Wednesday, 20 September 2017

ஜமுனா: 19

ஜமுனா: 19
ஜோலார்ப்பேட்டை ஜங்ஷனில் வெயிட்டிங் ரூமில் கதவுப் பக்கமாகப் போட்டிருந்த பெஞ்சில் ஜமுனா உட்கார்ந்திருந்தாள். வெளியே ஒரு ரயில் பிளாட்பாரத்தில் வந்து நின்றது. காபி, டீ விற்பவர்கள் குரல், “நேத்து மத்தியானமே தந்தி கொடுத்தேனே... கொழாய் எங்கே இருக்கு சார்... சாம்பார் சாதம்... சாம்பார் சாதம்... ஃபைவ் ட்வென்டித்ரீ எக்ஸ்பிரஸ்லே தான் வர்றா... நீங்க டிக்கெட் புக் பண்ணியிருக்கக் கூடாது, எத்தனை தடவை சொல்லியிருக்கேன் இங்கே சோறு விக்கக் கூடாதுன்னு...” யாரோ யாரையோ பளாரென்று அறையும் சத்தம், கும்மென்று மாம்பழ வாசனையும், அறை வாசலுக்கு வந்து ஒரு வீசு வீசி விட்டு நகர்ந்தது. குப்பென்று தோல் நாற்றம் அடித்தவாறு சிமெண்ட் தரையில் கடகடத்துக் கொண்டு ட்ராலி ஒன்று உருண்டது.
மழை பெய்திருந்ததால் காற்று குளிர்ந்து சிலுசிலுவென்று அடித்தது. முழங்கைகளிலும் காது மடல்களிலும் ஜில்லென்று காற்று உறைத்தது. போர்த்திக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. அவள் புடவையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள்.
ரயில் வந்தவுடனே தோன்றும் இரைச்சலும் பரபரப்பும் சிறுகச் சிறுக வற்றின. கொடுத்த மரியாதை போதும். ரயிலே புறப்படு என்ற மாதிரி அசட்டையான நிதானம் கூடத் தொடங்கி விட்டது.
வாழைப்பழமும் பத்திரிகையும் வாங்கிக் கொண்டு வருகிறேன் என்று போன மோகனை இன்னும் காணவில்லை. ஒருவேளை புறப்பட வேண்டியது இந்த ரயிலாக இருக்குமா? இவர் பாட்டுக்குப் பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து ரயிலைக் கோட்டை விட்டு விடப் போகிறார்!
ஒரு பர்தாப் பெண்மணி உள்ளே வந்தாள்.
கறுப்பு ஷிபானில் புர்க்கா போட்டு முழுக்க மூடிய முகத்தில் புள்ளி ஜன்னல் மாதிரி சுவாசிக்க மட்டும் துணி தைத்திருக்க விஷ்க்... விஷ்க் என்று ஷிபான் சப்திக்க அவள் அருகில் வந்து உட்கார்ந்தாள். செக்கச் சேவேரென்ற கைகளில் கல் வளையல்களும் மோதிரங்களும் ட்யூப் விளக்கில் டால் வீசின. குப்பென்று செண்ட் வாசனை அடித்தது.
செண்ட் வாசனை என்றால் ஜமுனாவுக்குப் பிடிக்காது. அவள் தள்ளி உட்கார்ந்தாள். காலுக்குக் கீழே மோகனின் பெட்டியும் அவள் பெட்டியும் ஒன்றில் மேல் ஒன்று அடுக்கியிருந்தவை காலை இடித்தன. அதைச் சற்று நகர்த்தி விட்டு உட்கார்ந்தாள்.
அவளுக்குப் பரபரப்போ திகிலோ சற்றும் இல்லை. போனவனை இன்னும் காணோமே என்ற கவலை மட்டும் இருந்தது.
அப்பாவிற்குப் பேரிடியாக இருக்கும் என்று நினைத்தாள். அரை நிஜார் சுந்தரம் வீட்டிலும் ஓடிப் போய் விட்டாள் என்று இளக்காரமாகப் பேசிக் கொள்வார்கள். கங்காபாய் மாமிக்கு மனசு ஆறவே ஆறாது. இப்படிப் பண்ணி விட்டாளே... என்னோட கோயிலுக்கு நவக்கிரகம் சுத்த வர்றப்பல்லாம் இப்படி ஒரு மோசம் பண்ணுவாள்னு எனக்குத் தோணவே இல்லியே என்று புழுங்குவாள். அண்ணா ராகவனுக்கு கடிதம் எழுதுவாரா... ஊஹும்... மாட்டார்... அவனே வரும் போது தெரிந்து கொள்ளட்டும் என்று விட்டு விடுவார்... வந்து தெரிந்து கொண்டானானால் மேஜையின் மீது முகத்தைக் கவிழ்த்துக் கொண்டு உட்கார்ந்து விடுவான்.
ராஜாமணிக்கு எப்படி இருக்கும்?
ராஜாமணியை நினைக்கும் போது ஜமுனாவிற்கு மனசு குழைந்தது.
கோயிலுக்கு அவளைச் சந்திக்கிற சாக்கில் அவன் வந்ததும், வீட்டுக்கு வந்த போது நறுக்குத் தெறித்தாற்போல் அவள் பேசிய வார்த்தைகளில் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு போனதும் ஜமுனாவிற்குப் பரிதாபமாக இருந்தன.
அவன் மீது தனக்கிருந்த பிரியத்தை ராஜாமணி என்னவோவாகக் கற்பனை செய்து கொண்டது அவளுக்கு வருத்தம் தந்தது. எல்லோரும் தன்னைப் பார்த்ததும் ஏன் இப்படி ஒரு மயக்கம் வந்து பிதற்ற ஆரம்பித்து விடுகிறார்கள் என்று நினைத்தாள் ஜமுனா.
அழகு... அது எங்கே இருக்கிறது? தோல் நிறத்திலா? அங்க அமைப்பிலா? எதற்கு இந்தப் பைத்திய இளிப்புகள் அர்ச்சனை புரிகின்றன?
ஓடிப் போய்க் கொண்டிருக்கிறவள் என்ன யோசனையெல்லாம் பண்ணிக் கொண்டிருக்கிறோம்? ஓடிப் போகிறவள், அந்தப் பட்டத்தை நினைத்து ஜமுனா மனசுக்குள் ஒரு புன்னகை பூத்துக் கொண்டாள். எதிலிருந்து ஓடுகிறோம்? எங்கே? எதற்கு...? எதைத் தேடி ஓடுகிறோம்? என்று நிதானமாக அவள் கேட்டுப் பார்த்துக் கொண்டாள்.
உளுந்தும் அரிசியும் ஒன்றாகக் கலந்து விட்ட முறத்தில் நிதானமாகத் தெளிவோடு அதைப் பிரித்தெடுப்பது போல் அவளுக்கு ஒரு நிச்சயம் ஏற்பட்டிருந்தது.
மோகனின் அழகில் அவள் மயங்கி விடவில்லை. அவனது நடத்தையில் தாறுமாறாக எத்தனை கோளாறுகள் உண்டு என்பதும் அவளுக்குத் தெரிந்தது தான். குடும்பம், அப்பா, அண்ணா, சமூகம், அந்தஸ்து என்பது ஐந்து மைலுக்கு அப்புறம், அக்கரையில் தான் பிரிந்து வந்த வாழ்க்கையை அவள் ஒரு நிமிஷம் நினைத்தாள். பெருமூச்சு வந்தது. அதில் வருத்தமில்லை. தன்னிரக்கமும் இழிவுணர்ச்சியும் இல்லை. ஒரு துறவு தொனித்தது.
அந்த அக்கரையில் ஒரு நாள் கேட்ட ஓர் அநாதையின் மன ஓலம் மட்டும் அவள் மனசில் கத்திக் குத்து போல் தைத்திருந்தது. அவன் மோகன், அவன் பொய் சொன்னான். பித்தலாட்டம் செய்தான். எத்திப் பிழைத்தான். அந்தப் பெண்களையும் இந்தப் பெண்களையும் இணைத்து அவன் மீது ஏதேதோ கதைகள் சொன்னார்கள்.
அவன் கண்களில், அவன் வார்த்தைகளில் நடத்தையில் அதற்கெல்லாம் வருந்தி இழிவுற்று அவன் தன்னோடு தானே போட்டுக் கொள்ளும் சண்டை தென்பட்டது. ஒரு புகலிடம் தேடியவாறு காடெல்லாம் வேட்டையாடப்பட்ட விலங்கு போல் அவன் தவித்துத் திரியும் தோற்றம் புலப்பட்டது.
குடும்பம் என்ற பாதுகாப்பான கூடுகளில் எல்லோரும் அடங்கி உட்கார்ந்து கொண்டு, காற்றில் உதிர்ந்த இலை போல் மழையில் நனைந்த கரிச்சான் குருவி போல் அலையும் அவனைப் புறக்கணித்தார்கள். அவனை வேட்டையாடி வீழ்த்திவிட எண்ணினார்கள்.
அவனை அரவணைத்துக் கொள்ள, அதுவும் ஒரு மனித ஆத்மா என்று அந்தஸ்து அளித்து ஏற்றுக் கொள்ள ஒருவர் இருந்திருந்தால்...?
ஜமுனாவுக்கு ஆனந்தலட்சுமியின் ஞாபகம் வந்தது பிரியத்தையும் ஆசையையும் கூட சுலபமாகத் தூக்கி எறிகிற தர்மங்கள் கூட அவ்வப்போதே குரல் கொடுப்பது புரிந்தது.
இதே மோகனின் உள்ளத்திற்குள் குழம்பிக் கொண்டிருக்கிற ஒரு மனிதனை, ஓர் உத்தம மனிதனை மீட்டுக் கொண்டு வந்து அவனை மேன்மையாக்கி விட்டு அதே திருப்பத்தூருக்குப் போகும் போது அவர்கள் புரிந்து கொள்வார்கள். யாருக்குப் புரிகிறதோ இல்லையோ அப்பா புரிந்து கொள்வார்.
ஜமுனா ட்யூப் விளக்கைச் சுற்றிப் பறந்த விட்டில் பூச்சிகளைக் கண்கொட்டாமல் பார்த்தவாறே யோசித்துக் கொண்டிருந்தாள்:
பெண் உருவாக்குபவள், சிவாஜிகளையும் காந்திஜிகளையும் மட்டுமல்ல. அவள், நெப்போலியன்களையும் லிங்கன்களையும் உருவாக்குகிறாள். மோகன்களையும் கூட அவள் உருவாக்குவாள். நிந்தை, திரஸ்காரம், பந்தம் என்ற எல்லாச் சுழல்களையும் அவளது கருணை என்னும் ஸ்பரிசவேதி கடக்கின்றது.
அவள் தாய், அவன் தெய்வம், அவள் வெறும் இல்லாள் அல்ல. பேதைகளின் பலவீனம் என்ற படுக்கையில் புரளும் போக வஸ்துவல்ல. அவள் சத்தியபாமா. அவள் ஜகதாம்பிகை.
விட்டில்கள் விளக்குப் பழத்தில் ணிக் ணிக் என்ற மோதி விழுந்து கொண்டிருந்தன.
வெளியே மரியாதை குறைந்து போன ரயிலின் புறப்பாட்டுக்காக மணி அடித்தது.
முதல் தடவையாக ஜமுனாவிற்குச் சந்தேகம் வந்தது.
‘யாராவது ஊர்க்காரர்கள் பார்த்துப் பிடித்துக் கொண்டிருப்பார்களோ?’
அந்த எண்ணம் வந்ததும் அவள் பக்கத்திலிருந்த முஸ்லிம் பெண்ணைப் பார்த்து, “இந்தப் பெட்டியைக் கொஞ்சம் பார்த்துக்குங்க” என்றாள்.
அந்த முஸ்லிம் பெண் ஷிபான் சப்திக்கத் தலையாட்டினாள்.
வெளியே ரயில் புறப்பட்டுக் கொண்டிருந்தது. மெதுவாக சிறுநடையில் நகர்ந்தது. ஜமுனாவின் பார்வையில் தூரத்தில் நகர்ந்து வரும் ஒரு கம்பார்ட்மெண்டிற்குள் விலங்கு பூட்டியிருந்த கைகளோடு, ஸ்டேஷன் கோடி வரை அலசும் பார்வையோடு தடுமாறும் மோகன் தெரிந்தான். இரண்டு கான்ஸ்டபிள்கள் துப்பாக்கி ஏந்திய கையோடு அவனை நெட்டி அந்த கம்பார்ட்மெண்டினுள் தள்ளிக் கொண்டிருந்தார்கள்.
ஜமுனாவின் முகத்தைப் பார்த்ததும் அவன் கத்தினான்:
“ஜம்னா... ஜம்னா... என்னை அரஸ்ட் பண்ணிட்டாங்க, மெட்ராஸ் போலீஸ்.”
அதற்குள் மோகனைப் பிடித்து அவர்கள் உள்ளே தள்ளி விட்டார்கள்.
ரயிலின் சிறு நடை துரிதமாயிற்று. ஜன்னலோரத்து முகங்கள் வெள்ளமாகக் கடந்தன. தண்டவாளங்கள், சக்கரங்களும் அவற்றின் மேல் அழுத்தும் பாரங்களும் பொறுக்காமல் ஓலமிட்டன. என்ஜின் ஹூங்காரமிட்டது. பிளாட்பாரத்தில் கடைசியாக ஓடி வருகிற பூட்ஸ்களும் செருப்புகளும் சிமிட்டித் தரையில் மடார்... மடார் என்று அறைந்து கொண்டு ஓடின.
ஜன்னலுக்கு வெளியே தலைநீட்டி “ஜம்னா” என்று அவன் கத்தினான். அந்தக் குரல் தூரத்தில் மங்கலாகக் கேட்டாலும் அவன் பரிதவிப்பும் அநாதையும் அதில் தெரிந்தன. வாக்கைக் காப்பாற்ற முடியாத தவிப்பும் அவளுக்கு அதில் புலப்பட்டது.
‘என்ன நேர்ந்தது... என்ன நேர்ந்தது?”
அந்தக் கேள்வி எழும்போது, பிளாட்பாரத்தில் நின்ற ஜமுனாவின் கண்கள் இருளத் தொடங்கின. திடீரென்று விரிவடைந்த பேரிருளில் ஜங்ஷனின் ஆரவாரமும், வெளிச்சமும் மூழ்கி விட்டன. அவள் மயங்கி விழுந்தாள்.
*** ***
ஜமுனாவின் முகத்தில் சில்லென்று மழைச்சாரல் அடித்தது போலிருந்தது. அவன் முகத்தைச் சுளித்தாள்.
“அவனை மெட்ராஸ் போலீஸ் ஏதோ டப்ளிங் கேசுக்காக ரொம்ப நாளாத் தேடிட்டு இருந்ததாம். இன்னிக்கு வசமாக கெடைச்சுட்டான்.”
“ஜம்னா...”
“ஜம்னா...”
இரண்டு மூன்று குரல்கள்.
இருள் சிறுகச் சிறுக வெளி வாங்கிற்று. ணிக் ணிக் கென்று ட்யூப் விளக்குகள் பழுத்திருப்பதைத் தேடும் விட்டில்கள்.
அவள் கண் விழித்தாள். சுற்றிலும் பார்த்தாள். ஆனந்தராவ் குனிந்து அவளையே கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவளுக்குத் திக்கென்றது. திரும்பினாள். சுப்பண்ணா. பக்கத்தில் ராஜாமணி.
அவள் விருட்டென்று எழுந்து உட்கார்ந்தாள்.
“மெள்ள மெள்ள” என்று ஆனந்தராவ் மெதுவான குரலில் சொன்னார்.
‘ஓ... இவர்கள் தேடிக்கொண்டு வந்து விட்டார்கள். எப்படி... எங்கே? ஜமுனாவிற்கு கிழித்தெறிந்து விடு என்று மோகன் எழுதிய கடிதம்தான் சட்டென்று ஞாபகம் வந்தது. அது அந்தப் புத்தகத்தில்... கீழே தரையில்... அதைக் கிழிக்கவில்லையே!’
அவளுக்கு எல்லாம் விளங்கிவிட்டது.
“என்ன சார். முழிச்சிட்டாங்களா?” என்று ஒரு போலீஸ் பூட்ஸ் கனத்த லாடங்களோடும் தோல் முறுக்கோடும் கேட்டுக் கொண்டே வந்து நின்றது.
ஜமுனா சுற்றிலும் பார்த்தாள். ஒரு சிறு கூட்டம்.
“ஓ...அவள் மானம் சந்திக்கு வந்து, சிரிப்புக்களாய் விட்டதா?”
அவள் உதட்டைக் கடித்துக் கொண்டு எழுந்து நின்றாள்.
“என்னம்மா.. ஏதாவது கம்ப்ளெயிண்ட் கொடுக்கறீங்களா?”
“ஒண்ணுமில்லே...”
“போகலாமா?” என்று கேட்டான் ராஜாமணி.
ஜமுனா அவனை நிமிர்ந்து பார்த்தாள். ராஜாமணியின் கண்கள் தாழ்ந்தன.
“இந்தப் பெட்டி உன்னோடது தானே?”
பெரிய பெட்டி கீழே இருந்தது. மோகனின் பெடடி. ஜமுனா தன் பெட்டியை மட்டும் எடுத்துக் கொண்டாள். சுப்பண்ணா அதை வாங்கிக் கொள்ளக் கையை நீட்டினார். கொடுத்து விட்டாள். நால்வரும் நடந்தனர்.
பிளாட்பாரத்தில் நடக்கும்போது கால்கள் தள்ளாடின. உடம்பெல்லாம் வலித்தது. குப்பென்று ப்ளூ ஜுரம் வந்து விட்டாற்போல ஒரு பலவீனம். பின்னால் வந்த கூட்டம் ஒவ்வொன்றாக நின்றுவிட்டது. கண்கள்... பார்வைகள்... கண்கள்... பார்வைகள்... போலீஸின் கூட நடக்கும் கைதியைப் பார்ப்பது போல், பிளாட்பாரம் எல்லாம் துளைக்கும் பார்வைகள்.
அவர்கள் படியேறினார்கள். புக்கிங் ஆபீஸ் தாண்டி மேம்பாலத்தின் மீது கந்தையும் அழுக்கும் தாடியும் கம்பளியுமாக முடங்கி இருந்த மனித உருவங்களின் நடுவில் நடந்து வந்தார்கள்.
மேம்பாலத்தின் மீதிருந்தே ஹோட்டல் தெருவின் விளக்குகள் தெரிந்தன.
“திருப்பத்தூருக்கா... சார்... உட்காருங்க!” என்று டாக்ஸிக்காரர்கள் போட்டியிடுவது கீழே இருந்து கேட்டது. ஜமுனா நின்றாள்.
“எங்கே போகிறோம்?” கேட்டாள்.
“வேறே எங்கே... வீட்டுக்குத்தான்...” சுப்பண்ணாவின் குரல் நைந்து ஒலித்தது.
“நான் வரலே.”
“இது ஒரு கெட்ட கனா... மறந்துட்டு தைரியமா நடம்மா. நீ புத்திசாலி. ஒனக்குச் சொல்ல வேண்டாம்.” ஆனந்தராவ் குரல் தழுதழுத்தது.
“நான் வரலே.”
“ஜம்னா” - ராஜாமணி குறுக்கிட்டேன்.
“நான் வீட்டுக்கு வரலே.”
“எங்க போகலாம் சொல்லு...? எங்க வீட்டுக்குப் போவோம்.”
“நான் திருப்பத்தூருக்கே வரலே.”
“ஜம்னா... ரங்கண்ணா...” என்று பதறியவாறே ஆரம்பித்தான் ராஜாமணி.
“உஷ்ஷ்...” என்று அதட்டினார் ஆனந்தராவ்.
அவள் ஆனந்தராவையும் ராஜாமணியையும் மாறி மாறிப் பார்த்தாள்.
“ரங்கண்ணா நடைப்பிணம் மாதிரி மாறிட்டாரும்மா வீட்டுக்குப் போவோண்டா ராஜா..” சுப்பண்ணா, பத்து வருஷங்களுக்கு முன்னால் ஜமுனாவை ஓர் ஆண் பிள்ளையை அழைப்பது போல் வாடா ராஜா என்று செல்லம் கொஞ்சி கூப்பிடும் சுப்பண்ணா.
“நான் வரலே... திருப்பத்தூருக்கே வரல்லே. என்னைத் தொந்தரவு பண்ணினா இப்படியே இந்தப் பாலத்து மேலேயிருந்து விழுந்து உசுரை மாய்ச்சுக்குவேன்.”
அவள் குரல் வெறி பிடித்தது போல் கிறீச்சிட்டது. அவள் செய்வாள் என்ற நிச்சயத்தோடு அந்தக் கண்கள் நிலைத்து வெறித்திருந்தன. ஆனந்தராவுக்கு ஏதோ புரிந்தது.
“ம்... சரி.. வாணியம்பாடிக்குப் போவோமா?”
அவள் மௌனமாய் இருந்தாள்.
“நியூ டவுன்லே எங்க சொந்தக்காரர் வீடு ஒண்ணு இருக்கு. ரொம்ப நல்ல குடும்பம். அவர் ஒரு நர்ஸரி ஸ்கூல் நடத்திண்டிருக்கார். நல்ல ஆத்மா, அங்கே போவோமே!”
ஜமுனா மௌனமாக இருந்தாள்.
படியிறங்கி அவர்கள் டாக்ஸியில் ஏறினார்கள்.
“திருப்பத்தூர் தானே சாமி...?” டிரைவர் தெரிந்தவன்
“இல்லேப்பா, வாணியம்பாடிக்கு... ஸ்பெஷல். வேற யாரையும் ஏத்தக் கூடாது.”
“சரி, சாமி.”
டாக்ஸி டிரைவர் கதவுகளை அடித்துச் சாத்தினான்.[தொடரும்]

No comments:

Post a Comment