட நிம்மதியாக இருக்க விடாது. அவனைக் கொஞ்ச நாட்கள் எப்படி வேட்டையாடியது! சேது வந்தான். இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருந்தான். அடிக்கடி கோயம்பத்தூர் ஓட்டலைச் சொல்லி என்ன ஆயிற்றோ என்ன ஆயிற்றோ என்று அரற்றிக் கொண்டிருந்தான். பிறகு டானிக் மருந்து என்று வாங்கிக் கொடுத்து விட்டு வீட்டுக்கும் அப்பாவுக்குமாக ஆயிரம் ரூபாய்க்கு எதை எதையோ வாங்கி இறைத்து விட்டுப் புறப்பட்டு விட்டான்.
அவனைக் குறை சொல்லிப் பயனில்லை என்று ராஜாமணி நினைத்தான். ஆனந்தராவை ஆனந்தபவன் பிடித்துக் கொண்ட மாதிரி அவனை கோயம்பத்தூர் ஓட்டல் பிடித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் புலப்பட்டது.
அவன் கரி பக்கெட்டை எடுத்துக் கொண்டு புழக் கடைக்குப் போகும்போது கங்காபாய் புரண்டு கொடுத்தாள். இப்போதெல்லாம் கங்காபாய் தன்னை மறந்து நெடுநேரம் தூங்கி விடுகிறாள். நாளெல்லாம் ஆனந்தராவ் கூட இருக்கும் களைப்பும் அயர்ச்சியும் அவனைச் சீக்கிரத்தில் எழ விடுவதில்லை.
‘பாவம் அம்மா! அவளுக்கும் வயசாகி விட்டது’ என்று நினைத்தான் ராஜாமணி.
அதுமட்டும் தானா? தான் ஓட்டலுக்குப் போய் வந்து கொண்டு வீட்டுக் காரியங்களையும் அப்பாவையும் பொறுப்பாகக் கவனித்துக் கொள்வதில் அவளுக்கு நிம்மதியே ஏற்பட்டிருப்பது புலப்படுகிறது.
பாய்லரில் மீதமிருந்து கரியைப் போட்டுப் பற்ற வைத்தது மூண்டிருந்தது. கீழே இருந்த தகட்டை அசைத்து அசைத்துச் சாம்பல் தூளைப் பறக்க வைத்து விட்டுக் கரியைப் போட்டுக் கொஞ்ச நேரம் விசிறினான்.
தான் பயம் பயமாகப் பதைத்தபோது அம்மா எப்படி நம்பிக்கையோடு இருந்தாள் என்று நினைத்துப் பார்த்தான். தன்னை ஆண்டவன் அப்படி மூனியாக்கிப் பிறர் அனுதாபத்துக்கு ஆளாக்கும்படி விட்டு விடமாட்டான் என்று அவளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. ராஜாமணி பயப்படுவதையும் அவள் மனசு புரிந்து கொண்டு விட்டது.
“ராஜா... நமக்கு ஒண்ணும் நடந்துடாது... பகவான் நரசிம்மர் அப்படியெல்லாம் சோதிக்க மாட்டார். இந்த வருஷம் உத்ஸவத்துக்கு சோளிங்கர் போய்ட்டு வர்றதா நான் நேந்துகிட்டிருக்கேன். நீ நிம்மதியா இரு.”
அம்மாவைப் பார்த்து ராஜாமணி நம்பிக்கையைக் கற்றுக் கொண்டான். தைரியத்தைக் கற்றுக் கொண்டான். தானே கரி போட்டு அடுப்பு மூட்டி வெந்நீர் போட்டுக் கொள்ளவும் அவள் தான் குரு.
பாய்லரின் சூடு ஏறிவிட்டது. நெருப்பு தணதண வென்ற செங்கண் விட்டு ஜொலித்தது.
மளிகைக் கடைக்கு இன்று எண்ணூற்றுச் சொச்சம் கொடுத்தாக வேண்டும். மரியதாஸ் பெண்ணுக்குச் சர்ச்சில் நாளைக்குக் கல்யாணமாம். பத்து மணிக்கு எல்லாரையும் அழைத்துக் கொண்டு ஓட்டல் வியாபாரத்தை விட்டுப் போய் வர வேண்டியது தான். புதியதாக டேபிள் சேருக்கு கொடுத்திருந்த ஆர்டரை இன்றைக்கு நாளைக்கு என்று இழுத்துக் கொண்டிருந்த ராமசாமியிடம் கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். பில் புஸ்தகம் தீர்ந்து விட்டது என்று ரங்கையர் சொன்னார். பிரஸ் சச்சிதானந்தத்திடம் சொல்ல வேண்டும். கல்யாண கலாட்டா என்று நாள் தள்ளுவாரோ... மாட்டார்... ஆனந்த பவன் வேலைக்கு அவர்கள் கெடு வைப்பதேயில்லை. நாளைக்குக் கல்யாணத்திற்குக் கடையை மூடும்போது கலாய்க்கார சாயபுவை பூசச் சொல்லி விடலாம். பாபா கல்யாணத்திற்கு வரமாட்டான். இங்கேயே இருந்து கவனித்துக் கொள்வான்.
அவன் மனம் ஆனந்தபவனின் காரியங்களில் சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தது. சட்டென்று விலகித் தன்னை நினைத்துப் பார்த்தால் ராஜாமணி அவனுக்கு வியப்பாக இருந்தது.
என்ன இருக்கிறது அந்த ஆனந்தபவனில் என்று அவன் கேட்டுக் கொண்ட கேள்வியை நினைத்தான். சேதுவுக்கும் ஆனந்தராவுக்கும் அவரவர் ஓட்டல்களில் எந்தச் சாவி அவர்களை இயக்கிக் கொண்டிருக்கிறதோ அந்த சாவி அவனையும் முடுக்குவது அவனுக்குப் புரிந்தது.
பிறரை மகிழ்விப்பதற்காகச் சுயமாக ஒரு தொழில். அதில் அதிகார பீடங்களிலோ விளையாட்டு மைதானங்களிலோ கிடைக்காத ஓர் ஆனந்தம். இன்னது என்று விளங்காமல் எதையோ தேடி ஓடுகின்ற மனசின் கைவசத்தில் அதன் காலடியில் தான் அது தேடும் பொருள் இருக்கிறது.
மேலே மேலே என்று அனுபவ வேட்டை ஆடிக்கொண்டு போவதெல்லாம் வீண் அலைச்சல் தான். தேடித் தேடி ஓட ஓட அது தும்பி மாதிரி இங்குமங்கும் ஓடித் திரிகிறது. வெறும் திரிசலிலேயே கடைசிப் பொழுது போய் விடுகிறது.
பாஸந்தி விற்கும் சோடேலால் ஓட்டல் நடத்தி நொடித்த பிறகும் வண்டி தள்ளி வாழும் வாழ்க்கை இப்போது அவனுக்குப் புரிந்தது. வெற்றியையும் தோல்வியையும் மாறி மாறிச் சந்தித்தாலும் தளராது இயங்கும் அந்தச் சிறு நகரத்தின் நாடித் துடிப்பு இப்போது புரிந்தது. அது தேக்கமல்ல. தவம், தவம் கூட ஒரு தேக்கம் மாதிரித் தோற்றமளித்து விடுவதுண்டு.
ராஜாமணி வெந்நீர் காய்ந்து பாய்லர் உறுமுவதைக் கவனித்தான். பெரிய பக்கெட்டை எடுத்துக் குழாயருகே வைத்து விட்டுக் குழாயைத் திருப்பினான். குழாய் சுட்டது. சட்டென்று கையை எடுத்துக் கொண்டான்.
எவ்வளவு சீக்கிரத்தில் இந்த பாய்லர் காய்ந்து விடுகிறது? பழங்காலத்து சாமான்.
பக்கத்திலிருந்த கந்தல் துணியை எடுத்தான். அது அவனுடைய கிழிந்த சட்டை, மூன்றாம் வருஷம் தீபாவளிக்கு எடுத்தது. அதனுடைய ஸைகடெலிக் டிஸைனுக்காக எடுத்திருந்தான். சீக்கிரம் கிழித்து விட்டது. அடிக்கடி போட்டதில் அந்தக் கதி அதற்கு.
அதைக் குழாயின் மேல் வைத்து சூடு தாங்கப் பிடித்தவாறே குழாயைத் திருப்பினான். கபகபவென்று ஆவி பறக்க வெந்நீர் கொட்டிற்று.
முதல் தடவையாக லெக்சரர். ராமபத்ரனுடன் தர்க்கம் செய்து கொண்டான் ராஜாமணி.
‘குடும்பம் ஒரு தளை அல்ல! நாகரிகம் தன் உச்சத்திற்குச் சென்று கண்டெடுத்த ஓர் ஏற்பாடு. அந்த ஏற்பாட்டை யார் குலைத்து வெளியில் பறந்து சென்றாலும் அதன் தேவையையும் முக்கியத்துவத்தையும் கருதி அவன் திரும்பி வர வேண்டியது தானே.’
பக்கெட் நிரம்புகிறவரை ஏதேதோ யோசித்து விட்டு, நிரம்பியதும் எடுத்து வைத்துக் குளிக்கத் தொடங்கினான்.
சோப்பை எடுத்துப் பூசிக் கொள்ளும்போது, “ராஜா!” என்று வெளியே தெருக் கதவின் கைப்பிடியை ஆட்டி ரங்கையர் கூப்பிடுவது கேட்டது. இந்நேரம் அவர் குளித்து பூஜை முடித்து விட்டிருப்பார்.
குளியல் அறையிலிருந்தே குரல் கொடுத்தான்.
‘திண்ணையிலேயே உட்காருங்கோ... குளிச்சிண்டிருக்கேன்” அதற்குள் அம்மா குரல் கேட்டது.
“யாரது, ரங்கையரா?”
“நான் தான் மன்னி.”
“ஸ்ஸ்... அப்பா... பகவானே!” என்று ஆயாசத்தோடு அவன் எழுந்து நடப்பதும், நடைக்குப் போய்க் கதவைத் திறப்பதும் காதில் விழுந்தன.
ராஜாமணி கண்ணில் சோப்பு நிறைந்திருக்க வெந்நீர் மொண்ட மக்கை எங்கே வைத்தோம் என்று குருடன் போல் கைகளால் தடவத் தொடங்கினான். அந்த சிறிது நேர குருட்டுத் தனம் அவனுக்கே வேடிக்கையாக இருந்தது சிறிய முயற்சியிலேயே மக் தட்டுப்பட்டு விட்டது.
வெந்நீரை மொண்டு ஊற்றிக் கொள்ளும்போது, சோப்பு வாசனையும் வெந்நீர் இதமும் சேர்ந்து மனம் உல்லாசமாக இருந்தது.
ரங்கையர் குரல் அம்மாவுடன் பேசுவது கேட்டது.
ரங்கையர் எப்படிப்பட்ட வைராக்கியவான். அடிமேல் அடி என்று விழுந்தும் எத்தனை தீரத்துடன் அதைச் சமாளித்து விட்டார். பாவம், ஒண்டிக்கட்டை என்று யாரும் அனுதாபப்படுவதற்கு இடமின்றி அல்லவா சக்கரமாகி இருக்கிறார்.
மோனிகா மில்லரும் குழந்தை யோகியும், வாணியம்பாடி நந்தவனம் நர்ஸரிக்கே ஜமுனாவோடு போய்ச் சேர்ந்து கொண்டதில் ஒருவகையில் பளு குறைந்த மாதிரி தான். குழந்தையில்லாத கிருஷ்ணராவ் தம்பதிக்கு யோகி மாதிரி குழந்தை கிடைத்த திருப்தி. நர்ஸரிக்கு இங்கிலீஷ் சொல்லித் தர மோனிகா மில்லர் போன்ற அமெரிக்கப் பெண் கிடைத்திருப்பது தனிப் பெருமையாக இருக்கும். ஜமுனாவிற்கு அந்த நர்ஸரியிலும் நர்ஸரித் தேட்டத்திலும் ஏதோ பெரிய அடையாளம் கிடைத்திருக்கிறது. ஆனந்தபவனில் தனக்குக் கிடைத்திருக்கிற மாதிரி.
குளித்து முடிந்து ராஜாமணி சுத்தமாகத் துவைத்து தும்பைப் பூ போல் வெளுத்திருந்த டர்க்கி டவலை எடுத்து அதில் துடைக்கும் சுகத்தை அனுபவித்தவாறே உடம்பைத் துவட்டினான்.
நீராக ஓடியிருந்த சோப்பின் வாசனையில் கும்மென்று அந்தக் குளியல் அறையில் கமழ்ந்தது. அவன் மீண்டும் ஜமுனாவைப் பற்றி நினைத்தான்.
அவள் திருமணம் புரிந்து நாலுபேரைப் போல் இல்லத்தரசியாக வாழும் நபரல்ல. அவள் வேறு ஜாதி வேறு இனம். வேறு எதையோ சாதிக்க நியமிக்கப்பட்டவள் அதனால் தான் அவளது ரயில், பிளாட்பாரத்திலேயே அவளை நிறுத்திவிட்டுப் புறப்பட்டு விட்டது.
இப்படியே ஒரு பெண் விவாகமின்றி வாழ முடியுமா என்று நினைத்தான். அவனுக்கு மதர் தெரஸாவும், திருமணமான துறவியாக வாழ்ந்த அன்னை சாரதாவும் ஞாபகம் வந்தார்கள்.
இப்படி ஒருவரா... எத்தனை பேர்? எது சாத்தியம் எது அசாத்தியம் என்பதை மூன்றாம் மனிதனாக இருந்து தர்க்கித்துத் தீர்ப்பிடத் தான் யார்? என்று கேட்டுக் கொண்டான் ராஜாமணி.
குளித்த புத்துணர்ச்சியோடு வெளிவந்த ராஜாமணியைப் பார்த்து ரங்கையர் புன்னகை செய்தார். அவர் முகத்தில் பட்டையாக விபூதி துலங்கிற்று.
“நேரமாயிடுத்து ராஜா... அப்பாவுக்கு நானே இன்னிக்கு ஜூஸ் பிழிஞ்சு கொடுத்துடறேன். நீ சீக்கிரமா டிரஸ் பண்ணிரண்டு கிளம்பு...” என்று அவனை ஒரு பொறுப்பிலிருந்து விடுவித்தாள் கங்காபாய்.
ராஜாமணி அவசரம் அவசரமாய்ச் சட்டையையும் வேட்டியையும் அணிந்து தலை வாரிக் கொண்டாள். கண்ணாடியில் முகத்தைப் பார்க்கும் போது தலைமுடியும் கிருதாவும் சற்று அதிகமாக வளர்ந்து விட்டிருப்பது தெரிந்தது.
இரண்டையும் குறைத்து விட வேண்டியதுதான். கல்லாவில் உட்காருவதற்கு இது அவ்வளவு பொருத்தமாய் இல்லை என்று ரங்கையர் வேறு ஜாடையாகச் சொல்லிக் காண்பித்து விட்டார்.
“அப்பா, போயிட்டு வர்றேன்...”
“சரி... செய்... நானும் இன்னிக்கு ஓட்டலுக்கு வரலாமான்னு பார்க்கறேன்...” என்று படுத்தவாறே பதிலளித்தார் ஆனந்தராவ்.
“நீங்க எதுக்கப்பா?”
“இல்லேடா... பொழுது போக மாட்டேங்குது, ஓட்டலுக்கு வந்து இன்னியோட ஒரு மாசமாகப் போறதே இருப்புக் கொள்ளலே.”
அவனுக்கு அவர் ஆதங்கம் புரிந்தது.
“சரி... நடந்து வரவேண்டாம். ஆட்டோ ரிக்ஷா அனுப்பி வைக்கறேன். எட்டிப் பார்த்துக் கொஞ்ச நாழி இருந்துட்டு வந்துடுங்கோ...”
அவன் வெளியேறினான்.
ஆனந்தபவனின் விடியற்காலைச் சுறுசுறுப்பு பரவியிருந்தது.
ராஜாமணியின் தலையைப் பார்த்த ஐயாசாமி குரல் கொடுத்தான். “ராஜா... இன்னிக்கு ரேடியோவிலே மெட்ராஸ் ஸ்டேஷன்லே சினிமா உண்டு.”
“அதை மறந்துடப் போறே... சினிமாவைக் கேக்கலேன்னா உனக்கு எப்படிப் பொழுது போகும்? என்று வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டே வந்தான் சாரங்கன்.
“வைத்தா, மாப்பிள்ளை வந்து விட்டான். ஒரு ஸ்பெஷல் காப்பி போடு!” என்று அவனை வாரினார் சுப்பண்ணா.
‘ஒமக்கு மாப்பிள்ளையானா இப்படி ஓட்டல் காப்பி தான் வாங்கிக் கொடுப்பீர்” என்று பதில் தந்தான் சாரங்கன்.
ஆனந்தபவன் வேடிக்கை ,தமாஷ் இவற்றினூடே தன் மறுநாள் இயக்கத்தை ஆரம்பித்தது. கணபதியின் கை ஓட்டம் பிளஷ் அவுட் தடுப்பில் கேட்டது. பாபா பக்கெட்டில் அலம்பிய பாத்திரங்களை எடுத்து வந்து வைத்தான். குக் ராமையா சோம்பல் முறித்து விட்டு வெந்நீர் அண்டாவை எட்டிப் பார்த்தார்.
ராஜாமணி கல்லாவில் போய் உட்கார்ந்தான். ரங்கையர் மெனு போர்டை எழுதத் தொடங்கினார். பொழுது போல் லென்று வெளுத்து விட்டது. காலை ஆகி விட்டது என்பதன் அடையாளம் போல் வக்கீல் வாசுதேவாச்சார் வாக்கிங் ஸ்டிக்கும் கையுமாகப் போனவர், சாலையில் நின்று கேட்டார்.
“என்ன ராஜாமணி அப்பா எப்படி இருக்கா?”
“நல்லா இருக்கார். உள்ளே தான் வாங்களேன்... இன்னிக்கு ஓட்டலுக்கு வருவார்.”
வாசுதேவாச்சார் படியேறி வந்தார். ஒவ்வொருவராகக் காலையில் காப்பி சாப்பிடுவோர் வரத் தொடங்கினர்.[முற்றும்]
*** *** ***

ஜமுனா :23

ஜமுனா :23
அல்லாஹூ அக்பர், அல்லாஹூ அக்பர்!
பள்ளிவாசல் மைக்கில் பாங்கு ஒலி தொழுகைக்கு வருமாறு முஸ்லிம் பெருமக்களை அழைக்கத் தொடங்கிற்று.
பூ வாளியில் ரோஜாப் பதியன்களுக்கும் சிறு தொட்டிகளில் வைத்திருந்த மரஞ்செடிகளுக்கும் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த ஜமுனா வேலையை நிறுத்திக் கவனித்தாள்.
“அஷ்ஷ்ஷ் ஹதன்ன்ன லாஆ ஆ இலாஹ இல்லல்லாஹ்”
இதய முரசம் அதிர்கிறது. அர்த்த மற்றவைகளின் மத்தியில் ஓர் அர்த்தம். புன்மைக்கும் பூசலுக்கும் அப்பால் எஜமான் ஒருவன் இருக்கிறான் என்ற பிரகடனம். என்ன கம்பீர த்வனி!
இந்த நியூ டவுன் வாசம் ஜமுனாவுக்குப் பெரிய ஆறுதல் தந்தது.
தேரோடும் வீதி போன்ற அகன்ற தெருக்கள். தூங்குமூஞ்சி மரங்கள், அசோக மரங்கள், காற்று குலவும் போதெல்லாம் அவை சலசலக்கின்றன. சற்றுத் தொலைவில் வாணியம்பாடி ரயில்வே ஸ்டேஷன், நாளெல்லாம் விட்டு விட்டுக் கேட்கும் ரயில் ஓசை.
முடிவற்றதொரு நீண்ட பிரயாணத்தை நினைவூட்டியவாறு அவற்றின் கடாகடா குடுகுடு என்று துயரப் பொதி சுமந்து செல்வது போன்ற ஓசைத் தொடர், காலையிலும் மாலையிலும் இஸ்லாமியா கல்லூரி மாணவர்கள் செல்லும் கலகலப்பு, அருகாமையில் இருந்த பேக்கரி ஒன்றில் கம்மென்ற வரும் ரொட்டி சுடும் மணம். எப்போதாவது வீறிடும் எஞ்சின் ஓசை. வண்டியில் சரக்கு தள்ளி வருவோர் போடும் வியாபாரக் கூக்குரல். இந்த நந்தவனம் நர்ஸரி இளஞ்சிவப்பு வெள்ளை யூனிஃபார்மில் வரும் குழந்தைகள் குதூகலம் தவிர வேறொன்று தெரியாத அவற்றின் முக மலர்ச்சி.
எல்லாவற்றுக்கும் மேலாக அவளுக்குப் புகலிடம் அளித்திருந்த கிருஷ்ணராவ் தம்பதி. மாத்வ ராவ்கள் எல்லோரிடமுமே இப்படி ஒரு தன்மை உண்டோ? பந்தமும் மனசின் காயங்களுக்கு ஒத்தடமாகிப் பிறர் வாடப் பொறுக்காது பெய்யும் கருணையாகி... களகளவென்று அவை செழிக்கப் பூசிக்கும் தன்மையாகி...
தன் மனம் எப்படிஇருக்கும் என்று ஊகித்து அறிந்தவர்கள் போல் ஒரு வார்த்தை கூட அவர்கள் எதைப் பற்றியும் கேட்கவில்லையே...
ஜமுனா நந்தவனம் போன்று விரிந்து பரந்திருந்த வீட்டின் முன் முற்றத்திலிருந்து திரும்பிப் பின்னால் பார்த்தாள். சமையல் அறையில் விளக்கெரிந்தது. கிருஷ்ணா ராவ், தன் மனைவி ருக்மிணி பாய்க்குச் சமையல் ஒத்தாசை செய்வது ஜன்னல் வழியாகத் தெரிந்தது.
அந்த வீடே ஒரு விசித்திரமான அமைப்பு. வீட்டின் கதவைத் திறந்தால் தெருப் பக்கமாய் இரண்டு எதிர் எதிர் அறைகள். ஊடே ஓடிய நடையைத் தாண்டியதும் தோட்டம், நாலைந்து தென்னை மரங்கள், ஒரு பலாமரம், இரண்டு மாமரங்கள், ரோஜாச் செடி, மல்லிகை, கனகாம்பரம், கிருஷ்ணராவின் மனசில் தாவரங்களின் பால் இருந்த கொள்ளைப் பிரியம், தோட்டத்தில் தெற்கேயும் வடக்கேயும் பார்த்தவாறு இரண்டு நீண்ட மஞ்சம்புல் போர்த்திய ஷெட், அவை சந்திக்கும் இடத்தில் வீடு தொடங்கிற்று.
ஐந்து வகுப்புகள் வரை அங்கேதான் நர்ஸரி ஸ்கூல். அந்தக் குளுமையான சூழ்நிலையில் சின்னஞ்சிறு செடிகளும், உலகமாகிய நந்தவனத்தில் பூத்த புஷ்பங்கள் போன்ற அந்தக் குழந்தைகளும் ஒன்றாக வளர்கின்ற அந்தக் காட்சியைக் காணும் போதே மனம் என்னமாய் நிரம்பி விடுகிறது.
அஷ்ஹத் அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்
பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் அழைப்பு தொடர்ந்து கொண்டிருந்தது.
ஐந்து தொழுகை நேரங்களிலும் அந்தக் குரல் நியூ டவுன் வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்து நிற்கும் ஒன்றை ஞாபக மூட்டியவாறே கூவும், அதில் ஜமுனாவுக்கு ஒரு தனி ஆறுதல்.
ஜமுனா பூவாளியில் தண்ணீர் தீர்ந்து விட்டதால் கிணற்றடிக்குப் போனாள் பக்கெட்டைக் கிணற்றில் இறக்கி ராட்டினம் சுழன்ற ஓசையைக் கேட்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த கிருஷ்ணராவ், “ஜம்னா... போதும்மா...என்றார்.
“சாயந்திரமாயிடுத்து. காலமே ஊத்திக்கலாம்” என்று அவளைப் பார்த்துச் சொன்னார்.
ஜன்னல் கம்பி வழியே மொழுமொழு வென்று வழுக்கைத் தலையும், இரண்டு காதுகளுக்கும் மேலே பிடியளவு நரை முடியும். வட்ட முகத்தில் கறுப்பு ஃபிரேம் போட்ட மூக்குக் ண்ணாடியின் ஊடே கனிவாகப் பார்க்கும் கண்களுமாக அவர் முகத் தோற்றம் தென்பட்டது.
“இன்னும் கொஞ்சம் தான் இருக்கு மாமா... ஒரே பக்கெட்...”
அவர் முகம் ஜன்னலிலிருந்து அகன்றது.
ஜமுனா அங்கே வந்து பத்துநாள் ஆகப் போகிறது. ஒரு முன்னிரவில் தூக்கக் கலக்கத்தோடு ஆனந்தராவ் அழுத்திய காலிங் பெல்லைக் கேட்டு விட்டு, கதவைத் திறந்தபோது ஜமுனாவை எப்படிப் பார்த்தாரோ, அந்த விதமாகத்தான் இப்போது இருந்தது அவர் பார்வை. விருந்தாளி உபசாரம் என்ற பிரயத்தனம் ஏதும் இல்லாமல், சகஜமான வீட்டு மனுஷியை ஏற்றுக் கொண்டது போல் அதே அன்பு... அதே பிரியம்.
கிருஷ்ணாராவுக்கும் ருக்மிணிபாய்க்கும் வயது ஐம்பதைத் தாண்டிவிட்டது.
“ஸ்கூல்லே ஒர்க் பண்ணிண்டிருந்தா இந்நேரம் நான் ரிடையராய் இருப்பேன். நாலு வருஷம் கழிச்சு ருக்மிணி ரிடையராவாள். இப்ப தப்பிச்சுண்டோம்.”
எவ்வளவு அன்யோன்யமா தம்பதி இவர்கள். இந்த நெருக்கமும் இசைவும் இல்லாமல் இருந்தால் இப்படி ஒரு நர்ஸரி ஸ்கூலையும் நர்ஸரி தோட்டத்தையும் வாணியம்பாடியே விரும்பிப் போற்றுகிற மாதிரி நடத்த முடிந்திருக்காது என்று நினைத்தாள் ஜமுனா.
பக்கெட்டை இழுத்து தண்ணீரைப் பூவாளிக்குள் ஊற்றினாள். பூவாளி நிரம்பவில்லை. இன்னொரு பக்கெட் தேவைப்பட்டது. மீண்டும் கிணற்றுக்குள் பக்கெட்டை இறக்கினாள்.
ஹய்ய...அலஸ்...ஸலாத்...
ஹய்ய அலஸ் ஸலாத்
தொழுகைக்கு அழைப்பு அலையலையாகத் திசை திசையாக விரிந்தது.
ஒரு வேளை இவர்களுக்குக் குழந்தைகள் பிறந்திருந்தால் இந்த நர்ஸரி உற்சாகமும் அன்னியோனியமும் இல்லாமற் போயிருக்கமோ? யார் கண்டது? எதற்கு எது பிணை என்று எப்படிச் சொல்ல முடியும். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லாக் குறை உண்டு என்று நம்ப முடியவில்லையே... மரஞ்செடிகளையும் நர்ஸரிக் குழந்தைகளையும் இவ்வளவு வாத்ஸல்யத்தோடு நேசிக்கும் இந்த மனங்களுக்கு குழந்தைகள் இருந்திருந்தால் கூட குறுகிப் போக சாத்தியப் படாது. ஜீவ நதியை எந்த வாய்க்கால் வெட்டித் திருப்பினாலும் அது நூறு வாய்க்காலுக்கும் வழிந்தும் ஓடிக்கொண்டு தான் இருக்கும்.
பக்கெட்டை வெளியே இழுத்துத் தண்ணீரைப் பூவாளியில் நிரப்பினாள் ஜமுனா. தளும்பத் தளும்பப் பூவாளியை எடுத்துக் கொண்டு அதன் பளுவுக்கு எதிர்விசை மாதிரி கழுத்தை எதிர்ப்பக்கமாகச் சாய்த்துச் சேலையை இறுகச் சுற்றக் கொண்டு சளற்றித் தூக்கியவளாக நடந்தாள்.
ஏதோ பாத்திரத்தை அலம்பி ஊற்ற வெளியே வந்த ருக்மிணிபாய் ஜமுனாவின் சிரமத்தைப் பார்த்தாள்.
“நாகோஜிகிட்டே சொல்லியிருக்காரு கொழந்தே. மோட்டார் எல்லாம் நேத்தே லாரியிலே வந்துடுத்தாம். ரெண்டு மூணு நாள்ளே கொண்டாந்து ஃபிட் அப் பண்ணிட்றேன்னாள். பம்ப் வந்துடுத்துன்னா ஸ்ரமம் இல்லே பட்டனைத் தட்டிவிட்டா வந்து தண்ணி கொட்டும்.”
செடித் தொட்டிக்கு அருகே போன ஜமுனா, பூவாளியை வைத்து விட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
“இருக்கட்டுமே மாமி... இதிலென்ன ஸ்ரமம் இருக்கு. இப்பத்தான் கரண்ட் அடிக்கடி ஆஃப் ஆயிப் போறதே. அப்ப கயித்தை நம்பித்தானே ஆகணும்.”
ருக்மிணிபாய் வாஞ்சையோடு புன்னகை செய்தாள். நல்ல உயரம். திடகாத்திரமான உடம்பு. கண்களில் கடுமை கலந்து இருப்பது போல் முதல் தோற்றம். அதற்குக் கண்ணாடி ஒரு காரணமாகவும் இருக்கலாம். நடக்கும் போதும் நிற்கும்போதும் அந்தத் தோற்றத்தைப் பார்த்தால் மரியாதை செய் என்று ஒரு நினைவு வரும்.
ருக்மிணிபாய் உள்ளே போய் விட்டாள்.
அவன் தான் அந்த நர்ஸரியின் ஹெட் மிஸ்ட்ரஸ். கிருஷ்ணராவ் அவளுக்கு அஸிஸ்டென்ட் தான். கரஸ்பாண்டெண்ட் ஆக இருந்தும், அஸிஸ்டெண்ட் பதவியே போதுமென்று அவர் விட்டுக் கொடுப்பதில்லையே அவர்கள் அன்னியோன்னியம் வெளியாயிற்று. அந்த தம்பதியின் ஆங்கில உச்சரிப்பைக் கேட்டு ஜமுனா வியந்து போனாள். அவள் மேரி இம்மாகுலேட் காண்வென்ட்டில் படிக்கும்போது ஜோலார்ப் பேட்டையிலிருந்து இரண்டு ஆங்கிலோ இந்தியப் பெண்கள் எல்.கே.ஜி.க்கும் யூ.கே.ஜிக்கும் சொல்லித் தர வந்து போவார்கள். அவர்கள் உச்சரிப்பை விட கிருஷ்ணராவ் தம்பதியின் ஆங்கில உச்சரிப்பு இன்னும் ஸ்பஷ்டமாக இருந்தது.
லா... இலாஹ... இல்லல்லாஹ்
தொழுகை அழைப்பு வானவெளியில் மிதந்தது. ஜமுனாவிற்கு திருப்பத்தூர் ஞாபகம் வந்தது.
‘எனக்கு ஓர் அமெரிக்க மன்னி வந்து இருக்கிறாளாமே! அண்ணா ராகவன். தன் குழந்தைக்கு என்னமாய்ப் பெயர் வைத்திருக்கிறாள். யோகி! குழந்தை எப்படி இருப்பான்? அண்ணா மாதிரியா, மன்னி எப்படி இருப்பாள்? அண்ணா... அண்ணா என் வாழ்க்கை இப்படிக் கைதவறிய பாண்டம் போல் உடைந்து நொறுங்கி விட்டதையெல்லாம் கேட்டு வருந்தாமல் நீ போய்ச் சேர்ந்து விட்டாய். அப்பா, நான் எந்த நாளில் நான் வீட்டை விட்டுப் புறப்பட்டு வந்தேனோ, அதே தினத்தில் தானா அந்த இடி உங்கள் தலையில் விழ வேண்டும்?'
ஜமுனா செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தி வாளியைக் கீழே வைத்து விட்டு எதிரில் தெரிந்த தென்னை மரத்தையே அர்த்தமின்றி வெறித்துப் பார்த்தாள். ஓர் அணில் வளைந்து சுழன்று அவசரத்தோடு பாதி மரம் ஏறியது. கீழே இறங்கி விருட்டென்று ஓடி மறைந்தது.
முந்தாநாள் ராஜாமணி வந்து போன நினைவு அவளைப் பின்னி இழுத்தது.
‘ஆனந்தராவுக்கு ஹார்ட் அட்டக்காம். ஹோட்டலுக்கே வரக்கூடாது என்று டாக்டர் சொல்லி விட்டாராம் அப்பாதான் இப்போது ஆனந்த பவனின் எல்லா நிர்வாகத்தையும் கவனித்து வருகிறாராம்! எல்லாக் கதையையும் சொல்லிவிட்டு ராஜாமணி தயங்கித் தயங்கி வந்த விஷயத்தை வெளியிட்ட தோற்றம் அப்படியே அவள் மனசில் சித்திரம் போல் பதிந்திருந்தது.
ராஜாமணி பாய் மீது உட்கார்ந்திருந்தான். ஜமுனாவையும் அவனையும் தவிர வெளியறையில் யாரும் இல்லை. ராஜாமணிக்கு டிபன் தயாரிக்க ருக்மிணிபாய் சமையல் அறைக்குப் போயிருந்தாள். அந்த நர்ஸரியில் வாங்கிய மல்கோவா மாங்கன்று மரமாகி, முதல் ஈற்றில் காய்த்த பழங்களை எடுத்துக் கொண்டு யாரோ வந்திருந்தார்கள். அவர்களோடு பேசுவதற்காக கிருஷ்ணராவ் உள்ளே போனார்.
ராஜாமணி தலை குனிந்து உட்கார்ந்திருந்தான்.பாயில் வர்ணங்கள் பூசிய கோரை இழைகளைப் பெரு விரல் நகத்தால் டர்ர்ரக்... டர்ர்கை என்று ஓசையெழ வருடிக் கொண்டே கனமான குரலில் மெதுவாகச் சொன்னான்:
“ஜம்னா... உன் மன்னியைப் பார்க்கணும்னு ஒனக்குத் தோணலியா?"'
“தோணறது.”
“திருப்பத்தூருக்கு வந்துடு. எத்தனை நாளைக்கு இங்கே இருப்பே?”
“அது முடியாது ராஜாமணி.”
“ஏன்?”
“ம்ஹ் ம்ஹ்ம்” என்று விரக்தியாக வாய்க்குள் சிரித்தாள் ஜமுனா.
அசட்டுத்தனமான கேள்வி கேட்டு விட்டோமே என்று அவனுக்கு உறுத்திற்று.
சற்று மௌனம். ராஜாமணியின் விரல் நகம் பாயை வருடும் ஒலி. அவன் தலை குனிந்திருந்தான். அவள் சுவரில் மாட்டியிருந்த ஸ்ரீராமர் பட்டாபிஷேகப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் தான் மறுபடியும் பேசினான்.
“இந்த வயசிலே ரங்கையர் உன் மன்னியையும் கொழந்தையையும் எப்படிக் காப்பாத்துவார்? நம்ம தெருவிலே ஒரு அமெரிக்கப் பொண்ணு, விதவையாய் துணையில்லாமே எப்படி இருப்பா?”
ஜமுனா பெருமூச்செறிந்தாள்.
“நீ வந்துதான் தீரணும் ஜம்னா... இப்படியே எத்தனை நாளைக்கு நீயும் இருக்க முடியும்?”
ஜமுனா அவன் மீது பார்வையை ஓட்டினாள். ராஜாமணி எதற்கு வந்திருக்கிறான்?
அவன் தலை குனிந்தவாறே தொடர்ந்தான்.
“இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்திலே... ஹூம்... உம்...பேச எனக்கு வருத்தமா இருக்கு. ஜம்னா... என்னை ஒனக்குப் புரியலியா?”
அவன் பார்வையம் அவள் பார்வையும் சந்தித்தன.
ராஜாமணியின் கண்களில் அவனது இளமை மிடுக்கும் துடிப்பும் இல்லை. எருது கட்டில் கொம்புகளைப் பிடித்து நிறுத்தி விட்ட காளை போல் ஒரு படிமானம். ஓட்டப் பந்தயத்தில் தோற்று விட்டுக் கடைசியாக ஓடி வருபவன் போல் ஓர் அவமானம்.
அவளது ஊடுருவும் பார்வையைத் தாங்கச் சக்தியற்றவன் போல் அவன் மீண்டும் குனிந்து கொண்டான். ஜமுனாவின் மனசில் ஒரு பரிதாபம் தலை தூக்கிற்று.
‘பாவம், ராஜாமணி! இப்படி ஒரு சந்தர்ப்பம் நேர்ந்ததற்கு உண்மையிலேயே வருந்துகிறான். என்ன பேதை மனசு! கை வழுக்கி விட்டதென்று இந்தக் கிளையை விட்டு அந்தக் கிளையைப் பிடித்துக் கொள்வேன் என்று நம்புகிறான். பிடித்துக் கொள் என்று விண்ணப்பிக்கிறான்.’
“வேற ஏதாவது விஷயம் இருந்தா பேசலாமே.”
விருட்டென்று அவன் பார்வை அவளைச் சந்தித்தது.
ஜமுனா அமைதியாக தீர்க்கமாக, நிலையூன்றி நின்ற பார்வையோடு ராஜாமணியைப் பார்த்தாள்.
“ஜம்னா... நீ என் ஜம்னாவா ஆக மாட்டியா...?”
“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்” அவள் மெதுவாக அந்த வார்த்தைகள் வெளிவந்ததன் நாசூக்குக் குறைவை உணர்த்துவது போலவும், திடமான தன் தீர்மானம் போலவும் கண்களை மூடிக் கொண்டு உதட்டின் வழியே ஓசையால் பேசினாள்.
“மன்னியையும் குழந்தையையும் ஒரு தடவை இங்கே அனுப்பி வைங்கோ. இவாளுக்கும் அவளைப் பார்க்க ரொம்ப ஆசையா இருக்குன்னு சொல்றா.”
“சரி!” அவன் விடைபெற்றுச் சென்ற பின் தான் எத்தனை பெரிய மனிதன் அவன் என்று அவளுக்கு உறைத்தது.
எவனோடோ ஓடிப்போக இருந்த ஒருத்தி என்று மட்டும் தான் அவன் தன்னை அறிவான். அதை அறிந்தும் தன்னை ஏற்றுக் கொள்ள முன் வந்தானே என்று நினைத்தாள் ஜமுனா.[தொடரும்]